உடல் எடையை அளவிட சரியான நேரம் எது?
உடல் எடையை அளவிட சரியான நேரம் காலை வேளைதான் பொருத்தமானது.
எடை மிஷின் கண்ணில்படும்போதெல்லாம் உடல் எடை அதிகரித்திருக்கிறதா? இல்லை குறைந்திருக்கிறதா? என்பதை சரிபார்க்கும் ஆர்வம் பலருக்கும் மேலோங்கும். சில நாட்களுக்கு முன்புதான் உடல் எடையை பரிசோதித்திருப்பார்கள். அதற்குள் மீண்டும் உடல் எடையை சரிபார்ப்பார்கள்.
ஆனால் இந்த முறை உடல் எடை அதிகரித்திருப்பதாக காண்பிக்கும். எப்படி குறுகிய காலத்திற்குள்ளேயே உடல் எடை கூடியிருக்கும் என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படும். உடல் எடையை எந்த நேரத்தில் பார்க்கிறீர்களோ? அதற்கும், உடல் எடைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. உதாரணமாக சாப்பிட்டு முடித்ததும் உடல் எடையை சரிபார்த்தால் உடல் எடை கூடி இருப்பதாகத்தான் காண்பிக்கும்.
உட்கொண்ட உணவு, தேநீர், உடல்நல பாதிப்புக்கு உட்கொள்ளும் மருந்து, பருகும் தண்ணீர் உள்ளிட்டவை உடல் எடையில் பிரதிபலிக்கும். அதனால் மதியம், மாலை வேளையில் உடல் எடையை சரிபார்த்தால் அது துல்லியமாக தெரியாது. ஓரிரு கிலோ உடல் எடை கூடி இருக்கலாம். அல்லது குறைந்திருக்கலாம்.
அப்படி என்றால் உடல் எடையை சரிபார்ப்பதற்கு சரியான நேரம் எது என்கிறீர்களா? காலை வேளைதான் பொருத்தமானது. அதுவும் வெறும் வயிற்றில் உடல் எடையை சரிபார்ப்பதுதான் சரியானது. தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யும் நபர் மாலை வேளையில் உடல் எடையை சரி பார்த்தால் கொஞ்சம் எடை கூடி இருப்பதாக தோன்றும்.
ஏனெனில் உட்கொண்ட உணவு, பருகிய தண்ணீர் அதில் உள்ளடங்கி இருக்கும். ஆனால் விளையாட்டு வீரர்கள் மற்றும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இயங்குபவர்கள், உடல் உழைப்பு சார்ந்த கடினமான வேலைகளை செய்பவர்கள் மாலையில் உடல் எடையை சரிபார்த்தால் வழக்கத்தை விட உடல் எடை குறைவாக இருக்கும்.
அவர்களின் உடல் உழைப்புக்கு ஏற்ப கலோரிகள் எரிக்கப்பட்டிருப்பதே அதற்கு காரணம். அதனால் காலை வேளையில் வெறும் வயிற்றில் உடல் எடையை சரிபார்ப்பது அனைத்து தரப்பினருக்கும் துல்லியமான எடையை காண்பிக்கும்.
அதிகாலை நேரமே எடை பார்ப்பதற்கு ஏற்ற நேரமாக இருந்தாலும் தினமும் எடையைச் சரிபார்க்க வேண்டியதில்லை. மாதம் ஒருமுறை எடை பார்க்கலாம். ஆர்வமாக இருப்பவர்கள் வாரம் ஒருமுறை கூட எடையை சரிபார்க்கலாம். ஆனால் முந்தைய நாள் சாப்பிட்ட உணவு பொருட்களை பொறுத்து எடை மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.