மூத்த குடிமக்கள் சேமிப்பு வரம்பு ரூ.30 லட்சமாக உயர்வு: பெண்களுக்கு புதிய சிறுசேமிப்பு திட்டம்
மூத்த குடிமக்கள் சேமிப்பு வரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது. பெண்களுக்கு என புதிய சிறு சேமிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மூத்த குடிமக்கள் சேமிப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கை மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நமது நாட்டில் மூத்த குடிமக்கள் சேமிப்பு வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து இரு மடங்காக உயர்கிறது. ரூ.30 லட்சம் வரையில் அவர்கள் சேமிக்கலாம்.
மாதாந்திர வருமான கணக்கு திட்டத்தின்கீழ் ஒரு கணக்கில் மாதம் ரூ.4½ லட்சம் சேமிப்பு வரம்பு, இரு மடங்காக ரூ.9 லட்சம் அளவுக்கு உயர்த்தப்படுகிறது. 'ஜாயிண்ட் அக்கவுண்ட்' என்று அழைக்கப்படுகிற கூட்டு வங்கிக்கணக்கில் இந்த வரம்பு ரூ.9 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்கிறது.
பெண்களுக்கு சிறுசேமிப்பு திட்டம்
பெண்களை கவரும் வகையில் அவர்களுக்கென சிறப்பு சிறு சேமிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
'மகிளா சம்மான் சேவிங் பத்திரம்' என்று அழைக்கப்படுகிற இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் அல்லது பெண் குழந்தைகள் பெயரில் வங்கியில் ஒரே முறை ரூ.2 லட்சம் டெபாசிட் செய்யலாம். 2 ஆண்டுகள் சேமிப்புக்கு 7½ சதவீதம் வட்டி வழங்கப்படும்.
இந்த சேமிப்பு திட்டத்தில் பகுதியளவு பணத்தை இடையில் திரும்ப எடுக்கிற வசதியும் உண்டு.
இந்த திட்டம் 2 ஆண்டு காலத்துக்கு அமலில் இருக்கும்.
பெண் விவசாயிகளுக்கு நிதி
நமது நாட்டில் சிறுவிவசாயிகளுக்கு பிரதமர் நிதி உதவி திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.2¼ லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் பெண் விவசாயிகளுக்கு மட்டும் ரூ.54 ஆயிரம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் தீனதயாள் அந்தியோதயா யோஜனா தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் 81 லட்சம் பெண்கள் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அடுத்த கட்டமாக இந்த குழுக்களுக்கு பெரிய உற்பத்தி நிறுவனங்கள் அல்லது கூட்டுகளை உருவாக்குவதன் மூலம் பொருளாதார ரீதியிலான அதிகாரம் வழங்கலில் அடுத்த கட்டத்தை அடைய மத்திய அரசு உதவும்.
இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.