'ஆரக்கிள்' என்ற சாம்ராஜ்ஜியத்தின் கதை..!
ஏழையாக பிறந்த இவர், தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொண்டு, இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் முக்கிய இடங்களை பிடிக்க போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்.
இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலம் அது. நியூயார்க் நகரம் பெரும் பதற்றத்தில் இருந்தது. அங்கே 1944-ம் வருடம் ஆகஸ்டு 17-ந் தேதி அன்று திருமணமாகாத ஒரு யூத தாய்க்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தந்தை ராணுவத்தில் ஒரு பைலட். லாரன்ஸ் ஜோசப் எல்லிசன் என்று அக்குழந்தைக்குப் பெயர் சூட்டி மகிழ்கிறார் அந்தத் தாய்.
ஆனால், போர்ச்சூழலால் குடும்பம் வறுமையில் சுழல்கிறது. ஒன்பது மாதக் குழந்தையாக இருந்தபோது லாரன்ஸிற்கு நிமோனியா காய்ச்சல். அவர் உயிர் பிழைப்பதே பெரும்பாடாகி விட்டது. குழந்தையை வளர்க்க முடியாமல் அத்தை-மாமாவிடம் தத்துக்கொடுத்து விடுகிறார் அந்த யூத தாய். அதற்குப் பிறகு 48-வது வயதில் தான் அம்மாவைச் சந்திக்கிறார் லாரன்ஸ்.
தத்து கொடுக்கப்பட்ட பிறகு லாரன்ஸ் சிகாகோவிற்குப் போகிறார். நடுத்தரக் குடும்பங்கள் வாழும் பகுதியில் அவரின் குழந்தைப் பருவம் கழிகிறது. வளர்ப்புத் தாய் அவரிடம் மென்மையாக அன்புடன் நடந்துகொள்கிறார். ஆனால், வளர்ப்புத் தந்தை அந்தளவுக்கு லாரன்ஸிடம் நெருக்கம் காட்டுவதில்லை. படிப்பில் கெட்டிக்காரராக இருந்த லாரன்ஸ் மேற்படிப்புக்காக இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்கிறார். இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தபோது அவரது வளர்ப்புத் தாய் இறந்துவிடுகிறார்.
சோகம் தாங்காமல் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிடுகிறார் லாரன்ஸ். கொஞ்சகாலம் கலிபோர்னியாவில் தங்குகிறார். 1966-ல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஒரு கோர்ஸ் படிக்கப்போகிறார். அப்போது அவருக்கு வயது 22. லாரன்ஸிற்கு கம்ப்யூட்டர் அறிமுகமாகிறது.
எழுபதுகளின் ஆரம்பத்தில் 'ஏம்பக்ஸ்' என்ற நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். அப்போது கம்ப்யூட்டர் டேட்டாபேஸ் துறையில் வல்லுநரான எட்கர் எப் காட்டின் ஆராய்ச்சி லாரன்ஸின் மீது பெரும் தாக்கத்தைச் செலுத்துகிறது. அந்தத் தாக்கம் லாரன்ஸின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உருவாக்கியதோடு அவரை கம்ப்யூட்டர் துறையில் பெரும் ஜாம்பவனாக மாற்றுகிறது. கம்ப்யூட்டர் களுக்கு தேவையான ஜாவா, ஆரக்கிள் போன்ற புதுப்புது புரோகிராமிங் மொழிகளை எழுதி, உலகின் முக்கிய கோடீஸ்வரராகவும் ஆகிறார் லாரன்ஸ். ஆம்; மேலே நாம் சொல்லிக்கொண்டிருப்பது 'ஆரக்கிள்' நிறுவனத்தின் தலைவரான லாரி எல்லிசனைப் பற்றித்தான்.
ஏழையாக பிறந்த இவர், தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொண்டு, இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் முக்கிய இடங்களை பிடிக்க போட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறார். இவரது வாழ்க்கை, நமக்கும் தன்னம்பிக்கையை கொடுக்கட்டும்.