வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வழிமுறைகள்


வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வழிமுறைகள்
x

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எந்த தகவலையும் இணையத்தின் மூலம் உடனடியாக பெற்றுவிடும் நிலை இருக்கிறது. புத்தகங்கள் கூட டிஜிட்டல் திரையில் காட்சிப்படுத்தப்படுகின்றன. அதனால் புத்தகங்களை கையில் எடுத்து வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டிருக்கிறது.

மாணவர்களை பொறுத்தவரை வாசிப்பு பழக்கத்தை அவசியம் பின்பற்றியாக வேண்டும். வாசிப்பு என்பது கல்வி சார்ந்த விஷயம் மட்டுமல்ல. தனிப்பட்ட வளர்ச்சிக்கும், அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கும், நினைவாற்றலை தக்கவைத்துக்கொள்வதற்கும், தகவல் தொடர்பு திறனை வளர்த்துக்கொள்வதற்கும், சொல் அகராதி மற்றும் மொழித்திறனை மேம்படுத்துவதற்கும், சிந்தனை மற்றும் பகுப்பாய்வு திறன்களை வளர்ப்பதற்கும் வாசிப்பு பழக்கம் உதவும்.

கற்பனை கதைக்களம் கொண்ட நாவல்கள், திரில்லர் கதைகளை படிக்கும் மாணவர்களிடம் மொழித்திறன் மேம்பட்டிருப்பது ஒரு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தகைய புத்தகங்களை படிப்பது அடுத்து நடக்கும் விஷயங்களை அறிந்து கொள்வதற்கு ஆர்வத்தை தூண்டும். சம்பந்தப்பட்ட மொழியை புரிந்து கொள்வதற்கும் உதவும் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்ப உலகில் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதற்கும், வாசிக்கும் ஆர்வத்தை வளர்ப்பதற்கும் பிரிட்டிஷ் கவுன்சில் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது. அது பற்றி பார்ப்போம்.

* நீண்ட நேரம் உட்கார்ந்து புத்தகம் படிப்பது பலருக்கும் சவாலான விஷயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு பொறுமையும் இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் புத்தகத்தில் குறிப்பிட்ட பக்கங்களை படிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். ஆரம்பத்தில் ஓரிரு பக்கங்களாக படிக்க தொடங்கலாம். பின்பு படிப்படியாக பக்கங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.

* வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிமுறை விருப்பமான விஷயங்களை படிப்பதுதான். அது புனைக் கதையாகவோ, சுய சரிதையாகவோ, சிறுகதையாகவோ இருக்கலாம். உங்களுக்கு பிடித்தமான துறை சார்ந்த புத்தகங்களையும் வாசிக்க தொடங்கலாம். உங்கள் கவனத்தை ஈர்க்கும், உங்களை படிக்கத் தூண்டும் ஏதாவது ஒரு தலைப்பை தேர்ந்தெடுக்கவும். அது சார்ந்த புத்தகங்களை தேடிப்பிடித்து படிப்பது இயல்பாகவே வாசிக்கும் ஆர்வத்தை தூண்டிவிடும்.

* புத்தக கிளப்புகள், வாசிப்பு குழுக்களில் சேருவது வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதற்கு உதவும் மற்றுமொரு சிறந்த வழிமுறையாகும். அவை புத்தகங்களை விமர்சனம் செய்யவும், கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், ஒருமித்த சிந்தனை கொண்ட புத்தக ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்ளவும் வாய்ப்புகளை வழங்கும்.

* இன்றைய டிஜிட்டல் யுகத்தில், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கவனச்சிதறல்களுக்கு ஆளாகிறார்கள். அதனை தவிர்க்க எந்தவொரு இடையூறும் இல்லாத அமைதியான இடத்தை தேர்வு செய்யவும். அது வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

* வாசிப்புக்கு தொந்தரவு தரக்கூடிய மின் சாதனங்களை அணைத்து வைக்கவும். அலைபேசிக்கு வரும் குறுஞ்செய்தியும் கவனச்சிதறலை உண்டு பண்ணும்.

* புத்தகம் படிப்பதற்கென்று நேரத்தை வரையறை செய்யுங்கள். அந்த நேரம் நெருங்கியதும் 'இது படிக்க வேண்டிய நேரம்' என்பதை மூளைக்கு உணர்த்தும் வழக்கத்தை உருவாக்குங்கள்.

* வாசிப்பு சுவாரசியமாக இருக்க வேண்டுமே தவிர அது வேலையாக இருக்கக்கூடாது. நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக அமர்ந்து வாசிக்கும் பழக்கத்தை தொடரலாம். திரைப்படம் பார்ப்பது, நண்பர்களுடன் வெளியே செல்வது போன்ற பழக்கங்களுக்கு மாற்றாக அந்த நேரத்துக்குள் ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தால் அதற்கு பரிசு வழங்கும் வழக்கத்தை பின்பற்றலாம். அது வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க உதவும்.


Next Story