இளைஞர்களுக்கு ஊக்கமூட்டும், '76 வயது சாம்பியன்'


இளைஞர்களுக்கு ஊக்கமூட்டும், 76 வயது சாம்பியன்
x
தினத்தந்தி 2 Sept 2023 11:44 AM IST (Updated: 2 Sept 2023 11:54 AM IST)
t-max-icont-min-icon

சிறுவயதில் விளையாட்டு மீது ஆர்வம் கொள்பவர்கள் முறையாகப் பயிற்சி பெற்று விளையாட்டு வீரர்களாகி பதக்கங்களைக் குவித்து அசத்துவார்கள். ஒருகட்டத்தில் பயிற்சியாளர்களாக மாறி தன்னை போல் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவார்கள்.

முதுமை பருவத்திலும் இளமை துடிப்போடு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவிப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் தனிக்கவனம் பெறுகிறார், சாமுவேல்.

76 வயதாகும் இவர் தொடர்ந்து தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று அசத்தி வருகிறார். பயிற்சியாளர் யாரும் இல்லாமல் இவரே தனது சொந்த முயற்சியில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், மும்முறை தாண்டுதல் போன்ற தடகள விளையாட்டுப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்று விருதுகளையும், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வென்றிருப்பதுடன், நிறைய இளைஞர்களுக்கு ஊக்கமூட்டி, அவர்களையும் சாம்பியன்களாக மாற்றியிருக்கிறார்.

இவரது பூர்வீகம் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கைவண்டூர் கிராமம். அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு வரை படித்துள்ளார். சிறு வயது முதலே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர், பள்ளிப்பருவத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். இவரது தாய்மாமா விக்டர் ஜெயராஜ் கால்பந்து வீரர். அவர்தான் சாமுவேலுக்கு விளையாட்டு களத்தைக் கட்டமைத்து கொடுத்திருக்கிறார்.

''எனது தாய்மாமா விக்டர் ஜெயராஜ் எங்கள் ஊர் பகுதியிலுள்ள மைதானத்தில் கால்பந்து விளையாட செல்லும்போது என்னையும் உடன் அழைத்துச் செல்வார். அங்கு விளையாடும் வீரர்கள் மைதானத்திற்கு வெளியே உதைத்துத் தள்ளும் பந்துகளை நான் ஓடிச் சென்று எடுத்துக் கொடுப்பேன். நாளடைவில் எனக்கும் கால்பந்து விளையாட்டு மீது ஆர்வம் ஏற்பட்டது. பள்ளிப் பருவத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் பங்கேற்றுப் பல பரிசுகளைப் பெற்றுள்ளேன். சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற விருதையும் பெற்றிருக்கிறேன்'' என்று பெருமிதம் கொள்கிறார் சாமுவேல்.

குடும்ப சூழ்நிலையால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்ட போதிலும் விளையாட்டு ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொண்டார். அதுதான் இன்றுவரை தடகள வீரராக ஜொலிக்க வைத்துக்கொண்டிருப்பதாக கூறுகிறார்.

சுமார் 17 ஆண்டு காலமாக 55 வயதிற்கு மேற்பட்டோர், 60 வயது, 65 வயது, 70 வயது, 75 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதியோர் தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். சென்னை, மதுரை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, காரைக்குடி, திருவள்ளூர், ஜெய்ப்பூர், அசாம், அரியானா, பஞ்சாப், கோவா, மைசூரு, ஐதராபாத், பெங்களூரு, ஆந்திர மாநிலம் குண்டூர், கொல்கத்தா, மலேசியா, பின்லாந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்காக நடைபெற்ற தடகள விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று உள்ளார்.

''நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகளில் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என 150-க்கும் மேற்பட்ட பதக்கங்கள், விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வென்றிருக்கிறேன். சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்தியத் தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று மூன்று தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றேன்.

வெளிநாடுகளில் நடைபெறும் உலக விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள பல அழைப்புகள் வந்தும், போதிய ஸ்பான்சர் இல்லாத காரணத்தால் கலந்து கொள்ள முடியாமல் வாய்ப்புகளைத் தவறவிட்டிருக்கிறேன்.

எனக்கு பின்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக மாஸ்டர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. ஆனால் உரிய நேரத்தில் விசா கிடைக்காத காரணத்தால் அங்கு செல்ல முடியவில்லை. அந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றம் அளித்தது.

தமிழக அரசு இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வருவது போல், முதியோர் விளையாட்டு வீரர்களையும் அவர்களின் திறமையையும் கண்டறிந்து அவர்களையும் ஊக்குவித்து தேவையான நிதி உதவி மற்றும் ஸ்பான்சர் கிடைக்க ஏற்பாடு செய்தால் என்னைப் போல் தமிழகத்தில் உள்ள முதியோர் விளையாட்டு தடகள வீரர்களும் பலர் போட்டிகளில் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பதக்கம் வென்று கொடுத்து பெருமை சேர்ப்பார்கள்'' என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி, நம்மிடமிருந்து விடைபெற்றார்.


Next Story