சாதம் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சேருமா?
அரிசி ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அதனுடன் அவரவர் பிராந்தியத்தின் உணவு முறைகளையும் பின்பற்ற வேண்டும் என கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் ஓணம் பண்டிகையையொட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு தட்டில் அரிசி சாதம், குழம்பு, கூட்டு வகைகளுடன் வீடியோ பகிர்ந்திருந்தார். அதில், 'சாதம் சாப்பிட்ட பிறகு குற்ற உணர்வா? இருக்காதே' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதனை பார்த்த சிலர் அரிசி சாதம் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சேர்ந்துவிடுமா? என்ற கேள்வியை முன்வைத்தனர். அதற்கு `இல்லை' என்று உறுதியுடன் பதில் அளித்தார். ''நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், அரிசி சாதத்தை தவிர்க்க வேண்டியதில்லை'' என்றும் கூறினார். அதற்கான காரணத்தை விவரிக்கவும் செய்தார்.
''அரிசியில் இருக்கும் மூலப்பொருட்கள் உடலில் கொழுப்பு சேர காரணமாகிவிடும் என்று பலரும் கருதுகிறார்கள். அன்றாட உணவில் இருந்து அரிசியை விலக்கி வைத்தால் சருமம், கூந்தல் மற்றும் செரிமானம் போன்றவற்றின் செயல்பாடுகள் தடைபடும். ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் காலனித்துவ நாடாக நம் நாடு இருந்த சமயத்தில் சாதம் சாப்பிடுவது, கையால் சாப்பிடுவது, தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது போன்ற நமது பூர்வீக பழக்கவழக்கங்கள் அவர்களின் பார்வையில் இழிவாக பார்க்கப்பட்டது. இப்போதும் அதே மனோபாவம் நிறைய பேரிடம் இருக்கிறது. பிரச்சினை மூளையில்தான் இருக்கிறது உணவில் இல்லை. அரிசி நமது அடையாளம், நமது கலாசாரம். நமது வாழ்க்கையின் ஒரு அங்கம். இதனாலேயே சாதம் சாப்பிட்டு திருப்தி அடைகிறோம்.
எந்தவொரு குறிப்பிட்ட அரிசியும் உயர்ந்ததல்ல. அவை ஒவ்வொன்றும் தனித்துவ தன்மை கொண்டவை. அதனால் அரிசி வகைகளை ஒப்பிடக்கூடாது. உங்கள் பிராந்தியத்தில் விளையும் அரிசி உங்களுக்கு சிறந்தது. பீகாரின் மார்ச்சா அரிசி முதல் மகாராஷ்டிராவின் வடா கோலம் அரிசி, கேரளாவின் நவரா அரிசி வரை எல்லாமே சிறந்தவைதான். அரிசி ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அதனுடன் அவரவர் பிராந்தியத்தின் உணவு முறைகளையும் பின்பற்ற வேண்டும்'' என்றும் கூறுகிறார்.