'டைட்டானிக்' கனவு வீடு கட்டிய விவசாயி


டைட்டானிக் கனவு வீடு கட்டிய விவசாயி
x

உலகின் மிகப்பெரிய ஆடம்பரமான பயணிகள் கப்பல் என்று வர்ணிக் கப்பட்ட டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தின்போதே அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி மூழ்கி போனது. அதில் பயணித்த 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த துயர சம்பவம் நடந்தது. அதனை மையப்படுத்தி 1997-ம் ஆண்டு எடுக்கப்பட்ட டைட்டானிக் படம் உலகின் கவனத்தை ஈர்த்தது. அந்த படத்தை பார்த்து பிரமித்து போனவர்களில் மிண்டு ராயும் ஒருவர். டைட்டானிக் படத்தில் வரும் கப்பலை போன்றே கனவு வீட்டை கட்ட தீர்மானித்தார்.

விவசாய குடும்பத்தில் பிறந்த அவருடைய ஆசை அவ்வளவு எளிதில் நிறைவேறிடவில்லை. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் போராடி தனது டைட்டானிக் கனவு வீட்டுக்கு உருவம் கொடுத்துள்ளார். 3 அடுக்கு மாடியுடன் கப்பல் போன்ற தோற்றத்தில் அவருடைய வீடு காட்சி அளிக்கிறது. இன்னும் கட்டுமானம் முழுமை பெறவில்லை. அதற்குள் இவருடைய டைட்டானிக் வீடு பிரபலமாகிவிட்டது.

மிண்டு ராயின் பூர்வீகம் மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பார்கனாஸ் மாவட்டத்திலுள்ள ஹெலன்சா கிராமம். 2010-ம் ஆண்டு டைட்டானிக் வீட்டின் கட்டுமான பணியை தொடங்கி உள்ளார்.

போதிய பணம் இல்லாததால் வீட்டை கட்டி முடிப்பதற்கு பல ஆண்டுகள் ஆகிவிடும் என்று அப்போதே முடிவு செய்துவிட்டார். ஆனாலும் மனம் தளராமல் நிதியை திரட்டினார். கட்டுமான பொறியாளர்களை சந்தித்து தனது கனவு வீடு பற்றி விவரித்திருக்கிறார்.

ஆனால் அவரிடம் போதிய பணம் இல்லை என்பதை தெரிந்து கொண்டதால் எவரும் வீட்டை கட்டிக்கொடுப்பதற்கு முன்வரவில்லை. அதனால் தானே முன்னின்று வீட்டை கட்டி முடிப்பது என்று முடிவு செய்தவர் பணம் திரட்டுவதற்காக நேபாளத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு கட்டுமான தொழிலை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

பணம் திரட்டுவதற்கும், கட்டுமான தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்வதற்கும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார். மூன்று ஆண்டுகள் அங்கு பணி புரிந்துவிட்டு சொந்த ஊர் திரும்பி விட்டார். அங்கு சேமித்த பணத்தை கொண்டு வீட்டின் கட்டுமான வேலையை தொடர்ந்தார். இப்போது கட்டுமான பணிக்கு இடையே எலெக்ட்ரிக் ரிக்ஷா ஓட்டுகிறார். அதில் கிடைக்கும் வருமானத்தை கட்டுமானத்திற்கு பயன்படுத்துகிறார்.

கணவரின் டைட்டானிக் கனவு வீடு திட்டம் முழுமை பெற்றுக்கொண்டிருப்பதை பார்த்து மனம் பூரித்து போய் இருக்கும் மனைவி ஹிடி கூறுகையில், ''இதுவரை வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகி இருக்கிறது என்று கணக்கு பார்க்கவில்லை. எப்படியும் ரூ.15 லட்சம் வரை செலவாகி இருக்கும் என்று கருதுகிறோம். வீடு கட்ட தொடங்குவதற்கு முன்பு நாங்கள் மிகவும் ஏழ்மையில் இருந்தோம். மகள் பிறந்த பிறகு குத்தகைக்கு நிலத்தை வாங்கி காய்கறிகளை பயிரிட ஆரம்பித்தோம். பின்னர் மாமனாரிடம் இருந்து சிறிது நிலத்தை பெற்றோம். அதில் தேயிலைத் தோட்டத்தைத் தொடங்கினோம். இப்போது மிண்டு எலெக்ட்ரிக் ரிக்ஷா ஓட்டுகிறார். அது அவருக்கு கூடுதல் பணத்தைப் பெற்றுத் தரும்'' என்கிறார்.

39 அடி நீளம், 13 அடி அகலம், 30 அடி உயரம் என 3 மாடிகள் கொண்டதாக டைட்டானிக் வீடு மிளிருகிறது. கட்டுமான பணியை விரைவாக முடித்துவிட்டு கனவு வீட்டுக்குள் குடியேறிவிட வேண்டும் என்பது மிண்டுவின் விருப்பமாக இருக்கிறது.

"அடுத்த இரண்டு வருடங்களுக்குள் வீட்டு வேலையை முடித்துவிட்டு அங்கு குடியேறிவிடுவேன் என்று நினைக்கிறேன். வீட்டின் ஒரு பகுதியில் டீக்கடை நடத்த விரும்புகிறேன். கப்பலின் நேர்த்தியான வடிவமைப்பை பிரதிபலிக்கும் மரவேலைப்பாடுகளும், படிக்கட்டுகளும் இந்த கப்பல் வீட்டில் இடம் பெறும்'' என்கிறார், மிண்டு.

மிண்டுவின் மகன் கிரண் ராய் கூறுகையில், "தொலைதூரத்தில் இருந்து வந்து எங்கள் வீட்டை புகைப்படம் எடுத்து செல்வது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைய பேர் தொலைபேசி வழியாகவும், நேரில் சந்தித்தும் நலம் விசாரிக்கிறார்கள். எனது தந்தையின் கனவை நனவாக்க நிதி திரட்டி கொடுக்க விரும்புகிறேன்'' என்கிறார்.


Next Story