வீட்டில் கிளிகளை வளர்த்த விவகாரம் - நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்


வீட்டில் கிளிகளை வளர்த்த விவகாரம் - நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 20 Feb 2023 3:13 PM IST (Updated: 20 Feb 2023 5:07 PM IST)
t-max-icont-min-icon

உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்த நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை வளசரவாக்கம், லட்சுமி நகர், 11-வது தெருவில் வசித்து வருபவர் காமெடி நடிகர் ரோபோ சங்கர். தனியார் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான இவர், பின்னர் சினிமா படங்களில் நடிக்க தொடங்கினார். அஜித்குமாரின் 'விஸ்வாசம்', தனுசின் 'மாரி' உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் காமெடியனாக நடித்துள்ளார்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீடு குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தனது வீட்டில் 2 கிளிகள் வளர்ப்பது குறித்து கூறி இருந்தார். இதுபற்றி யாரோ வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டுக்கு சென்றனர்.

அவரது வீட்டில் வளர்த்து வந்த 2 அலெக்சாண்டரியன் பச்சை கிளிகளையும் கூண்டோடு வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2 கிளிகளும் கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக விசாரணை நடப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்ததன் காரணமாக நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறை சார்பில் ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story