3 விநாடிகளில் நடந்த ரூபிக்ஸ் கியூப் சாதனை


3 விநாடிகளில் நடந்த ரூபிக்ஸ் கியூப் சாதனை
x
தினத்தந்தி 18 Jun 2023 2:15 PM IST (Updated: 18 Jun 2023 2:15 PM IST)
t-max-icont-min-icon

சிறு வயது முதலே அவரது பெற்றோர் ரூபிக்ஸ் கியூப் பயிற்சியில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள். அதனை ஆட்டிசம் பாதிப்பின் வீரியத்தை குறைக்கும் மருந்தாகவே பெற்றோர் கருதினார்கள். ஆனால் மேக்ஸ் பார்க், ரூபிக்ஸ் கியூப் விளையாட்டை தன் வாழ்வின் ஒரு அங்கமாக்கிவிட்டார்.

2 வயதில் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானவர் அதில் இருந்து மீள்வதற்கான பயிற்சிகளில் ஒன்றாக ரூபிக்ஸ் கியூப்பை கையில் எடுத்து அதில் கின்னஸ் சாதனையும் படைத்துவிட்டார். அமெரிக்காவின் கலிபோர்னியா அடுத்த லாங் பீச் பகுதியை சேர்ந்த அவரது பெயர் மேக்ஸ் பார்க்.

சிறு வயது முதலே அவரது பெற்றோர் ரூபிக்ஸ் கியூப் பயிற்சியில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள். அதனை ஆட்டிசம் பாதிப்பின் வீரியத்தை குறைக்கும் மருந்தாகவே பெற்றோர் கருதினார்கள். ஆனால் மேக்ஸ் பார்க், ரூபிக்ஸ் கியூப் விளையாட்டை தன் வாழ்வின் ஒரு அங்கமாக்கிவிட்டார். உலக அளவில் நடக்கும் ரூபிக்ஸ் கியூப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்.

அதிலும் மைல் கல்லாக சமீபத்தில் மூன்றே விநாடிகளில் ரூபிக்ஸ் கியூப் புதிருக்கு தீர்வு கண்டுபிடித்து நடுவர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த ரூபிக்ஸ் கியூப் விளையாட்டு ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார். 3x3x3 சதுர அளவு கொண்ட ரூபிக்ஸ் கியூப்பை 3.13 விநாடிகளில் சரி செய்து கின்னஸ் உலக சாதனையை முறியடித்துவிட்டார்.

அவர் இந்த சாதனையை முறியடித்த தருணத்தில், ஸ்கோர்போர்டில் காட்டப்பட்ட நேரத்தைக் கண்டு அங்கு இருந்தவர்கள் அனைவரும் வியப்படைந்தனர். இன்ப அதிர்ச்சியில் திகைத்தனர்.

இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு சீனாவின் யுஷெங் டு என்பவர் ரூபிக்ஸ் கியூப்பை 3.47 வினாடிகளில் தீர்வு கண்டதுதான் இதுநாள் வரை கின்னஸ் சாதனையாக பதிவாகி இருக்கிறது. அதனை முறியடித்து மேக்ஸ் பார்க் அந்த சாதனையின் பிதாமகனாக தன்னை மாற்றிக்கொண்டுவிட்டார். அத்துடன் 'ஹால் ஆப் பேம்' பட்டியலிலும் இடம் பிடித்து இருக்கிறார். கின்னஸ் உலக சாதனைகள் பட்டம் பெற்ற உலகின் மிக சிறந்த நபர்களும், வரலாற்றில் நம்ப முடியாத சாதனை படைத்தவர்களும் இதில் இடம்பெறுவார்கள்.

2022-ம் ஆண்டு 1 நிமிடம் 35 வினாடிகளில் 7x7x7 கன சதுரம் கொண்ட ரூபிக் கியூப் புதிருக்கு தீர்வளித்து சாதனை படைத்தார். 4x4x4 கன சதுரம், 5x5x5 கன சதுரம் கொண்ட ரூபிக் கியூப்புக்கும் தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளார். 400-க்கும் மேற்பட்ட ரூபிக்ஸ் கியூப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். மேலும் 2020-ம் ஆண்டு 'தி ஸ்பீட் கியூபர்ஸ்' என்ற நெட்பிக்ஸ் ஆவணப்படத்திலும் இடம்பெற்றுள்ளார்.

ரூபிக் புதிரை தீர்ப்பது தன் மகனுக்கு நல்ல சிகிச்சையாக இருந்ததாகவும், அவர் வளர்ச்சியடைய உதவியதாகவும் மேக்ஸ் பார்க்கின் பெற்றோர் ஷான் - மிகி கூறினார்கள். மேலும், ''ஒரு காலத்தில் மேக்ஸால் தண்ணீர் பாட்டிலை கூட திறக்க முடியவில்லை. ஆனால் இப்போது ரூபிக்ஸ் புதிரை தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவதும், சாதனை படைப்பதும் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது'' என்றும் சொல்கிறார்கள்.


Next Story