விசா இல்லாமல் அமெரிக்கா சென்று மகளின் திருமணத்தில் பங்கேற்ற ருசிகரம்
அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்ல சுலபமாக விசா பெறுவது கடினம். மகளின் திருமணத்திற்கு அமெரிக்கா செல்ல முடியாமல் தவித்த இந்திய குடும்பம் மாற்று வழிமுறையை பின்பற்றி விசா இல்லாமலேயே அமெரிக்காவின் அங்கீகரிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் சுனில் தார் என்பவர், தனது இளைய மகனின் திருமணத்தை விமரிசையாக நடத்துவதற்கு தீர்மானித்தார். மணமகள் அமெரிக்காவில் வசிக்கிறார். ஆனால் மணமகளின் பெற்றோரோ இந்தியாவின் தலைநகர் டெல்லியில் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். பெற்றோர் இல்லாமல் திருமணம் செய்து கொள்வதற்கு மணமகளுக்கு விருப்பமில்லை. சுனில் தாரும் மணமகளின் பெற்றோர் திருமணத்தில் பங்கேற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
ஆனால் டெல்லியில் வசிக்கும் மணமகளின் பெற்றோரிடம் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தேவையான விசா இல்லை. அமெரிக்கா வழங்கும் விருந்தினர் விசாவை பெறுவதற்கு சுமார் ஒரு வருட காலம் காத்திருக்க வேண்டும். அதனால் தற்காலிக விசா பெறுவதற்கு சுனில் தான் முயற்சித்தார். அதனை வழங்கும் அதிகாரிகளை அணுகி இருக்கிறார். அவர்களும் நடவடிக்கை எடுத்த போதிலும் விசா பெறுவதற்கு காலதாமதமாகும் என்பது தெரியவந்தது.
இதுபற்றி 65 வயதாகும் சுனில் தார் கூறும்போது, ''திருமணம் என்பது வாழ்நாள் முழுவதும் நம்முடன் நீடிக்கும் மறக்க முடியாத நிகழ்வு. எனது வருங்கால மருமகள் அவளுடைய பெற்றோர் இல்லாமல் திருமணம் செய்து கொள்வதை நான் விரும்பவில்லை. அவர்களை பங்கேற்க செய்துவிட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தோம்'' என்கிறார்.
மணமகன் மற்றும் மணமகள் இருவரும் புத்திசாலித்தனமாக முடிவு எடுத்தனர். சுனில் தார் குடும்பம் சான் பிரான்சிஸ்கோ பகுதியில் வசிக்கிறது. திருமணத்தை அமெரிக்கா-கனடா எல்லையில் அமைந்திருக்கும் நினைவு சின்னமான பீஸ் ஆர்ச் எனப்படும் இடத்தில் நடத்துவதற்கு முடிவு செய்தனர். அந்த நினைவிடத்தை சூழ்ந்து பிரமாண்டமான பூங்கா அமைந்துள்ளது. அந்த பகுதி அமெரிக்கா-கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் பொதுவான இடமாக விளங்குகிறது. அந்த பகுதிக்குள் நுழைவதற்கு இரு நாட்டில் இருப்பவர்களுக்கு எந்தவித ஆவணமும் தேவையில்லை.
பூங்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கன் கிச்சன் என்ற இடத்தில் தார் குடும்பம் திருமணத்தை நடத்துவதற்கு தீர்மானித்தார்கள். மணமகளின் பெற்றோர் மற்றும் அவர்களின் உறவினர்களை கனடாவுக்கு விசா பெற்று வரவழைத்தார்கள். அங்கிருந்து பூங்காவுக்குள் அமெரிக்க பக்கத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் வரை பயணிக்கலாம். அங்கு பொதுவான இடத்தில் திருமணத்தை விமரிசையாக நடத்தி விட்டார்கள். அதனால் மணமகள் குடும்பம் அமெரிக்கா விசா பெறாமலேயே கனடா நாட்டுக்கு சென்று திருமணத்தில் பங்கேற்றுவிட்டு மகிழ்ச்சியுடன் நாடு திரும்பி இருக்கிறார்கள்.