கோவை, நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (புதன்கிழமை) முதல் 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தமிழ்நாட்டில் அனேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (வியாழக்கிழமை) நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.