சிறைக்கு சென்று சாப்பிடலாமா?
கர்நாடக மாநிலம் பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே அவுட்டில் மத்திய சிறைச்சாலை உணவகத்தில் சாப்பிட்ட அனுபவங்களை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் பகிர்கிறார்கள்.
சிறைக்கு சென்று அங்கு பரிமாறப்படும் உணவை ருசிக்க யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால் சிறைச்சாலை சூழலில் அமர்ந்து உணவு சாப்பிடும் அனுபவம் எப்படி இருக்கும் என்றாவது யோசித்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்திருக்கிறது, ஒரு உணவகம். கர்நாடக மாநிலம் பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே அவுட்டில் அந்த உணவகம் அமைந்திருக்கிறது. அதன் பெயர் என்ன தெரியுமா? 'மத்திய சிறைச்சாலை உணவகம்'.
சிறைச்சாலையை போன்ற கட்டமைப்புடன் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் நுழைவு வாயில் சிறைச்சாலை கதவு போலவே உள்ளது. அதன் மேல் பகுதியில் 'சென்ட்ரல் ஜெயில்' என்று எழுதப்பட்டிருக்கிறது.
கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றால் ஜெயில் கம்பிகளை கொண்ட கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவை ஜெயிலுக்குள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த உணவகத்தை தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார்கள். சுவர்களில் ஆங்காங்கே உருவங்கள், எழுத்துக்கள் கருப்பு மையினால் கிறுக்கி வைக்கப்பட்டுள்ளன. சிறைக்கைதிகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதுபோல் அந்த சித்திரங்கள் அமைத்திருக்கின்றன.
இந்த உணவகத்தில் உணவு பரிமாறுபவர்களும் சிறைக்கைதிகள்தான். ஆம்..! சிறைக்கைதிகள் போலவே பணியாளர்கள் உடை அணிந்து உணவு வழங்கி உபசரிக்கிறார்கள். சாப்பிடுவதற்கு வழங்கப்படும் தட்டும் சிறைக்கைதிகள் பயன்படுத்துவதுதான்.
அலுமினியத்தில் தட்டு மட்டுமின்றி உணவு சப்ளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் காட்சி அளிக்கின்றன. தண்ணீரும் அலுமினிய குவளையில் வழங்கப்படுகிறது. உணவை ஆர்டர் எடுப்பவர் போலீஸ்காரர் தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். அங்கு வழங்கப்படும் மெனுவிலும் சிறை தண்டனைகளின் பெயர்கள் உணவுகளாக அச்சிடப்பட்டிருக்கின்றன.
போலீஸ்காரர்கள்-கைதிகள் கெட்டப், சிறைகளில் இருப்பது போன்ற மேஜைகள், அலுமினிய பாத்திரங்கள், சிறைக்கம்பிகள் என சிறைச்சாலைக்குள் அமர்ந்து உணவு சாப்பிடுவது போன்ற உணர்வை அந்த உணவகம் ஏற்படுத்துவதாக அங்கு சாப்பிட்டுவிட்டு திரும்புபவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த சிறை உணவகம் ஏற்கனவே பிரபலமாகிவிட்ட போதிலும் தொழிலதிபரான ஹர்ஷ் கோயங்கா என்பவர், இந்த சிறை உணவக வீடியோவை சமூகவலைத்தளத்தில் பகிர மீண்டும் டிரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் சிறை உணவகத்திற்கு செல்லும் ஒருவர் அங்கு சாப்பிட்டுவிட்டு கருத்து தெரிவிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
நிறைய பேர் இந்த உணவகத்தில் சாப்பிட்ட அனுபவங்களை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் பகிர்கிறார்கள். அதனால் இந்த உணவகம் இன்னும் பிரபலமாகிவிட்டது. சுற்றுலா பயணிகளின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது.