எதிர்மறை விமர்சனங்களால் தவிக்கும் 'ஆதிபுருஷ்' படக்குழு


எதிர்மறை விமர்சனங்களால் தவிக்கும் ஆதிபுருஷ் படக்குழு
x
தினத்தந்தி 11 Jun 2023 7:00 PM IST (Updated: 11 Jun 2023 7:00 PM IST)
t-max-icont-min-icon

இப்படி படத்தின் நாயகன், நாயகி, இயக்குனர் அனைவருக்கும் வெற்றி அவசியம் என்ற நிலையில், ‘ஆதிபுருஷ்’ பற்றிய ரசிகர்களின் எதிர்மறை விமர்சனங்கள், அவர்கள் அனைவரையும் கலக்கம் அடையச் செய்திருக்கிறது. அவர்களின் கலக்கம் நீங்குமா? நீடிக்குமா?

சினிமா ஆரம்பமான காலம் தொட்டே, புராணங்களில் இருந்து ஆன்மிகக் கதைகளை படமாக்கி வரும் கலாசாரம் இருந்து வருகிறது. சினிமாத்துறை வளர்ச்சி அடையும் போதெல்லாம், சினிமாவும் புதிய பரிணாமத்தை கண்டிருக்கிறது. சினிமா நவீனமாகும் வேளையில் எல்லாம், ஆன்மிகக் கதை சார்ந்த படங்களும் நவீனமயமான முறையில் எடுக்கப்பட்டே வந்திருக்கின்றன.

அப்படி ஒரு படமாகத்தான் வருகிற வெள்ளிக்கிழமை (16-6-2023) வெளியாக இருக்கிறது 'ஆதிபுருஷ்' திரைப்படம். ராமாயணக் காவியத்தின் ஒரு அங்கமாக இந்தத் திரைப்படம் உருவாகியிருக்கிறது. முப்பரிமாண தொழில்நுட்பத்தில் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

ரூ.500 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல் டிரெய்லர் வெளியான போது, அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் எதிர்மறையான கருத்துக்கள் பலவற்றை பதிவு செய்திருந்தனர். 'நவீன தொழில்நுட்பத்தில் எடுக்க வேண்டும் என்பதை மட்டுமே மனதில் வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது, தெய்வீக அம்சம் எதுவும் இருப்பது போலவோ, பக்தி ரீதியான ஈர்ப்போ படத்தின் மீது வரமறுக்கிறது. ராமராக நடித்திருக்கும் பிரபாஸ், அந்த கதாபாத்திரத்தின் உடல்மொழியை வெளிப்படுத்துவதில் கூட பயிற்சி பெறவில்லை என்றுதான் தோன்றுகிறது. கிராபிக்ஸ் காட்சிகளும் ஈர்க்கும்படியாக இல்லை' என்பது போன்ற பல்வேறு கருத்துக்கள் வெளியாயின.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாவதாக இருந்த 'ஆதிபுருஷ்' படம், ரசிகர்களை கவரும் வகையில் கிராபிக்ஸ் காட்சிகளை மாற்றுவதற்காக ஜூன் 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. ரசிகர்களின் எதிர்மறை கருத்துக்களைக் கண்டு கோபம் கொண்ட படத்தின் இயக்குனர் ஓம் ராவத், "ஒரு படத்தை முழுமையாக பார்க்காமல், வெறும் டிரெய்லரை மட்டும் வைத்து ஒரு முடிவுக்கு வருவது ஏற்புடையதல்ல. இதுபோன்ற காரணங்களால் படத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதை எவரும் சிந்திப்பதில்லை" என்று பொங்கியிருந்தார்.

இருப்பினும் ரசிகர்களின் எதிர்மறை கருத்தால், மீண்டும் படத்தின் கிராபிக்ஸ் பணியில் கவனம் செலுத்த வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக மேலும் ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்து, கிராபிக்ஸ் காட்சிகள் வலுப்படுத்தும் பணி நடைபெற்றது. அவை அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு 'ஆதிபுருஷ்' படத்தின் இறுதி டிரெய்லர் வெளியானது. அந்த டிரெய்லரும் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்பது, அவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பதிவுகள் வெளிப்படுத்தின.

அதில் சில ரசிகர்கள் 'இந்தப் படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும், வீடியோ கேமில் வரும் கதாபாத்திரங்கள் போல வலுவிழந்து காணப்படுகின்றன. இதற்காகவா கிட்டத்தட்ட ரூ.700 கோடியை செலவு செய்திருக்கிறார்கள்' என்பது போல் பதிவிட்டுள்ளனர். இதனால் 'ஆதிபுருஷ்' படக்குழு மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறதாம். அதன் வெளிப்பாடுதான், படத்தில் நடித்த நடிகர் பிரபாஸ், நாயகி கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் ஆகியோரின் திருப்பதி ஏழுமலையான் தரிசனம் என்கிறார்கள்.

'பாகுபலி' படத்தின் மூலமாக இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டவர், பிரபாஸ். அந்தப் படத்திற்குப் பிறகு, அவர் நடிக்கும் அனைத்துப் படங்களும் இந்தியிலும் வெளியாகும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அப்படி தயாரிக்கப்பட்ட 'சாஹோ', 'ராதே ஷ்யாம்' ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து மிகப்பெரிய தோல்வியை தழுவியிருக்கின்றன. அந்த வரிசையில் 'ஆதிபுருஷ்' படம் இணைந்து விடக்கூடாது என்பது பிரபாஸின் எண்ணம். அதற்காகத்தான் அவர் திருப்பதி ஏழுமலையானின் மீது பாரத்தை இறக்கி வைக்க வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்தியின் முன்னணி நடிகைகளாக இருக்கும் தீபிகா படுகோன், ஆலியாபட் ஆகிய இருவரையும் தாண்டி, 'ஆதிபுருஷ்' படத்தில் சீதையாக நடிக்கும் வாய்ப்பு, கீர்த்தி சனோனுக்கு வழங்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் ஆரம்பத்தில் சீதையாக நடிக்க தீபிகா படுகோன் பெயர்தான் பரிசீலனையில் இருந்தது. அதன்பிறகு சில காரணங்களால் கீர்த்தி சனோனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு தவறாக அமைந்து விடக்கூடாது என்பது கீர்த்தி சனோனின் எண்ணமாக உள்ளது. அதனால் அவரும் படத்தின் வெற்றியை பரிதவிப்புடன் எதிர்நோக்கி இருக்கிறார்.

இந்தியில் ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கிய நிலையில், ஓம் ராவத்துக்கு அடுத்த படமே பிரமாண்டமாக அமைந்தது. முதல் படமான 'தன்ஹாஜி' என்ற வரலாற்று படம் பெரிய வெற்றியைப் பெற்றது. ரூ.120 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.325 கோடியை ஈட்டியது. அந்தப்படம் கொடுத்த நம்பிக்கையில் 'ஆதிபுருஷ்' படத்தை இயக்க முன்வந்தாா். அதோடு படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் மாறினார். படம் தோல்வி அடைந்தால், இனி பட வாய்ப்புகள் எப்படி அமையுமோ என்ற பயம் அவருக்குள் இருக்கிறது.

இப்படி படத்தின் நாயகன், நாயகி, இயக்குனர் அனைவருக்கும் வெற்றி அவசியம் என்ற நிலையில், 'ஆதிபுருஷ்' பற்றிய ரசிகர்களின் எதிர்மறை விமர்சனங்கள், அவர்கள் அனைவரையும் கலக்கம் அடையச் செய்திருக்கிறது. அவர்களின் கலக்கம் நீங்குமா? நீடிக்குமா? என்பதை அறிய வருகிற வெள்ளிக்கிழமை வரை காத்திருக்கத்தான் வேண்டும்.


Next Story