இந்தியாவின் முதல் பெண் மருத்துவ இரட்டையர்கள்


இந்தியாவின் முதல் பெண் மருத்துவ இரட்டையர்கள்
x

இந்திய துணைக்கண்டத்தின் முதல் முஸ்லிம் பெண் மருத்துவர்கள், பெண் மருத்துவ இரட்டையர்கள் என வரலாற்று ஆசிரியர்களால் புகழாரம் சூட்டப்படுபவர்கள், யாகூப் சகோதரிகள். அவர்களது பெயர்: உம்முகுல்சும் - அம்துர் ரகீப்.

இருவரும் பிறப்பில் இரட்டையர்கள் இல்லை என்றாலும், இரண்டு பேரும் ஒருசேர மருத்துவப்பணியில் ஈடுபட்டிருந்ததால் அவர்களுக்கு மருத்துவ இரட்டையர் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டிருக்கிறது.

யாகூப் சகோதரிகளின் தந்தை கணேஷ் லால், அரியானா மாநிலத்திலுள்ள அம்பாலா நகரை சேர்ந்த பெரும் தொழிலதிபரின் மகனாவார். அவர் தனது 16-வது வயதில் இஸ்லாமை தனது வாழ்வியல் நெறியாக ஏற்று, தனது பெயரை முஹம்மது யாகூப் என மாற்றிக்கொண்டார். அவரது மகள்களான உம்முகுல்சும், அம்துர் ரகீப் ஆகிய இரண்டு பேரும் கி.பி.1920-ல் மருத்துவப்பணியை தொடர்ந்து வந்தனர் என்பதை வரலாற்று பக்கங்கள் மூலம் அறியமுடிகிறது.

அதாவது, இந்திய துணைக்கண்டத்திலேயே முதல் பெண் மருத்துவ இரட்டையர்களாக அறியப்படும் யாகூப் சகோதரிகளில் மூத்தவரான உம்முகுல்சும் கிபி.1898-ம் ஆண்டு ஜூன் 27-ந் தேதியும், இளையவரான அம்துர்ரகீப் கி.பி. 1900-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந் தேதியும் பிறந்துள்ளனர். இருவரும் ஆக்ராவிலுள்ள புனித ஜான் பெண்கள் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்த கையோடு அங்குள்ள பெண்கள் மருத்துவக் கல்லூரியில் அந்த கால எம்.பி.பி.எஸ். படிப்பான எல்.எம்.பி (LMP) படித்து முடித்தனர்.

தற்போது அந்த கல்லூரி சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. எல்.எம்.பி. என்பதன் அர்த்தம் Licensed Medical Practioner என்பதும் பின்னாளில் அதுவே எல்.எஸ்.எம்.எப் (Licentiate of State Medical Faculty) என மாற்றப்பட்டு இறுதியாக எம்.பி.பி.எஸ். என பெயர் மாற்றம் அடைந்தது.

பெண்களுக்கு பள்ளிப்படிப்பே தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த காலகட்டம் அது. அத்தகைய அடக்குமுறைக்கு மத்தியில் தன் மகள்களை உயர்கல்வி கற்க வைக்க வேண்டும் என்பது தந்தை முஹம்மது யாகூபின் ஒரே கனவாக இருந்தது. அப்போதைய சமூகம் ஆணாதிக்க அழுத்தங்களாலும், பெண்ணடிமைத்தனத்திலும் ஊறியிருந்ததால் பெண்கள் படிக்கப்போவதே பெரும் போராட்டமாக இருந்தது. அதனால் இரு சகோதரிகளும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டனர். அவைகளை கடந்து தங்களது சுயவிருப்பத்தின் பேரிலும், தந்தை அளித்த ஊக்கத்தின் காரணமாகவும் மருத்துவம் படித்து முடித்தனர்.

சகோதரிகள் இருவரும் மருத்துவர்களாக அங்கீகாரம் பெற்ற போதிலும் சமூக அக்கறையிலும், பெண்களுக்கான சேவையிலும், கல்வி மற்றும் அரசியல் துறையிலும் அதீத ஈடுபாடு காட்டினார்கள். அதனை வெளிப்படுத்தும் விதமாக 'ரஹ்பரே நிஸ்வான்' எனும் உருது பத்திரிகையை தொடங்கி நடத்தினார்கள்.

மூத்த சகோதரியான மருத்துவர் உம்முகுல்சும், மருத்துவர் அப்துல் கபூர் கவாஸ் என்பவரை திருமணம் செய்தார். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், பர்மா உள்ளிட்ட இந்திய துணைக்கண்டத்தின் முழுமைக்குமான மருத்துவ பேராசிரியர்கள் சங்கத்தின் தலைவியாக சுமார் 18 வருடங்கள் நீடித்தார். அதற்கான பாராட்டு சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்து உம்முகுல்சும், அவரது கணவர் அப்துல் கபூர் கவாஸ் ஆகிய இருவரும் அரசியல் ரீதியாக பெரும் பிரச்சினைகளை சந்தித்தனர்.

பாகிஸ்தான் என்ற நாடு உருவாக்கத்திற்காக தாங்கள் சந்தித்த பிரச்சினைகளை பற்றியும், அவரது கணவருடைய மரணம் குறித்தும் 'ருதத் இ கபாஸ்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். கிபி.1927 முதல் 1930 வரை பிலிபிட் நகரை தலைமையிடமாகக் கொண்டு வெளியான 'ஹரெம்' என்ற உருது மாத இதழுக்கான ஆசிரியையாகவும் இருந்தார்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு மற்றொரு மருத்துவரான அப்துல் கபூர் பிஸ்மில் என்பவரை உம்முகுல்சும் மறுமணம் செய்து கொண்டார். 1971-ம் ஆண்டு ஜூலை 7-ந் தேதி உம்முகுல்சும் மரணமடைந்தார். அதேபோல, இளைய சகோதரியான அம்துர் ரகீப், மருத்துவரான இஷாக் சித்திக்கி நஷித் என்பவரை திருமணம் முடித்து பரேலி மற்றும் அலிகர் மருத்துவமனைகளில் பணி புரிந்தார். இந்த தம்பதியருக்கு அம்துல் ஹசீப், அபீபா மஹ்மூத், லத்தீபா அஸிம் ஆகிய மகள்களும், பேராசிரியரும், மருத்துவருமான ஹஸன் அஷ்பாக் சித்திக்கி என்ற மகனும் இருந்தனர்.

நாடு பிரிவினைக்குப்பிறகு தனது சகோதரியைப்போல, அம்துர் ரகீப்பும் கராச்சி நகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு கராதார் பிரசவ ஆஸ்பத்திரியில் நீண்ட காலம் மருத்துவராகவும், மருத்துவமனையின் தலைவராகவும் பணிபுரிந்தார். இதற்கிடையே, அவரது அக்கா உம்முகுல்சும் உயிரிழந்த நான்கே ஆண்டுகளில் அம்துர் ரகீப்பும் (1974 ஜனவரி 4) மரணமடைந்தார்.

ஆணாதிக்க சிந்தனை மிகுந்த அந்த காலகட்டத்தில் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே, முஸ்லிம் பெண்கள் பலர் கல்வி, வேலைவாய்ப்பில் மட்டுமின்றி சுதந்திரப் போராட்ட களத்தில் போராளிகளாகவும், அரசியல் ஆளுமைகளாகவும் இருந்து வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. அதற்கு யாகூப் சகோதரிகளே சாட்சி.

முன்னதாக கி.பி.1896-ல் கொல்கத்தாவை சேர்ந்த லத்தீபு நிஸா என்ற முஸ்லிம் பெண் கொல்கத்தா கேம்பல் மருத்துவக்கல்லூரியில் தன்னுடன் படித்த சக மாணவிகள் 55 பேரில் முதலாமவராக இருந்தார் என்று கிபி.1896-ல் வெளிவந்த பாமாபோதினி பத்ரிகா என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டது. ஆனால், லத்தீபு நிஸா மருத்துவப்பணியை தொடரவில்லை. இருப்பினும் யாகூப் சகோதரிகளுக்கு முன்பாக இந்தியாவில் மருத்துவம் படித்த முதல் முஸ்லிம் பெண்மணி லத்தீபு நிஸா ஆவார்.

நாட்டின் முதல் பெண் மருத்துவர் என அறியப்படும் ஆனந்திபாய் ஜோஷி என்பவர் கிபி.1865-ல் மும்பையில் பிறந்திருந்தாலும் அவர் தனது 15-வது வயதில் கோபால் ராவ் என்பவரை திருமணம் முடித்துக்கொண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியா நகருக்கு சென்றுவிட்டார். அங்கு அவர் 2 வருட மருத்துவப்படிப்பு முடித்த பின்னர், சில நாட்கள் டாக்டராக பணியாற்றினார்.

திடீரென உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு, மீண்டும் கொல்கத்தா திரும்பிய அவர் கி.பி.1885-ல் தமது 21-வது வயதில் மரணமடைந்தார். அமெரிக்காவின் பென்சில்வேனிய மருத்துவக்கல்லூரியில், ஆனந்திபாய் ஜோஷியுடன் படித்தவர்களில் ஆசியக்கண்டத்தை சேர்ந்த முதல் பெண் மருத்துவர்களாக கருதப்படும் ஜப்பானை சேர்ந்த கெய் ஒகாமி என்பவரும், சபாத் இஸ்லாம்பூளி எனும் சிரிய குர்திஷ் பெண்ணும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

அப்போதைய சமூகம் ஆணாதிக்க அழுத்தங்களாலும், பெண்ணடிமைத்தனத்திலும் ஊறியிருந்ததால் பெண்கள் படிக்கப்போவதே பெரும் போராட்டமாக இருந்தது. அதனால் இரு சகோதரிகளும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டனர்.


Next Story