எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்..! -ஐ.நா.வில் ஒலித்த 'தமிழ் குரல்'


எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்..! -ஐ.நா.வில் ஒலித்த தமிழ் குரல்
x
தினத்தந்தி 7 April 2023 8:30 PM IST (Updated: 7 April 2023 8:30 PM IST)
t-max-icont-min-icon

இயற்கையை மீட்டெடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட மாசுபட்டிருக்கும் இளைய தலைமுறையினரின் மனதை நல்ல வழியில் மீட்டெடுப்பது மிக மிக முக்கியம்

''சுற்றுச்சூழலை பாதுகாக்க, உலகெங்கிலும் நிறைய தொண்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. இயற்கையை பாதுகாத்து, பத்திரமாக அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைப்பது அவர்களின் நோக்கமாக இருக்கிறது. ஆனால், அதை விட மிக முக்கியமான கடமை ஒன்று இருக்கிறது. மாசுபட்டிருக்கும் இயற்கையை மீட்டெடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட மாசுபட்டிருக்கும் இளைய தலைமுறையினரின் மனதை நல்ல வழியில் மீட்டெடுப்பது மிக மிக முக்கியம். ஏனெனில், மன மாசு தான் உலகின் எல்லா மாசுகளுக்கும் காரணமாகிறது. நம்முடைய எண்ணம் அழகானால், உலகில் எல்லாமே அழகாகும்..!'' என்று கருத்தாக பேச ஆரம்பிக்கிறார், எம்.எல்.ராஜேஷ்.

சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்தவரான இவர், பெட்ரோலிய நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருவதுடன், காந்தி உலக மையம் என்ற தொண்டு அமைப்பையும் நடத்தி வருகிறார். 2010-ம் ஆண்டு, ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, தமிழர் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பணியையும், இளைய தலைமுறையினரின் சிந்தனை மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணியையும் சிறப்பாக செய்து வருகிறது. தமிழர்களின் கலாசாரத்தை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் 'மண்ணும் மரபும்' என்ற கொண்டாட்டத்தையும் நடத்துகிறார்.

இத்தகைய செயல்பாடுகள்தான் இவரை ஐ.நா. சபை வரை அழைத்து சென்றிருக்கிறது. ஆம்..! சமீபத்தில் ஜெனிவாவில் நடந்த ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டதோடு, கூடுதல் நேரம் ஒதுக்கி இவரது உரையை உன்னிப்பாக கேட்டிருக்கிறார்கள். ஐ.நா.சபையில், அழகிய தமிழ் மொழியை 'கணீர்'... 'கணீர்'... என ஒலிக்க செய்தது பற்றி, எம்.எல்.ராஜேஷ் பகிர்ந்து கொள்கிறார்.

''காற்று மாசு, ஒலி-ஒளி மாசு நம் பூமியை வெகுவாக பாதிக்க தொடங்கி இருக்கிறது. இதை நம்மால் உணர முடிகிறது, அதன் பாதிப்பை கண்கூடாக பார்க்க முடிகிறது. அதனால் அந்த பாதிப்புகளில் இருந்து மீள, பல வழிகளில் இயங்குகிறோம். ஆனால்... இவற்றை விட, அதிதீவிரமான மாசுவினால், நம்முடைய உலகம் பாதிக்கப்பட்டு வருகிறது. அதுதான், 'மனம் மாசு'. இதுதான், மற்ற எல்லா மாசுக்களுக்கும் ஆணி வேராகவும் இருக்கிறது.

ஆம்...! இன்றைய இளைஞர்களுக்கு, இயற்கையின் முக்கியத்துவம் புரியவில்லை. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லை. சக மனிதர்களிடம் அன்பு செலுத்தவும், சமூகத்தை மதித்து நடக்கவும் மனமில்லை. அவர்களது மனம், கொஞ்சம் கொஞ்சமாக மாசுபட்டு, ஆரோக்கியமான மனநிலையில் இருந்து விலகி வாழ்கிறார்கள். தீய பழக்கங்களுக்கு அடிமையாவதும் அதிகரித்துவிட்டது. இந்த சமூகத்திற்குள்தான், நாமும் வாழ வேண்டியிருக்கிறது. நம்முடைய பிள்ளைகளும் வாழ இருக்கிறார்கள்.

இந்த மன மாசுவிற்கு, நாம் தீர்வு காணும் பட்சத்தில் அதனால் உருவாகும் மற்ற மாசுக்கள் படிப்படியாக குறைந்துவிடும் என்பதைத்தான், ஐ.நா.சபையில், விளக்கினேன். இந்த விளக்கம், எல்லா நாட்டு பிரதிநிதிகளையும் சிந்திக்க வைத்தது'' என்றவர், தனக்கு கிடைத்த ஒருசில நிமிட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, 'எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்' என்ற தத்துவத்தை முன் வைத்திருக்கிறார். அதுவும், நம் தாய்மொழியான தமிழ்மொழியிலேயே கூறி, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

''அதுவரை, ரஷிய-உக்ரைன் போர் சம்பந்தமான விவாதம் காரசாரமாக நடந்து கொண்டிருந்தது. அதனால் எனக்காக ஒதுக்கப்பட்டிருந்த நேரம், குறைந்து கொண்டே தள்ளிப்போனது. எனக்கான நேரம் வந்ததும், ''எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்'' என தமிழ் மொழியில் பேச ஆரம்பித்தேன். ஐ.நா. சபை தலைவர் தொடங்கி, எல்லா நாட்டு பிரதிநிதிகளும், தலையை தூக்கி வியந்து பார்த்தனர். அதுவரை போர் விவாதத்தினால் துவண்டிருந்தவர்கள், தமிழ் மொழியின் இனிமையினால் உற்சாகம் அடைந்தனர். நம்முடைய தமிழ் மொழிக்கு அப்படி ஒரு சக்தி. மேலும் என்னுடைய கருத்துகளும், அவர்களை வெகுவாக ஈர்த்ததால், அடுத்த நாள் கூடுதலாக விவரிக்க சொன்னார்கள். நானும் விவரித்தேன்.

மனிதர்களின் எண்ணம் ஒன்றை அழகாக்கினால், உலகில் எல்லாவற்றையும் அழகாக்கிவிடலாம் என்ற புரிதலோடு, உலக பிரதிநிதிகள் விடை பெற்றனர்'' என்று அகம் மகிழும் ராஜேஷ், மன மாசுவை விரட்ட புதுப்புது வழிமுறைகளை கையாள்கிறார். கார்ட்டூன் வடிவ கருத்துப்படங்கள், வீடியோ விழிப்புணர்வுகள், குறுங்கதைகள், புத்தகங்கள்... என புதுமையான வழிகளில், ஆரோக்கியமான மன நிலையை உருவாக்குகிறார். குறிப்பாக, இவர் ஆண்டுதோறும் நடத்தி வரும் மண்ணும் மரபும் நிகழ்ச்சி, டீன்-ஏஜ் வயதினரை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அதில் மரபு சார்ந்த விஷயங்களை கொண்டு, இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்துகிறார்.

''ஐ.நா. சபையில், பேசியதற்கு பிறகு 'மனம் மாசு' பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், நான் இந்த கருப்பொருளை முன்னிறுத்தி, கடந்த 13 ஆண்டுகளாக இயங்கி வருகிறேன். இளைஞர், இளம்பெண்களை, மரபு பழக்க வழக்கங்களுக்குள் ஐக்கியப்படுத்துவதனால், ஆரோக்கியமான மனநிலையை உருவாக்க முடியும் என நம்புகிறேன். அதுதான் எங்களது பணியும் கூட. அதற்காகவே 'மண்ணும் மரபும்' நிகழ்ச்சி வருடந்தோறும் நடத்தப்படுகிறது.

இதில், அழியும் தருவாயில் இருக்கும் மரபு விதைகளில் தொடங்கி, பாரம்பரிய விளையாட்டுகள், உணவு வகைகள், பழங்காலத்து மண்பாண்டம் மற்றும் உலோக பாத்திரங்கள்... என எல்லாவற்றையும் காட்சிக்கு வைக்கிறோம். மேலும் இந்த காலத்து டீன் ஏஜ் வயதினர் பார்த்திராத மாட்டு வண்டி, குதிரை வண்டி பயணம், கயிறு இழுத்தல் விளையாட்டுகள், இளவட்டக்கல், கிராமங்களில் மட்டுமே செய்து பரிமாறப்படும் பிரத்யேக உணவுகள் ஆகியவற்றை கொண்டு, திருவிழா கொண்டாட்டமாக நடத்துகிறோம்'' என்றவர், அழியும் நிலையில் இருக்கும் மரபு கலைகள், பாரம்பரிய விளையாட்டுகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறார்.

* யார் கலந்து கொள்ள முடியும்?

எல்லா நாடுகள் சார்பாக, அதனதன் அரசு பிரதிநிதிகள் அழைக்கப்படுவர். கூடவே, அந்தந்த நாட்டில் இயங்கும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதி ஒருவரும் அழைக்கப்படுவார். அந்த வகையில், நான் தொண்டு அமைப்பு நடத்துபவர் என்ற அடிப்படையில், இந்தியாவின் சார்பில் ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொண்டேன். என் நண்பர் மூலமாகவே இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

* உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்?

2012-ம் ஆண்டு, நாங்கள் நடத்திய நிகழ்ச்சிக்கு மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வந்திருந்தார். பொதுவாக, அப்துல் கலாம் எந்த தொண்டு நிறுவன நிகழ்ச்சிகளுக்கும் அவ்வளவு எளிதில் செல்லமாட்டார். ஆனால் நான் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும், எங்களுடைய சேவையை பற்றி புகழ்ந்து பேசியதையும் மிகப்பெரிய கவுரவமாக பார்க்கிறேன்.

* ஐ.நா.சபை பயணத்தில் கிடைத்த சுவாரசியமான அனுபவம் எது?

நான் சென்று வந்ததே சுவாரசியமான அனுபவம்தான். ஏனெனில், இதற்கு முன்பு வரை என்னிடம் பாஸ்போர்ட் கிடையாது. பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர்களைதான், ஐ.நா.சபை கூட்டத்தில் பேச அழைப்பார்கள். இந்நிலையில், நண்பர்களின் உதவியுடன் அவசர அவசரமாக பாஸ்போர்ட் விண்ணப்பித்து வாங்கினேன். மேலும் விமான டிக்கெட், ஜெனிவாவில் தங்கியிருந்தது, மற்ற செலவுகள் என எல்லாவற்றுக்கும் நண்பர்களே உதவி செய்தனர். ஒரு ரூபாய்கூட செலவில்லாமல், ஐ.நா.சபைக்கு சென்றுவந்தது, சுவாரசியம்தானே...?


Next Story