தங்க மீன் பிரச்சினைகள்
தங்கம் போலப் பளபள என்று இருப்பதாலேதான், 'கோல்டு பிஷ்' என்ற பெயர் இந்த மீன்களுக்கு வந்தது.
மீன் தொட்டி வாங்கி மீன்களை வளர்ப்பது மகிழ்ச்சியான ஒன்று. அதுவும் 'கோல்ட் பிஷ்' என்றழைக்கப்படும் தங்க மீன்களை எல்லோருக்குமே பிடிக்கும். தங்கம் போலப் பளபள என்று இருப்பதாலேதான், 'கோல்டு பிஷ்' என்ற பெயர் இந்த மீன்களுக்கு வந்தது. உலகில் முதன்முதலாகச் சீனாவில்தான் தங்க மீன்கள் கண்டறியப்பட்டதாம். அதுவும் உலகப் புகழ்பெற்ற பயணியான மார்கோ போலோதான் தங்க மீன்களை முதன்முதலில் பார்த்து, அவற்றின் அழகில் மயங்கி உலகின் மற்ற பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தியவர் என்கிறார்கள். சீனாவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே தங்க மீன்கள் இருந்து வருகின்றன.
சீனாவுக்கு வந்த ஐரோப்பிய வியாபாரிகள், அவற்றை பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து சென்றார்கள். அதன் மூலமாகவே உலகெங்கும் தங்க மீன்கள் பரவ தொடங்கின. இன்று உலகில் தங்க மீன்கள் இல்லாத நாடுகளே இல்லை. தங்க மீன்களை வீட்டில் வளர்ப்பது பலருக்கும் பிடித்த ஒன்றாக மாறிவிட்டது. அழகு மட்டுமில்லாமல், அது அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையும் சில பகுதிகளில் நிலவுகிறது.
மக்கள் தங்களின் செல்லப் பிராணிகளாக வளர்க்கும் 'கோல்டு பிஷ்' எனப்படும் தங்க மீன்களை, பொது ஏரிகளில் விட வேண்டாம் என அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தை சேர்ந்த பர்ன்ஸ்வில் நகர அதிகாரிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர். வீட்டில் வளர்க்கப்படும் இந்த தங்க மீன்கள், எரிகளில் மிக பெரிதாக வளர்வதோடு, ஒட்டுமொத்த சூழலியலையும் பாதிக்கிறது. மினிசோட்டா மாகாணத்தில் தங்க மீன்கள் ஆக்கிரமிப்பு உயிரினங்களாக பட்டியலிடப்பட்டு இருக்கின்றன. தங்க மீன்களை பொது ஏரி மற்றும் குளங்களில் விடுவது சட்டத்துக்கு புறம்பானது.
பொதுவாக ஒரு தங்க மீனை வீட்டில் வைத்து வளர்த்தால் அது இரண்டு இன்ச் அளவுக்கு வளரும். ஆனால் அதே மீனை ஏரி போன்ற நீர் நிலைகளில் விட்டால், அது பல மடங்கு பெரிதாக வளரும். அதை பிடிப்பதும் சிரமம். மேலும் தங்க மீன்கள் வேகமாக இனப்பெருக்கம் செய்ய கூடியவை, மற்ற உயிரினங்களை அழித்து ஆதிக்கம் செலுத்த கூடியது எனவும் கூறினர். பர்ன்ஸ்வில் போலவே கர்வர் கவுன்டி பகுதியிலும் இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதாக வனவிலங்கு அதிகாரிகள் கூறினர். கடந்த மாதம் ஒரு சிற்றோடையில் இருந்து சுமார் 50 ஆயிரம் தங்க மீன்களை எடுத்திருக்கிறார்கள். இந்த தங்க மீன் இனம் ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
தங்க மீன்களால் அமெரிக்கா மட்டும் இப்படிப்பட்ட சவால்களை எதிர்கொள்ளவில்லை. மற்ற சில நாடுகளும் இப்பட்டியலில் இருக்கின்றன. ஜெர்மானிய நகரான மியூனிக்கில் உள்ள பொது ஏரி மற்றும் குளங்களில் இருக்கும் தங்க மீன்கள், மற்ற உயிரினங்களை சாப்பிட்டு விடுவதாகவும், எனவே பொது நீர் நிலைகளில் யாராவது தங்கள் செல்ல பிராணிகளான தங்க மீன்களை விட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தது நகர நிர்வாகம். மிகப் பெரிய தங்க மீன்கள் பிரிட்டனின் நீர் நிலைகளிலும் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த 2010-ம் ஆண்டு ஒரு பிரிட்டன் இளைஞர் சுமார் 2.2 கிலோ எடை கொண்ட ராட்சத தங்க மீனை டார்செட்டில் ஒரு ஏரியில் கண்டு பிடித்தது குறிப்பிடத்தக்கது.