சிறப்பு சேர்க்கும் நாணயங்கள்


சிறப்பு சேர்க்கும் நாணயங்கள்
x

வரலாறு, கலாசாரம், பண்பாட்டுடன் தொடர்புடைய நிகழ்வுகளை நினைவு கூரும் நோக்கத்துடனும், பிரபலமான ஆளுமைகளை கவுரவிக்கும் வகையிலும் மத்திய அரசு பல்வேறு காலகட்டங்களில் சிறப்பு நாணயங்களை வெளியிட்டுள்ளது.

தற்போது பாராளுமன்றம் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் புதிய 75 ரூபாய் நாணயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் அசோக தூண் சிங்கம் சின்னமும், மறு புறத்தில் பாராளுமன்ற கட்டிடமும் இடம் பெற்றுள்ளது. நாணயத்தின் சுற்றுப்புறத்தில் 'இந்தியா' என்று ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதப்பட்டுள்ளது. இதுவரை வெளியிட்டுள்ள சிறப்பு நாணயங்களில் சில முக்கியமானவை உங்கள் பார்வைக்கு...

விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள்:

விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அரசு 2013-ம் ஆண்டு ஐந்து ரூபாய் மற்றும் 150 ரூபாய் நாணயங்களை வெளியிட்டது. அந்த நாணயத்தில் விவேகானந்தரின் உருவப்படமும், இடப்புறம், வலப்புறத்தில் அவர் பிறப்பு, இறப்பை குறிப்பிடும் வகையில் 1863, 1902 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. சுற்றுப்புறத்தில் சுவாமி விவேகானந்தர் 150-வது பிறந்தநாள் என்று ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதப்பட்டிருந்தது. மறுபுறம் அசோக தூண் சிங்கம் இடம் பெற்றிருந்தது.

அன்னை தெரசாவின் 100-வது பிறந்தநாள்

அன்னை தெரசாவின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு 2010-ம் ஆண்டு மத்திய அரசு 5 ரூபாய் சிறப்பு நாணயத்தை வெளியிட்டது. இந்த நாணயத்தில் ஒரு புறத்தில் அன்னை தெரசாவின் உருவப்படமும் அதன் கீழே 1910-2010 என குறிப்பிடப்பட்டிருந்தது. நாணயத்தின் ஓரத்தில் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் 'அன்னை தெரசாவின் பெயரும், பிறந்த நூற்றாண்டு' என்ற வாசகமும் பொறிக்கப்பட்டிருந்தது.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள்:

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, தேசத் தந்தைக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் 2019-ம் ஆண்டு 150 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டது. அந்த நாணயத்தில் ஒரு பக்கத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படமும், மறு பக்கத்தில் அசோக தூணின் சிங்க உருவமும் இடம்பெற்றிருந்தன.

தண்டி யாத்திரையின் 75-வது ஆண்டு

உப்புக்கு வரி விதித்த ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற தண்டி யாத்திரையின் 75-வது ஆண்டு நினைவாக 2005-ம் ஆண்டு 5 ரூபாய் சிறப்பு நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டது. அந்த நாணயத்தின் ஒருபுறம் காந்தியடிகள் தண்டியாத்திரைக்கு புறப்பட்டு சென்ற நிகழ்வை நினைவு கூரும் உருவப்படமும், அதன் கீழே 1930-2005 எனவும், நாணயத்தின் சுற்றுப்புறத்தில் தண்டியாத்திரை 75-ம் ஆண்டு என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது. நாணயத்தின் மறுபுறம் அசோக தூண் சிங்கம் இடம்பெற்றிருந்தன.


Next Story