பிறப்பில் இரண்டு சாதனைகள் படைத்த 'மும்மூர்த்திகள்'


பிறப்பில் இரண்டு சாதனைகள் படைத்த மும்மூர்த்திகள்
x
தினத்தந்தி 13 April 2023 8:45 PM IST (Updated: 13 April 2023 8:45 PM IST)
t-max-icont-min-icon

பிரசவத்திற்கு 121 நாட்களுக்கு முன்கூட்டியே பிறந்தது, மிகவும் குறைவான எடை கொண்டிருந்தது ஆகிய இரண்டு சவால்களை முறியடித்து மூன்று குழந்தைகளும் நிகழ்வதை பாராட்டி கின்னஸ் சாதனை அமைப்பு இரண்டு சாதனைகள் பட்டியலில் இடம்பெற வைத்துள்ளது.

பெண்ணின் கர்ப்ப காலம் பொதுவாக 40 வாரங்கள் நீடிக்கும். சிலருக்கு 37 வாரம் முதல் 40 வாரங்களுக்குள் பிரசவ வலி எடுத்து குழந்தை பிறக்கும். அப்படி முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகளுக்கு கூடுதல் பராமரிப்பு தேவைப்படும். இன்குபேட்டர் உதவியுடன் குழந்தைகளை கவனிப்பார்கள்.

ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் 22 வாரங்கள் 5 நாட்களிலேயே குழந்தை பெற்றெடுத்துவிட்டார். அதுவும் ஒன்றல்ல.. இரண்டல்ல.. ஒரே சமயத்தில் மூன்று குழந்தைகளை முன்கூட்டியே பெற்றெடுத்து ஆச்சரியப்படுத்திவிட்டார். அந்த குழந்தைகளில் இரண்டு பேர் இரட்டையர்கள் என்பது சிறப்பம்சம்.

அந்த பெண்மணியின் பெயர் மைக்கேலா. இத்தனைக்கும் கர்ப்ப காலத்தில் 19-வது வாரத்தில் முதன் முதலாக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டபோதுதான் மைக்கேலா வயிற்றில் மூன்று குழந்தைகள் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளித்தனர். ஆனால் 3 வாரங்கள் கடந்த நிலையில் அதாவது 22 வாரங்கள் 5 நாட்கள் ஆன நிலையில் மைக்கேலாவுக்கு முதல் குழந்தை பிறந்துவிட்டது.

காலை 10.33 மணிக்கு பிறந்த அந்த குழந்தை 467 கிராம் மட்டுமே எடை கொண்டிருந்தது. இதையடுத்து டாக்டர்கள் குழந்தையை தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பிரசவத்திற்கு இன்னும் நிறைய நாட்கள் இருப்பதால் மற்ற குழந்தைகள் தாமதமாக பிறக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் மைக்கேலாவின் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை.

கர்ப்பப்பை செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. கருப்பைக்குள் இருக்கும் மற்ற குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அவர்களை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுப்பதற்கு டாக்டர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து மதியம் 12 மணி 1 நிமிடத்தில் இரண்டாவது குழந்தையையும், 12 மணி 2-வது நிமிடத்தில் மற்றொரு குழந்தையையும் வெளியே எடுத்தனர். அந்த இரண்டு குழந்தைகளும் இரட்டையர்களாக இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டனர். ஒரு குழந்தை 402 கிராம் எடையும், மற்றொரு குழந்தை 415 கிராம் எடையும் கொண்டிருந்தது.

ஒட்டுமொத்தமாக மூன்று குழந்தைகளும் ஒரு கிலோ 284 கிராம் மட்டுமே எடை கொண்டிருந்தன. குறுகிய கர்ப்ப காலத்தில் பிறந்ததால் குழந்தைகளின் வளர்ச்சி தடைப்பட்டது எடை குறைவதற்கு காரணமாகிவிட்டது. இப்படி குறை பிரசவத்தில் மிகவும் குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகள் உயிர் பிழைப்பது கடினமானது. அதனால் டாக்டர்கள் சிறப்பு கவனம் செலுத்தி குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

சுமார் 216 நாட்கள் அந்த குழந்தைகள் 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஓரளவு உடல் எடை கூடியதும் சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றனர். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பும், மைக்கேலாவின் தாய்மையும் மூன்று குழந்தைகளையும் ஆரோக்கியமானவர்களாக வளர செய்திருக்கிறது. சமீபத்தில் 3 குழந்தைகளும் இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்கள்.

பிரசவத்திற்கு 121 நாட்களுக்கு முன்கூட்டியே பிறந்தது, மிகவும் குறைவான எடை கொண்டிருந்தது ஆகிய இரண்டு சவால்களை முறியடித்து மூன்று குழந்தைகளும் நிகழ்வதை பாராட்டி கின்னஸ் சாதனை அமைப்பு இரண்டு சாதனைகள் பட்டியலில் இடம்பெற வைத்துள்ளது.


Next Story