நடிகர் கங்கா மாரடைப்பால் திடீர் மரணம்
தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் கங்கா.
சென்னை,
நடிகர் கங்கா, தமிழில் கடந்த 1983-ஆம் ஆண்டு பன்முக கலைஞராக அறியப்படும் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற 'உயிருள்ள வரை உஷா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். மேலும் பி.மாதவனின், இயக்கி - தயாரித்த 'கரையைத் தொடாத அலைகள்', விசுவின் இயக்கத்தில் 1986-ஆம் ஆண்டு வெளியான 'மீண்டும் சாவித்திரி', போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் கங்கா.
பல படங்களில் இரண்டாவது ஹீரோ போன்ற வேடத்தை ஏற்று நடித்து, மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள இவர்.சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த இவர், தன்னுடைய சகோதரர் குடும்பத்துடன் தான் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவருக்கு திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என்பதை அவரது குடும்பத்தினர் உறுதிசெய்துள்ளனர். இவரின் வயது 63.
இவரின் இழப்பு தற்போது திரையுலகை சேர்ந்த பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் இவரின் இறுதி சடங்குகள், அவரது சொந்த ஊரான சிதம்பரத்தில் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.