சொகுசு காரை இறக்குமதி செய்த ஹாரீஸ் ஜெயராஜ்: வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பிய தமிழக அரசு...!
இறக்குமதி செய்த சொகுசு காருக்கு வரி செலுத்தக் கோரி தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து ஹாரீஸ் ஜெயராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை,
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசுக் காரை இறக்குமதி செய்ததற்காக நுழைவு வரியை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தது பெரும் விவாதப் பொருளானது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி, நடிகர் விஜய் மீது தெரிவித்த விமர்சனங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஐகோர்ட்டின் விமர்சனங்களை திரும்பப்பெறக்கோரி விஜய் தரப்பு மனுத்தாக்கலும் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் 2010-ம் ஆண்டு மசராட்டி (Maserati Granturismo S Coupe) எனும் இத்தாலி சொகுசு காரை இறக்குமதி செய்தார். அதை தமிழகத்தில் இயக்குவதற்கு ஏதுவாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்த போது இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி செலுத்தவில்லை என்று அந்த வாகனத்தை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகம் மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நுழைவு வரி செலுத்தக் கோரி கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நுழைவு வரியும் அபராதமும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் ரூ.11,50,952 நுழைவு வரி செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஹாரிஸ் ஜெயராஜ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் 2012-ம் ஆண்டு இந்த காரை விற்று விட்டதாகவும் அதற்கு ஏற்கனவே நுழைவு வழியாக ரூ.11,50,000 செலுத்தப்பட்டு விட்டதாகவும் அந்த மனுவில் தெரிவித்து இருக்கிறார்.
நுழைவு வரி தொடர்பான வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி சில வழக்குகளில் நுழைவு வரியை மட்டும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் அபராதத்துடன் செலுத்த வேண்டும் என்று தனக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.