சோலாரில் இயங்கும் மின்சார ஆட்டோ
ஆட்டோ இயங்குவதற்கு டீசல்-பெட்ரோல் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலை இப்போது பரவலாக இல்லை. பெரும்பாலான ஆட்டோக்கள் சி.என்.ஜி, எல்.பி.ஜி போன்ற கியாஸ்களில் இயங்குகின்றன.
தற்போது மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோக்களும் உலா வரத்தொடங்கி இருக்கின்றன. அதற்கு அடுத்தக்கட்டமாக சூரிய சக்தியில் இயங்கும் சோலார் பேனல்கள் மூலம் செயல்படும் ஆட்டோவை ஓட்டி வருகிறார், ஸ்ரீகாந்த் பத்ரா. இவர் மின்சாரத்தில் இயங்கும் தனது ஆட்டோவை சோலாருக்கு மாற்றி இருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே சொல்ல கேட்போம்.
''நான் 25 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். ஆரம்பத்தில் டீசல் என்ஜினில் ஆட்டோவை இயக்கினேன். அப்போது டீசலுக்கே அதிக தொகை செலவானது. ஒரு நாளைக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பாதித்தேன். அந்த தொகையில் குடும்பத்தை நடத்த முடியவில்லை. குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்தை கூட செலுத்த முடியவில்லை.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மின்சார ஆட்டோ வாங்கினேன். ஆனால் குறைந்த செயல்திறன் கொண்ட பேட்டரியாக இருந்ததால் சார்ஜிங் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் சார்ஜிங் செய்து ஆட்டோ ஓட்டுவது சவாலாக மாறியது. திடீரென்று பழுது ஏற்பட்தால் பயணிகளுக்கும் அசவுகரியமானது. பகல் நேரங்களில் கூட சாலையில் ஆட்டோவை சரியாக ஓட்டமுடியவில்லை'' என்பவர் மின்சார ஆட்டோவை மகளின் வழிகாட்டுதலுடன் சோலார் ஆட்டோவாக மாற்றி அமைத்திருக்கிறார்.
''ஆறாம் வகுப்பு படிக்கும் என் மகள் யூடியூப் பார்த்து என் பிரச்சினைக்கான தீர்வை முன்வைத்தாள். எலெக்ட்ரிக் ஆட்டோவை சோலாரில் இயங்கும் வாகனமாக மாற்றினால் பேட்டரி சார்ந்த பிரச்சினை ஏற்படாது என்றாள். அவளது ஆலோசனையை ஏற்று ஆட்டோவை மாற்றி அமைத்தேன். இப்போது எரிபொருள் நிரப்புவது, பேட்டரி செயல் திறன் குறைபாடு, சார்ஜிங் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட்டுள்ளேன். சூரிய சக்தியை பயன்படுத்தி இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமலும் இருக்கிறது'' என்கிறார்.
ஸ்ரீகாந்த் பத்ரா, ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அடுத்த நாயஹர் பகுதியை சேர்ந்தவர். குடும்ப சூழ்நிலை காரணமாக 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டார். தொழில் நிமித்தமாக புவனேஸ்வரில் குடும்பத்துடன் வசிக்கிறார். சோலார் ஆட்டோவுக்கு மாறிய பிறகு தன்னால் அதிகம் சம்பாதிக்க முடிவதாகவும் சொல்கிறார்.
''சூரிய சக்தியில் இயங்கும் என் ஆட்டோவை முழுமையாக சார்ஜ் செய்தால் 140 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடும். பயணிகளுக்கு சுமுகமான பயணத்தையும் இந்த ஆட்டோ வழங்குகிறது. இப்போது தினமும் ரூ.1,300 முதல் ரூ.1,500 வரை சம்பாதிக்கிறேன். மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துகிறேன்'' என்கிறார்.
இப்போது எரிபொருள் நிரப்புவது, பேட்டரி செயல் திறன் குறைபாடு, சார்ஜிங் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட்டுள்ளேன். சூரிய சக்தியை பயன்படுத்தி இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமலும் இருக்கிறது