நடிகர் விஷால் ரூ.15 கோடி செலுத்த வேண்டும் - தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு

ரூ.15 கோடி செலுத்த வேண்டும் என்று தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நடிகர் விஷால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 21.29 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்த கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு திருப்பி செலுத்தியது. இது தொடர்பாக விஷாலுக்கும் லைகா நிறுவனத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் கடன் தொகை முழுவதையும் திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனம் தயாரிக்க கூடிய அனைத்து படங்களுடைய உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடனை திருப்பி செலுத்தாமல் உத்தரவாதத்தை மீறி 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் லைகா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி 15 கோடி ரூபாயை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்யவும் சொத்து விவரங்களை தாக்கல் செய்யும்படியும் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், 15 கோடி ரூபாயை கோர்ட்டில் விஷால் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளனர்.
மேலும் அந்த உத்தரவு தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதியிடம் உள்ள உரிமையியல் வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிக்கக்கூடிய படங்களை திரையரங்குகள் அல்லது ஓடிடிதளங்களில் வெளியிடக்கூடாது என்று தடை விதித்து விஷாலின் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.






