அயோத்தி ராமர் கோவிலில் ஆரத்தி, தரிசனத்திற்கான நேர அட்டவணை வெளியீடு


அயோத்தி ராமர் கோவிலில் ஆரத்தி, தரிசனத்திற்கான நேர அட்டவணை வெளியீடு
x

Image Courtesy : ANI

பக்தர்களின் வசதிக்காக அயோத்தி ராமர் கோவிலில் ஆரத்தி, தரிசனத்திற்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அயோத்தி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரதிஷ்டை விழா கடந்த 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது. பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார். இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து 23-ந்தேதி முதல் அயோத்தி ராமர் கோவிலில் பொது தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலில் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவிலில் ஆரத்தி, தரிசனத்திற்கான நேர அட்டவணையை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி காலை 4.30 மணிக்கு ஸ்ரீநகர் ஆரத்தியும், 6.30 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து காலை 7 மணி முதல் பக்தர்களுக்கான தரிசன நேரம் தொடங்கும் என விஷ்வ இந்து பரிஷத் செய்தி தொடர்பாளர் சரத் சர்மா தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து நண்பகலில் போக் ஆரத்தியும், மாலை 7.30 மணிக்கு மாலை நேர ஆரத்தியும், 8 மணிக்கு 2-வது போக் ஆரத்தியும் நடைபெறும். அதன் பின்னர் இரவு 10 மணிக்கு நடைபெறும் ஷயான் ஆரத்தியுடன் தினசரி பூஜைகள் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story