பால், பழம், தயிர், சாதம் சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது?


பால், பழம், தயிர், சாதம் சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது?
x

உடல் ஆரோக்கியத்தை பலப்படுத்துவதற்கு ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொண்டால் மட்டும் போதாது. அவற்றை சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவற்றின் பலனை அனுபவிக்க முடியாது. தேவையற்ற உடல்நல பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும்

பால், பழம், சர்க்கரை, தயிர், சாதம் போன்ற உணவுகளை எந்த நேரத்தில் உட்கொள்ள வேண்டும்? ஏன் அந்த சமயத்தில் உட்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.

சர்க்கரை: காலை வேளையில் சர்க்கரை போன்ற எளிய கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட இனிப்பு வகை உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை ரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யும். குளுக்கோஸ்-இன்சுலின் சுழற்சியையும் சீர்குலைக்கும். அதேபோல் இரவில் சர்க்கரை கலந்த இனிப்பு பலகாரங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

அதுவும் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்துவிடும். அதனை நிர்வகிக்க கணையம், இன்சுலின் என்ற ஹார்மோனை வெளியிடும். அது குளுக்கோஸை உறிஞ்சுவதற்கு உதவும். இந்த செயல்முறையால் இரவு தூக்கம் தாமதமாகும். பகல்வேளைதான் சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், இனிப்பு பலகாரங்கள், உணவுகள் சாப்பிடுவதற்கு சரியான நேரமாகும்.

பழங்கள்: பழங்களிலும் எளிய கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. நுண்ணூட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளன. அவற்றை வெறும் வயிற்றிலோ, இரவிலோ சாப்பிடுவதை விட மதிய உணவுக்கு முன்பாக பிற்பகல் வேளையில் சாப்பிடுவது சரியானது. மாலையில் சாப்பிடுவதும் நல்லது.

தயிர்: இதில் புரதம் மிகுந்திருக்கும். குளிர்ச்சியான பண்புகளை கொண்ட இது கோடை காலத்தில் சிறந்த உணவுப்பொருளாக விளங்குகிறது. ஆனால் தயிரை எல்லா பருவ காலங்களிலும் உட்கொள்ளலாம். இரவில் தயிர் சாப்பிடுவது சளியை உருவாக்கும் என்ற கருத்து நிலவுகிறது. அதற்கு அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை.

இருப்பினும் செரிமான பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் இரவில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரவில் ஜீரணமாகுவதற்கு கடினமாக இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். மதிய உணவுடன் தயிர் சாப்பிடுவதுதான் சரியான நேரமாக கருதப்படுகிறது.

பால்: இரவில் பால் உட்கொள்வது அமினோ அமிலங்களை வெளியிட உதவும். தசைகளை வலுப்படுத்துவதற்கு தேவையான புரதம் அதில் கலந்திருக்கும். உடல் எடையை குறைக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் விரும்புபவர்கள் உடற்பயிற்சி செய்த பிறகு பால் பருகலாம். அது உடல் அமைப்பை மேம்படுத்த உதவும்.

அரிசி: இது அதிக கிளைசெமிக் குறியீடு கொண்டது. பகல் வேளையில் அரிசி சாதம் சாப்பிடலாம். அதில் கார்போஹைட்ரேட் மிகுந்திருக்கும். அன்றாட வேலைகளை செய்வதற்கு உடலுக்கு தேவையான ஆற்றலை அது கொடுக்கும். பகல்வேளையில் அரிசி போன்ற அதிக கலோரிகளை கொண்ட உணவுகளை உட்கொண்டாலும் எளிதாக ஜீரணமாகிவிடும். உடலின் வளர்சிதை மாற்றமும் பகல் பொழுதில் வேகமாக நடைபெறும்.

அதேவேளையில் உடல் எடையை குறைக்கும் நோக்கம் கொண்டவர்கள் இரவில் அரிசி சாதம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட்டை பகல் பொழுதிலேயே போதுமான அளவுக்கு உடல் உறிஞ்சிக் கொள்ளும்.

இரவில் போதுமான அளவுக்கு உடலில் சுறுசுறுப்பு இல்லாதிருக்கும் என்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சரியான உணவாக இருக்காது. இரவில் அரிசி சாதம் சாப்பிடவிரும்பினால் உணவில் புரதம், கொழுப்பு மற்றும் பச்சை காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


Next Story