மலைவாழ் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றிய இளைஞர்..!


மலைவாழ் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றிய இளைஞர்..!
x
தினத்தந்தி 2 Sept 2023 10:00 AM IST (Updated: 2 Sept 2023 11:57 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவை சேர்ந்த தமிழ் இளைஞர் விஷால், ஐ.ஐ.டி.யில் படித்துவிட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருந்தார்.

மலைவாழ் மக்களின் ஏழ்மையைப் பார்த்த விஷால் வேலையை உதறிவிட்டு 35 ஆயிரம் மலைவாழ் மக்களின் வாழ்க்கையைக் கண் இமை போல் பாதுகாத்து வருகிறார்.

வசதி இல்லாத குடும்பப் பின்னணி என்பதால், அவரது பொருளாதார சூழல் சரியாக இல்லை. இருந்தாலும், அவர் எடுத்துக்கொண்ட பொறுப்பு கடினமாகவே இருந்தது. எனினும், தன் முயற்சியிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. கஷ்டப்பட்டு கொண்டிருந்த மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பும், அவர்களது குழந்தைகளுக்கு கல்வியும் அளித்து புயல் வீசிக் கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் தென்றலை தவழ விட்டுள்ளார்.

தமிழகத்தின், வந்தவாசி பகுதியில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் விஷால். இவரது தந்தை விவசாயி. விவசாயத்தைத் தவிர அவர்கள் குடும்பத்துக்கு வேறு வருவாய் கிடையாது. அதனால் விஷாலும் பொருளாதார பிரச்சினையை எதிர்கொண்டவர்தான். ஐ.ஐ.டி.யில் படிக்க வேண்டும் என்ற அவரது கனவு இரண்டு தோல்விகளுக்குப் பிறகே நிறைவேறியது.

"ஐ.ஐ.டி.யில் இளங்கலை படிப்பில் சேர முடியவில்லை. எனவே, ஐ.ஐ.டி.யில் முதுகலைப் படிப்பைப் படிப்பது என முடிவு செய்தேன். அதன்படி விவசாய பொறியியல் படிப்பைப் படித்தேன். முதுகலைப் படிப்புக்கு முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று, காரக்பூர் ஐ.ஐ.டி.யில் சேர்ந்தேன். விவசாய பொறியியல் படித்திருந்ததாலும், என் குடும்பம் விவசாயப் பின்னணி கொண்டதாக இருந்ததாலும் உணவு பதப்படுத்துதல் குறித்த முதுகலைப் படிப்பை ஐ.ஐ.டி.யில் தேர்வு செய்தேன்.

படிக்கும்போதே விவசாயத்தின் சாதகம் மற்றும் வர்த்தக பலன்கள் குறித்து தெரிந்துகொண்டேன். உற்பத்தி என்பது விவசாயிகளுக்குப் பெரிய விஷயம் இல்லை என்பதை உணர்ந்தேன். உணவு பதப்படுத்துதல் குறித்து விவசாயிகள் தெரிந்து கொண்டால் அவர்களுக்கு வருவாய் பற்றாக்குறை இருக்காது என்பதைப் புரிந்துகொண்டேன்.

காரக்பூரில் படித்தபோது, அருகில் இருக்கும் மலைவாழ் கிராமங்களுக்கு அடிக்கடி சென்று வந்தேன். அவர்கள் வாழ்வதற்குப்படும் கஷ்டத்தை நினைத்து வருந்தினேன். தமிழக விவசாயிகளை விட, இவர்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது.

2013-ம் ஆண்டு படிப்பை முடித்ததும், வேலைக்குச் செல்வதை கை விட்டுவிட்டு மலைவாழ் மக்களுக்காகப் பணியாற்ற முடிவு செய்தேன். எனினும், பொருளாதார சூழல் மற்றும் குடும்பத்தாரின் அழுத்தம் காரணமாக தமிழகம் திரும்பி வந்து பணிக்கு சேர்ந்தேன். பணி செய்து கொண்டே ஓய்வு நாட்களில், காரக்பூர் விவசாயிகளை சந்தித்துக் கொண்டிருந்தேன். இதற்கிடையே, கடந்த 2014-ம் ஆண்டு ஒடிசாவில் உள்ள கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியர் பணி கிடைத்தது. கல்லூரி முடிந்ததும் நேராக மலைவாழ் கிராமங்களுக்கு வந்து அவர்களுக்கு விவசாயப் பயிற்சி அளிக்க முடியும் என்பதால், பெற்றோர் சம்மதத்துடன், ஒடிசா கிளம்பினேன்'' என்றவர், மலைவாழ் கிராமங்களை ஸ்மார்ட் கிராமங்களாக முன்னேற செய்த சுவாரசியத்தை விளக்குகிறார்.

''கல்லூரி சார்பாக என்.எஸ்.டி.சி. திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றேன். இதன் மூலம் சில பின்தங்கிய கிராமங்களை ஸ்மார்ட் கிராமங்களாக மாற்றினேன். இந்த வாய்ப்புதான் என் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. கல்லூரியை விட, மலைவாழ் மக்களின் கிராமத்தில் அதிக நேரம் செலவிட்டேன்.

முதலில் மலைவாழ் கிராமத்தினரின் பிரச்சினையைப் புரிந்துகொண்டேன். குளங்களைத் தூர்வாரினோம். சோலார் நிறுவப்பட்டது. மாட்டுச் சாண எரிவாயு பிரிவு தொடங்கப்பட்டது. ஒருங்கிணைந்த விவசாயத்தைத் தொடங்கினோம்.

ஒவ்வொரு மலைவாழ் மக்களையும், ஏழை விவசாய குடும்பங்களையும் சந்தித்துப் பேசினோம். அவர்கள் பயிர் மற்றும் விதைகளைக் கொடுத்தனர். இது மட்டுமல்ல, விவசாயிகளை சந்தைப்படுத்துதலுக்கும் ஊக்குவித்தோம். இதன் மூலம், மலைவாழ் மக்களுக்கு இரண்டு வேளை உணவு கிடைத்தது. நிலையான வருவாயும் கிடைக்கத் தொடங்கியது.

அதன்பிறகு, விவசாயத்தோடு நின்று விடாமல், அவர்களது வருவாயை மேலும் பெருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதேநேரம் மற்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் தங்கள் வருவாயைப் பெருக்க என் உதவியை நாடினர்.

கடந்த 2016-ம் ஆண்டு கல்லூரி பணியை விட்டுவிட்டு விவசாயிகளுடன் முழுமையாக இணைந்தேன். இதன்பிறகு, என் இரு நண்பர்களுடன் சேர்ந்து விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒருங்கிணைந்த விவசாயத்தை செய்ய உற்சாகப்படுத்தினோம்.

வீடுகளுக்கு முன்பு அல்லது பின்பு இருக்கும் இடங்களிலேயே அவர்களை விவசாயம் செய்ய வைத்தோம். விவசாயத்துக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏதும் ஏற்படவில்லை. வீடுகளின் சமையலறையில் இருந்து வெளியேறும் தண்ணீரையே விவசாயத்துக்குப் பயன்படுத்தச் செய்தோம். இதன்மூலம் சில மாதங்களிலேயே பலவகை காய்கறிகள் விளைந்தன'' என்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் விஷால், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, கூடுதலாக 10 கிராமங்களை ஸ்மார்ட் கிராமங்களாக மாற்றினார்.

''மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, இதுவரை 10 கிராமங்களை சுயச்சார்புடைய கிராமங்களாக மாற்றியிருக்கிறேன். அதன்பிறகு, கோல் இந்தியா நிறுவனத்தின் திட்டமும் எங்களுக்கு கிடைத்தது. அதன்மூலம் 2 ஆயிரம் விவசாயிகளை வணிக ரீதியான விவசாயத்துக்கு மாற்றினோம். இப்போது எங்களுடன் 35 ஆயிரம் விவசாயிகள் இணைந்துள்ளனர். ஒடிசாவில் 6 மாவட்டங்களில் பண்ணைகளும், பயிற்சி மையங்களும் நடத்தி வருகிறோம். நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விவசாயம் குறித்து கற்பித்து வருகிறோம். இதுவரை 200 மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம்.

என்னுடன் 33 பேர் பணியாற்றுகின்றனர். இதுதவிர, 400 தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர்.

மலைவாழ் மக்களுக்காகப் பணியாற்றுவது அவ்வளவு எளிதானதல்ல. ஆரம்பத்தில் அவர்களை என் வழிக்குக்கொண்டு வருவது கடினமாக இருந்தது. எந்த ஒன்றையும் அவர்களுக்குப் புரிய வைப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை. அதோடு அவர்கள் நம்பிக்கையைப் பெறுவது பெரும் சவாலாக இருந்தது. எனவே, அவர்கள் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதை முதல் ஆயுதமாகக் கையில் எடுத்தேன். இந்த யோசனை நல்ல பலனைத் தந்தது. படிப்படியாக மலைவாழ் மக்களுடன் இரண்டறக் கலந்து, அவர்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்தேன். என்னுடைய முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது'' என்று மகிழும் விஷால், மத்திய அரசிடமிருந்து பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.


Next Story