உறைபனியில் விவசாயம்
‘‘உலகின் மற்ற இடங்களை விட ஆர்டிக் பகுதி வேகமாக வெப்பமடைந்து வருகிறது...’’ என்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஆர்டிக் பகுதியில் நான்கு மாதங்கள் வரை நீடிக்கும் குளிர்காலத்தில் வெப்பநிலை மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வரை செல்லும். குளிர்காலம் முடியும் வரைக்கும் வெளிச்சமே இருக்காது. மூன்று மாதங்கள் நீடிக்கும் கோடைக்காலத்தில் 24 மணி நேரமும் வெளிச்சம் இருக்கும். இந்த மாதிரியான உறைபனி சூழ்ந்த இடத்தில் விவசாயம் செய்ய முடியுமா?
''முடியும்...'' என்று கட்டை விரலை உயர்த்திக்காட்டுகிறார் பென் விட்மர். வட துருவத்திலிருந்து 800 மைல் தொலைவிலிருக்கும் ஸ்வால்பார்ட் என்கிற தீவில் இவர் வசிக்கிறார். உலகிலேயே சுவாசத்தின் மூலம் அதிகளவில் கார்பன் டை ஆக்ஸைடு வெளியாவது இங்கேதான். இந்தத் தீவில் வாழும் மக்களுக்கான உணவுப் பொருட்கள் கப்பல், விமானம் மூலமாகவே கொண்டு வரப்படுகிறது.
இது குறித்து ஏதாவது செய்ய வேண்டும் என்று பென் நினைத்திருக்கிறார். உள்ளூரிலேயே காய்கறிகளை விவசாயம் செய்யத் தொடங்கினார். 'உள்ளூர் உணவுப் பொருட்களை உண்பதுதான் முக்கியம். அதே நேரத்தில் பிளாஸ்டிக்கையும் பயன்படுத்தக்கூடாது' என்பது பென்னின் முக்கிய கொள்கை.
தற்போது அவர் வாழும் தீவுக்கு வரும் காய்கறிகள் எல்லாம் பிளாஸ்டிக் பைகளால் சுற்றப்பட்டு வருகிறது. அந்த பிளாஸ்டிக் கழிவுகள் மறுபடியும் கப்பலிலே எடுத்துச் செல்லப்பட்டுக் கடலில் கலக்கப்படுகின்றன. இது பென்னை ரொம்பவே வருத்தப்பட செய்திருக்கிறது.
கோடைக்காலத்தில் மட்டும் விவசாயத்துக்காக உருவாக்கப்பட்ட பசுமை வீட்டில் காய்கறிகளை வளர்க்கிறார். குளிர்காலத்தில் உள்ளறையினுள் விவசாயம் செய்கிறார். அவர் வாழும் இடம் குளிர்காலத்தின் இருளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படவில்லை என்பது ஒரு குறை. எந்த கழிவுகளும் இல்லாத ஒரு உணவகத்தைத் திறக்க வேண்டும் என்பது பென்னின் கனவு.
இப்போது அவர் இந்தத் தீவில் உள்ள முக்கிய நகரமான லாங் இயர்பேனுக்கு உணவுப் பொருட்களை அனுப்புகிறார். எஞ்சிய உணவுகளை உரமாக மாற்றி விவசாயத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிறார். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் தான் செய்துவரும் விவசாயம் உதவும் என்று பென் நம்புகிறார்.
'உள்ளூர் உணவுப் பொருட்களை உண்பதுதான் முக்கியம். அதே நேரத்தில் பிளாஸ்டிக்கையும் பயன்படுத்தக்கூடாது' என்பது பென்னின் முக்கிய கொள்கை.