சுற்றுச்சூழலை காக்கும் நீல நிற சாலை


சுற்றுச்சூழலை காக்கும் நீல நிற சாலை
x
தினத்தந்தி 9 Jun 2023 8:15 PM IST (Updated: 9 Jun 2023 8:15 PM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுப்புற மாசை கட்டுப்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், புவி வெப்பமயமாதலை தடுக்கும் முயற்சியின் ஒரு அங்கமாகவும் மேற்கு வங்காள மாநிலத்தில் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.

உலகமெங்கும் சாலைகள் கருப்பு நிறத்தில்தான் காட்சி அளிக்கின்றன. இப்போது கத்தார் போன்ற வெளிநாடுகளில் சில இடங்களில் நீல நிறத்திலும் சாலைகள் காட்சி அளிக்க தொடங்கி இருக்கின்றன. சமீபத்தில் இந்தியாவிலும் ஒரு இடத்தில் நீல நிறத்துடன் சாலை மிளிர்ந்து கொண்டிருக்கிறது. மேற்கு வங்காள மாநிலம் கிழக்கு பர்தாமான் மாவட்டத்தில் உச்சாலன் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட ரெய்னா என்ற கிராமத்தில் அந்த சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.

குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை கொண்டு இந்த சாலை கட்டமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். 320 மீட்டர் நீளம் கொண்ட இந்த சாலை அந்த பகுதியின் அழகை மேலும் மெருகூட்ட செய்திருக்கிறது. ஆனால் அழகை மட்டுமே கருத்தில் கொண்டு அது உருவாக்கப்படவில்லை. பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுப்புற மாசை கட்டுப்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், புவி வெப்பமயமாதலை தடுக்கும் முயற்சியின் ஒரு அங்கமாகவும் இந்த சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக கருப்பு நிற சாலைகளில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்கும். அதற்கு சாலைகள் கருப்பு நிறத்தில் இருப்பதுதான் காரணம். ஏனெனில் கருப்பு நிறம் சூரிய கதிர்வீச்சை அதிகம் உறிஞ்சும். அதே வேளையில் அதிக வெப்பத்தை வெளியிடவும் செய்யும். குறிப்பாக சாலையோரங்களில் மரங்கள் இல்லையென்றால் சாலையில் இருந்து வெளிப்படும் வெப்பம் மேலும் அதிகரிக்கும்.

புவி வெப்பமடைதல் பிரச்சினை உலகமெங்கும் விஸ்வரூபமெடுத்துக்கொண்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை உலக நாடுகள் பலவும் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாக அதிக வெப்பத்தை உமிழும் கருப்பு நிற சாலைகளுக்கு மாற்றாக நீல நிற சாலைகள் அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

"இதுபோன்ற சாலைகள் பொதுவாக பாலைவனத்தில்தான் காணப்படுகின்றன. ஏனெனில் அந்த பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருப்பதால் சாலையில் போடப்பட்டிருக்கும் தார் உருக வாய்ப்புள்ளது. இந்த சாலையில் தாருடன் பிளாஸ்டிக் கலப்பதால் தண்ணீர் உட்புகுவதை குறைக்கும். சூரிய கதிர்கள் நேரடியாக சாலையை சேதப்படுத்தாது.

நீர் உட்புகாத, எளிதில் வெப்பமடையாத தன்மைக்கு சாலை மாறும். மற்ற சாலையை விட இதன் ஆயுள் இரண்டு, மூன்று மடங்கு அதிகரிக்கும். மழை காலத்தில் சாலைகளில் நீர் தேங்குவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு'' என்பது சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள என்ஜினீயரின் கருத்தாக உள்ளது.


Next Story