உலகின் விலை உயர்ந்த ஐஸ்கிரீம்


உலகின் விலை உயர்ந்த ஐஸ்கிரீம்
x

இத்தாலி பகுதியில் வளர்க்கப்படும் ‘ஒயிட் ட்ருப்பிள்’ எனப்படும் அரிய வகை வெள்ளை உணவுப்பொருள்தான் ஐஸ்கிரீமின் விலையை நிர்ணயம் செய்கிறது.

ஐஸ்கிரீமை விரும்பாதவர்கள் உலகில் இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரிடமிருந்தும் ஒருமித்த பதில்தான் வரும். அதிலும் கோடை விடுமுறையில் விதவிதமான ஐஸ்கிரீமை ருசிப்பதற்கு பலரும் விரும்புவார்கள்.

அப்படிப்பட்டவர்கள் உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் பற்றி நிச்சயம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். அந்த ஐஸ்கிரீம் ஜப்பானில் தயாரிக்கப்படுகிறது. ஆனால் அதற்கான பிரதான மூலப்பொருள் இத்தாலியில் இருந்து வரவழைக்கப்படுகிறது. அங்குள்ள ஆல்பா நகர பகுதியில் வளர்க்கப்படும் 'ஒயிட் ட்ருப்பிள்' எனப்படும் அரிய வகை வெள்ளை உணவுப்பொருள்தான் ஐஸ்கிரீமின் விலையை நிர்ணயம் செய்கிறது.

ஜப்பானிய மதிப்பில் அந்த உணவுப்பொருளின் விலை ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? 2 மில்லியன் ஜப்பானிய யென். கிட்டத்தட்ட 15,192 அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய். இத்தாலிய உணவு பொருள் மட்டுமல்ல, மார்மேசன் சீஸ், சேக் லீஸ் போன்ற பொருட்களும், சில நறுமண பொருட்களும் இந்த ஐஸ்கிரீமில் சேர்க்கப்படுகின்றன. அவையும் ஜஸ்கிரீம் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

ஜப்பானை சேர்ந்த செல்லாடோ என்ற நிறுவனம் இந்த ஐஸ்கிரீம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. உலகின் விலை உயர்ந்த ஐஸ்கிரீம் தயாரிப்பது மட்டுமே எங்கள் நிறுவனத்தின் நோக்கமல்ல என்கிறார்கள், அதன் உரிமையாளர்கள். ஐரோப்பா மற்றும் ஜப்பானை ஒன்றாக இணைத்து இருவேறு கலாசாரங்களையும் ஒருங்கே கட்டமைப்பதுதான் எங்கள் நோக்கம். அதன் ஒரு அங்க மாக ஐஸ் கிரீமை கையாளுகிறோம் என்கிறார்கள்.

இந்த ஐஸ்கிரீமின் விலை எவ்வளவு தெரியுமா? இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 லட்சத்து 54 ஆயிரம். இந்த ஐஸ்கிரீமை ருசித்தவர்கள் இதன் சுவையை விவரிக்க கடினமாக இருக்கிறது. அந்த அளவுக்கு புதுவித சுவை உணர்வை கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். இது உலகின் விலை உயர்ந்த ஐஸ்கிரீம் என்ற கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளது.


Next Story