மாம்பழம் சாப்பிடும் போது...


மாம்பழம் சாப்பிடும் போது...
x

‘பழங்களின் ராஜா’ என்று அழைக்கப்படும் மாம்பழத்தை விரும்பாதவர்கள் எவரும் இல்லை.

இது மாம்பழ சீசன் என்பதால் பலரும் மாம்பழத்தை விரும்பி ருசிக்கிறார்கள். ஆனால் மாம்பழங்களை அளவோடுதான் சாப்பிட வேண்டும். அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மாம்பழம் சாப்பிடும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

* சில இடங்களில் மாம்பழங்கள் ஒருவித ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்படுவதால் மாம்பழங்களை வாங்கும்போது கவனம் தேவை. மாம்பழங்களை அப்படியே சாப்பிடுவதும் கூடாது. நன்றாக தண்ணீரில் அலசிவிட்டு, கைகளையும், வெட்டும் கத்தியையும் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

* மாம்பழத்தில் நார்ச்சத்தும், சர்க்கரையும் அதிகம் இருக்கிறது. அதனை அதிகம் உட்கொள்வது வயிற்று எரிச்சல் பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும்.

* ரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் இருக்க மாம்பழத்துடன், பாதாம் பருப்பையும் சேர்த்து உட்கொள்ளலாம். காலை அல்லது மாலை நேர சிற்றுண்டியாக இதனை ருசிப்பது சிறந்தது.

* மாம்பழங்களில் தோல் பகுதியை நீக்கிவிட்டு சாப்பிடுவதுதான் சரியானது. தோல் பகுதியை நீக்க விரும்பாவிட்டால் நடுப்பகுதியில் வெட்டி மாம்பழ கொட்டையை வெளியே எடுத்து சதைப்பகுதியை ருசிக்கலாம்.

* காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மாம்பழம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அந்த நாள் முழுவதும் பசி உணர்வை தூண்டிவிட்டுவிடும். வயிற்றுக்கும் அசவுகரியத்தை ஏற்படுத்திவிடும்.

* மாம்பழங்களை மில்க்ஷேக், ஜூஸ் வடிவில் ருசிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் சர்க்கரையும், பால் பொருட்களும் அடங்கி இருக்கும். அவை உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்க செய்துவிடும்.

* ஒரு நாளைக்கு 100 முதல் 120 கிராமுக்கு மேல் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது குறைந்த கிளைசெமிக் குறீயீடு கொண்ட பழமாக இருந்தாலும் அதிகமாக உட்கொள்ளும்போது அதன் வீரியம் அதிகரிக்க தொடங்கிவிடும். குறிப்பாக கிளைசெமிக் இன்டெக்ஸ் அதிகரித்து இன்சுலின் அளவை விரைவாக அதிகரிக்கவோ, குறைக்கவோ வழிவகுக்கும்.

* மாம்பழம் சாப்பிடுவது செரிமானத்தை அதிகரிக்க செய்யும். இதய நோய் அபாயத்தை குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்றாலும் அதிகமாக சாப்பிட்டால், ஒவ்வாமை மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.


Next Story