85 வயது முதியவரின் வலிமை


85 வயது முதியவரின் வலிமை
x

உடற்பயிற்சி வழக்கத்தையும், முறையான உணவுப்பழக்கத்தையும் பின்பற்றி வந்தால் முதுமையிலும் உடல்-மன ரீதியில் வலிமையாக இருக்கலாம் எனபதற்கு முன்னுதாரணமாக இருக்கிறார், நிஹாங் ஜதேதார் சத்னம் சிங்.

85 வயதாகும் இந்த முதியவர் இளமை துடிப்புடன் உற்சாகமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். உடல் வலு கொண்ட இளைஞர்கள் கூட தூக்குவதற்கு சிரமப்படும் பொருட்களை சர்வசாதாரணமாக தூக்குகிறார். சமீபத்தில் தனது பற்களால் சுமார் 1.25 குவிண்டால் (125 கிலோ) எடை கொண்ட பொருளை தூக்கி உலக சாதனை படைத்துள்ளார். தன்னால் அதிக எடை கொண்ட டெம்போ மற்றும் டிரக்குகளை கூட இழுக்க முடியும் என்கிறார்.

இந்த வயதில் உடலை வலுப்படுத்தி சாதிக்க ஆசைப்படுவதற்கான காரணம் குறித்து கேட்டபோது, ''முதியவர் ஒருவர் டி.வி. நிகழ்ச்சியில் தனது பற்களை பயன்படுத்தி 40 கிலோ எடை கொண்ட பொருளை தூக்குவதை பார்த்தேன். தன்னாலும் அதுபோல் செய்ய முடியும் என்று உள் உணர்வு சொன்னது. அவரை போலவே வேறு ஏதாவது பொருளை தூக்கலாம் என்று முடிவு செய்தேன்.

முதலில் 25 கிலோ எடை கொண்ட கற்களை சேகரித்து பற்களை கொண்டு தூக்கினேன். எனது பலத்தை வெளிப்படுத்தியபோது பலரும் பாராட்டினார்கள். அதனை எனது திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதி தொடர் பயிற்சியில் ஈடுபட தொடங்கினேன். படிப்படியாக தூக்கும் பொருட்களின் எடையை அதிகரித்தேன். அது மேலும் சில சாதனைகள் செய்வதற்கு வழிவகுத்தது'' என்கிறார்.

நிஹாங் ஜதேதார் சத்னம் சிங் வெறும் பற்களை கொண்டு 709 எடை கொண்ட டிரக்கை இழுத்திருக்கிறார். 45 சீக்கியர்களை ஏற்றிச்சென்ற மற்றொரு டிரக்கை இழுத்தும் பலரையும் திகைக்க வைத்திருக்கிறார். பற்களால் குவிண்டால் கணக்கில் எடை தூக்கும் அசாத்திய திறமையை பார்த்து பாலிவுட் பிரபலங்களும் பாராட்டி இருக்கிறார்கள். அதனால் இணையதளத்தில் பரவலாக பேசப்படும் நபராக மாறிவிட்டார்.


Next Story