'காலு மேல கால போடு ராவண குலமே' - 'ப்ளூ ஸ்டார்' படவிழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன் பேச்சு
'ப்ளூ ஸ்டார்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
சென்னை,
இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ப்ளூ ஸ்டார்'. இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார். இந்த படம் வருகிற 25ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பா. ரஞ்சித், அசோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் எனப் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகை கீர்த்தி பாண்டியன், 'பா. ரஞ்சித் அண்ணாவின் பெயர் இடம் பெற்றாலே, அரசியல் பற்றி பேச ஆரம்பித்து விட்டீர்களா..? என்று கேட்கின்றனர்.
அரசியல் பேசினால் என்ன தவறு. நாம் அணிந்து இருக்கும் துணியில் இருந்து குடிக்கும் தண்ணீர் வரை அனைத்திலும் அரசியல் உள்ளது. அதை பற்றி பேசவில்லை என்றால் அது இல்லை என்று அர்த்தம் இல்லை. அதை நீங்கள் பேச தவிர்க்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த படத்திலும் அரசியல் இருக்கிறது. ரஞ்சித் அண்ணா தயாரிக்கும், இயக்கும் படங்களில் அவர் சொல்லுகிற விஷயம் ரொம்ப முக்கியம்.
அந்த விதத்தில் என்னுடைய குரலை இந்த படத்தில் பயன்படுத்துவதை பெருமையாக நினைக்கிறேன். இன்றைக்கு இந்த நாளில், இந்த விழா நடப்பது மிகவும் முக்கியமானது. தெருக்குரல் அறிவு வரிகளில் இந்த படத்தில் 'அரக்கோணம் ஸ்டைல்...' பாடலில் வரும் வரிகளை கூற நினைக்கிறேன், 'காலு மேல கால போடு ராவண குலமே, மேல ஏறும் காலமாச்சு ஏறியாகணுமே' என்று தெரிவித்தார்.