நிலவை சொந்தம் கொண்டாட முடியுமா?
நிலவு பற்றிய ஆராய்ச்சியில் ரஷியா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இப்போது இந்தியாவும் வெற்றி பெற்றிருக்கிறது. இதில், இந்தியாவுக்கு கிடைத்த கூடுதல் கவுரவம் என்னவென்றால், மற்ற நாடுகள் எல்லாம், நிலவின் வடதுருவத்தில் மட்டுமே ஆய்வு மேற்கொண்டன.
சூரியனின் ஒளி நேரடியாக படாமல், நிழல் படிந்த பகுதியாக இருக்கும் தென்துருவத்தில் எந்த நாடும் ஆய்வு செய்யவில்லை. அந்த கடினமான முயற்சியை இப்போது இந்தியா மேற்கொண்டு, அதில் முத்திரை பதித்து நிலவின் தென்துருவத்தில் வெற்றிக் கொடியை நாட்டியிருக்கிறது.
'சிவசக்தி' பெயர்
சந்திரயான்-3 விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் கருவி கடந்த 23-ந்தேதி மாலை நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்தது. அடுத்த 4 மணி நேரத்தில், லேண்டர் கருவியில் இருந்து சாய்தளம் மூலம் தரையிறங்கிய பிரக்யான் ரோவர் வாகனம், நிலவில் ஊர்ந்து சென்று ஆய்வு பணியை தொடங்கி இருக்கிறது.
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய நேரத்தில், தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திரமோடி, நாடு திரும்பிய உடன் கடந்த சனிக்கிழமை பெங்களூரு சென்று இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர், நிலவில் லேண்டர் கருவி தரையிறங்கிய இடம், 'சிவசக்தி' என்ற பெயரில் அழைக்கப்படும் என்று அறிவித்தார்.
சொந்தம் கொண்டாட முடியுமா?
தற்போது, நிலவின் தென் துருவத்தில் உள்ள 'சிவசக்தி' பகுதியை இந்தியா சொந்தம் கொண்டாட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நிலவு பற்றிய விண்வெளி ஆய்வுகள் தொடங்கப்பட்ட காலத்தில், சோவியத் யூனியன்தான் 1950-ம் ஆண்டு முதல் 1960-ம் ஆண்டு வரை கோலோச்சியது. பல செயற்கைக்கோள்களை அனுப்பி நிலவில் ஆய்வு மேற்கொண்டது.
இந்த நேரத்தில், அமெரிக்காவின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. 1959-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சோவியத் யூனியன் அனுப்பிய லூனா-2 என்ற செயற்கைக்கோள் நிலவு பற்றிய ஆராய்ச்சியை துரிதப்படுத்தியது. அடுத்த மாதமே (அக்டோபர்) அனுப்பப்பட்ட மற்றொரு விண்கலமான லூனா-3, நிலவுக்கு அருகில் சென்று புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது. தொடர்ந்து, 1966-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்ட லூனா-9 முதன்முதலில் நிலவின் வடதுருவத்தில் தரையிறங்கியது.
எழுதப்படாத விதி
காலனி ஆதிக்க காலத்தில், ஒரு நாடு புதிய நிலப்பரப்பை கண்டுபிடித்தால், அந்த நாட்டுக்குத்தான் அது சொந்தம் என்ற எழுதப்படாத விதி இருந்தது. சோவியத் யூனியன் முதன்முதலில் நிலவில் காலடி எடுத்துவைத்தபோது, இதே அச்சத்துடன் அமெரிக்கா இருந்தது. என்றாலும், தொடர்ந்து போராடி அடுத்த 4 மாதத்தில், சர்வேயர்-1 என்ற விண்கலத்தை நிலவில் தரையிறக்கிய அமெரிக்கா, நிம்மதி பெருமூச்சு விட்டது.
அதன்பிறகு, 1969-ம் ஆண்டு நிலவுக்கு மனிதனை அனுப்பி அமெரிக்கா சாதனை படைத்தது. ஆனால், அந்த சாதனையை ரஷியா ஏற்க மறுத்தது. நிலவு போல் வடிவமைத்து அதற்கு முன்னால் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியது.
அமலுக்கு வந்தது
நிலவு ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா இடையே மோதல் உருவாவதை தடுக்க ஐக்கிய நாடுகள் சபை முக்கிய தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. அதாவது, ''நிலவும் அதன் இயற்கை வளங்களும் மனித குலத்தின் பொதுச் சொத்து. நிலவு எந்தவொரு நாட்டின் பாத்தியதைக்கும் உட்பட்டது அல்ல. எந்தவொரு நாடும் நிலவில் குடியேறுவதன் மூலமோ, வேறு வகையிலோ, அங்கு தமது இறையாண்மையை செலுத்த முடியாது'' என்பதுதான் அந்த தீர்மானத்தில் இடம் பெற்றிருந்தவை.
1972-ம் ஆண்டு இந்த தீர்மானம் விவாதிக்கப்பட்டு, 1979-ம் ஆண்டு கையெழுத்தானது. இந்த தீர்மானத்தை கொண்டு வர 5 நாடுகளின் ஒப்புதல் தேவைப்பட்டது. சீலே, பிலிப்பைன்ஸ், உருகுவே, நெதர்லாந்து ஆகிய 4 நாடுகளே முதலில் ஒப்புதல் அளித்தன. அதன்பிறகு, 1984-ம் ஆண்டு ஆஸ்திரியாவும் அதில் இணைந்த பிறகே, இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.
நிலவு யாருக்கு?
ஆனால், நிலவு ஆராய்ச்சியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரஷியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இன்னும் இந்த தீர்மானத்தில் கையெழுத்து போடவில்லை. எதிர்காலத்தில், பூமியில் உள்ள கனிம வளங்கள் குறைந்துபோய், நிலவில் உள்ள கனிம வளங்களை வெட்டி எடுத்துக் கொண்டு வர வேண்டிய தேவை ஏற்படும்போதுதான் புதிய பிரச்சினை பூதாகரமாக வெடிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்போது, ''நிலவு யாருக்கு?'' என்ற போட்டி முதன்மையாக இருக்கும்.