சூரிய சக்தியில் இயங்கும் சக்கர நாற்காலி
மின்சாரத்திற்கு மாற்றாக சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் ஆற்றலை சேமித்து அதன் மூலம் இயங்கும் சாதனங்களை தயாரிக்கும் ஆர்வம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
திரிபுரா மாநிலத்தை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் இரண்டு பேர் சூரிய சக்தியில் செயல்படும் சக்கர நாற்காலியை தயாரித்து இருக்கிறார்கள்.
அங்குள்ள ஐ.சி.எப்.ஏ.ஐ பல்கலைக்கழகத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையத்தின் அங்கமாக மின் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் சாந்தனு ஆச்சார்யா, மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையின் உதவிப் பேராசிரியர் பயல் டெப் ஆகியோரின் கூட்டு முயற்சியில் இந்த சக்கர நாற்காலி வடிவமைக்கப்பட்டுள்ளது. முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக இயக்கும் வகையில் இலகுவான கட்டமைப்பை கொண்டுள்ளது.
இதுகுறித்து பேராசிரியர் சாந்தனு ஆச்சார்யா கூறுகையில், "சூரிய சக்தியில் இயங்கும் இந்த சக்கர நாற்காலியை உருவாக்க சுமார் ஒரு வருடம் ஆனது. முதலில், நாங்கள் முன்மாதிரி ஒன்றை உருவாக்கினோம். அதன் செயல்பாடு பற்றி அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்களை பெற்றோம். அதன்பிறகு முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் சவுகரியமாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக இரண்டாவது மாதிரியை உருவாக்கி உள்ளோம். பெரும்பாலான சக்கர நாற்காலிகள் அதிக எடை கொண்டிருக்கின்றன.
ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அதனை நகர்த்துவதற்கு முதியோர்கள் சிரமப்பட வேண்டி இருக்கிறது. அல்லது மற்றவர்களின் துணையை நாட வேண்டி இருக்கிறது. அதனால் சக்கர நாற்காலியின் வடிவமைப்பில் சில மாறுதலை செய்துள்ளோம். வீட்டில் இருந்து இந்த நாற்காலியில் கிளம்பினால் சூரிய ஒளி மட்டுமே தேவை.
சூரிய ஒளி இல்லாத நிலையில் சார்ஜ் செய்து பயன்படுத்துவதற்கு ஏதுவாகவும் வடிவமைத்துள்ளோம். இந்த நாற்காலி பயன்பாட்டுக்கு வரும்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்கிறார்.