மழைநீர் சேமிப்பில் வருமானம்


மழைநீர் சேமிப்பில் வருமானம்
x

நாசா அளித்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒர் ஆய்வு மழைநீர் சேகரிப்பின் மூலம் பணத்தைச் சேமிக்க முடிவது மட்டுமல்லாமல், வருமானமும் ஈட்ட முடியும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.

இடநெருக்கடியான வீடுகளில்கூட மாடியில் மழைநீரைச் சேகரிப்பதன் மூலம் நிறைய பலன்களைப் பெற முடியும். 750 லிட்டர் அளவு கொண்ட சிறிய தொட்டியில் மழைநீரைச் சேகரித்தால், அது பெரும் மாற்றத்துக்கு காரணமாக இருக்கும்.

"மாடித் தோட்டத்தில் காய்கறி விளைவிக்கும்போது மழைநீரைச் சேகரிப்பதன் மூலம் நீருக்குச் செலவழிக்கும் கட்டணத்தைக் குறைக்க முடியும், ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளை விளைவிக்க முடியும், இரண்டாவது வருமானத்தைத் தரும் விஷயமாகவும் மாற்ற முடியும்" என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட மூவரில் ஒருவரான டான் ஸ்டவுட். அமெரிக்காவில் உள்ள உடா பல்கலைக்கழகம் நடத்திய இது தொடர்பான ஆய்வு, அர்பன் வாட்டர் ஜர்னல் என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வில் 1997 முதல் 2011-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பெய்த மழை, சேகரிக்கப்பட்ட தண்ணீர், அதனால் கிடைத்த விளைவுகள் போன்றவை பரிசீலிக்கப்பட்டன. பெங்களூரு, புதுடெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை ஆகிய ஊர்களில் சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சேகரிக்கப்பட்ட நீர் வீட்டுத் தேவைக்கும், மாடித் தோட்டத்துக்கும் பயன்படுத்தப்பட்டது. மாடித் தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மூலம் வைட்டமின் சத்து கிடைக்கிறது. அந்தக் காய்கறிகளை விற்பதன் மூலம் கூடுதல் வருமானமும் வாழ்க்கைத் தர மேம்பாடும் சாத்தியம் என்கிறது இந்த ஆய்வு.


Next Story