மார்பக புற்றுநோயை தடுக்கும் உணவுகள்


மார்பக புற்றுநோயை தடுக்கும் உணவுகள்
x

மார்பக புற்றுநோய் பாதிப்பில் இருந்து காக்க உதவுகின்ற உணவு வகைகள் குறித்து பார்ப்போம்.

மார்பக புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இறக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்றுநோய் வருவதற்கான ஆபத்தை குறைக்க முடியும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அவற்றுள் ஆண்டிஆக்சிடெண்ட் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவை மார்பக புற்றுநோய் பாதிப்பில் இருந்து காக்க உதவுகின்றன. அத்தகைய உணவு வகைகள் குறித்து பார்ப்போம்.

* கிரீன் டீ, உலகளவில் பரவலாக பருகப்படும் ஆரோக்கிய பானம். இதில் ஆண்டிஆக்சிடெண்ட், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் திறன் கொண்டது. மார்பக புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் தாக்கும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மரபணுக்கள் சேதம் ஆகாமல் தடுக்கவும் துணைபுரிகிறது. கிரீன் டீயை தொடர்ந்து பருகுவதால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். உடல் எடை குறைப்புக்கும் கைகொடுக்கும்.

* உடலில் புற்று நோய் செல்களின் அசாதாரண வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் பிராக்கோலிக்கு இருக்கிறது. மார்பகம், சிறுநீர்பை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதில் முக்கியபங்கு வகிக்கிறது.

* காளான்களை தொடர்ந்து உணவில் சேர்ப்பது அவசியமானது. 10 கிராம் காளான்களை தினமும் சாப்பிடும் பெண்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு குறைவாக இருக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக மாதவிடாய் சுழற்சி முடிவடையும் நிலையில் இருக்கும் பெண்கள் காளான்களை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

* வேகவைத்து சமைக்கப்பட்ட தக்காளி பழங்களில் உடல்நலத்துக்கு ஏராளமான நன்மைகள் உள்ளடங்கி இருக்கின்றன. அதிலிருக்கும் லீகோபின் சக்திவாய்ந்த ஆண்டி ஆக்சிடெண்டாக செயல்படுகிறது. உடலில் அதிக அளவு லீகோபின் உள்ளடங்கியிருக்கும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் அபாயம் 22 சதவீதம் குறைவாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

* காபி குடிப்பதும் மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைக்க உதவும். இதில் இருக்கும் ஆண்டிஆக்சிடெண்ட், உடலிலுள்ள செல்களுக்கு பாதுகாப்பு கவசமாக செயல்படும்.

* கேரட்டில் அதிக அளவு கரோட்டினாய்டு நிறைந்திருக்கிறது. உடலில் அதிக அளவு கரோட்டினாய்டுகள் இருந்தால் மார்பக புற்றுநோய்க்கான அபாயம் 28 சதவீதம் குறையும். அதனால் கேரட்டை அதிகம் சாப்பிடுவது நல்லது.


Next Story