70-வது தேசிய திரைப்பட விழா - பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு விருது வழங்கினார் ஜனாதிபதி
70வது தேசிய திரைப்பட விழாவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான விருதை படத்தின் தயாரிப்பாளரான சுபாஸ்கரன், இயக்குனர் மணி ரத்னம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர் .
புது டெல்லி,
ஆண்டுதோறும் இந்திய திரைப்படங்களையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக இந்திய திரை படைப்புகளுக்கு இந்திய அரசால் தேசிய விருது வழங்கப்படுகிறது. இதற்கு ஒவ்வொரு ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு இதனை தேர்ந்தெடுக்கிறது. 70வது தேசிய திரைப்பட விருது கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது.
2022-ம் ஆண்டின் சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் 70-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய விருது வென்ற திரைப்பட கலைஞர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இதில் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மட்டும் சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவு (ரவிவர்மன்), சிறந்த பின்னணி இசை (ஏ.ஆர்.ரகுமான்), சிறந்த ஒலிப்பதிவு (ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி) ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் பாகம் 1 வென்றுள்ளது. இதற்கான விருதை குடியரசு தலைவரான திரவுபதி முர்மு வழங்க அதனை படத்தின் தயாரிப்பாளரான சுபாஸ்கரன், இயக்குனர் மணி ரத்னம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர் .
பொன்னியின் செல்வன் 1 படத்தை சுபாஷ்கரனின் லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் மணிரத்னம் விருது வாங்கும் போது குஷ்பு எழுந்து நின்று கைதட்டினார். மணிரத்னம் தற்போது வாங்கியுள்ள விருதையும் சேர்த்து இதுவரை 7 தேசிய விருது வாங்கியுள்ளார். அதே போல் ஏ.ஆர் ரகுமானும் 7 தேசிய விருதை பெற்றுள்ளார்.