தென்னிந்திய நடிகர்களை விரும்புகிறதா பாலிவுட்
ஒரு காலத்தில் பாலிவுட்டின் நாயகர்கள் அனைவரும் உயர்வானவர்கள் போலவும், மற்ற இந்திய மொழி திரைப்பட நடிகர்கள் அனைவரும் அவர்களுக்கு கீழே உள்ளவர்கள் போலவும் ஒரு தோற்றம் இருந்தது. மேலும் உலக அரங்கில் இருந்து பார்க்கும்போது, இந்திய சினிமா என்றாலே அது 'பாலிவுட்' சினிமா மட்டும்தான் என்ற எண்ணமும் காணப்பட்டது. ஆனால் அந்த எண்ணத்தை கடந்த சில வருடங்களில் உடைத்தெறிந்திருக்கிறது, தென்னிந்திய சினிமாக்கள்.
'இந்திய சினிமா என்றாலே நாங்கள்தான்' என்று மார்தட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு கூட இதுவரை கிடைக்காத ஆஸ்கார் விருது, தென்னிந்தியாவில் இருந்து உருவான இரண்டு திரைப்படங்களுக்கு கிடைத்திருக்கிறது.
பாலிவுட்டை தாண்டி, தென்னிந்திய சினிமாக்களின் வீரியத்தை உலக அரங்கில் கொண்டு போய் நிறுத்திய பெருமை, இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியையேச் சேரும். அவர் இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' திரைப் படம், இரண்டு பாகங்களாக வெளியாகி, இந்திய திரையுலகை மட்டுமல்ல, உலக சினிமாத் துறையையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
பின்னர் கன்னடத்தில் இருந்து வெளியான'கே.ஜி.எப்.' திரைப்படம், வசூலில் மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. பாலிவுட் சினிமாக்களை படைக்காத வசூல் சாதனையை அந்தப் படம் ஈட்டியது. 'பாகுபலி', 'கே.ஜி.எப்.', 'ஆர்.ஆர்.ஆர்.', 'புஷ்பா', 'காந்தாரா' போன்ற தென்னிந்திய படங்களையும், அதன் திரைக்கதை அமைப்பையும், பாலிவுட் ரசிகர்களும் ஏற்றுக்கொண்டு விட்டனர்.
அதன் வெளிப்பாடே, கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக பாலிவுட்டில் வெளியாகும் எந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. மாறாக, பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களாக திகழும், அக்ஷய்குமார், சல்மான்கான், அமீர்கான், அஜய்தேவ்கன், ஹிருத்திக்ரோஷன் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்கள் பல கோடி இழப்பை சந்தித்தன. ரூ.100 கோடியில் தயாரிக்கப்பட்ட பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்தும் வெறும் ரூ.20 கோடியை எட்டுவதற்கே தகிடுதத்தம் போட்டன.
இதற்கெல்லாம் காரணம், பாலிவுட் சினிமாவின் ஒரே மாதிரியான கதை, திரைக்கதை அமைப்புதான் என்றும், தென்னிந்திய சினிமாவின் தரமான கதை, திரைக்கதையும் தான் என்றும் சொல்லப்படுகிறது. அதோடு தென்னிந்தியாவில் இருந்து உருவாகும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களையும் கூட, பாலிவுட ரசிகர்கள் விரும்பத் தொடங்கிவிட்டார்கள் என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதன் தாக்கம், தற்போது பாலிவுட்டில் உருவாகி வரும் பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் வெளிப்படத் தொடங்கியிருக்கிறது.
'பாகுபலி' திரைப்படத்திற்குப் பிறகு, நேரடி இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார், தென்னிந்திய நடிகரான பிரபாஸ். அதன்மூலம் அவருக்கு அங்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் சல்மான்கான், ஷாருக்கான், ஹிருத்திக்ரோஷன் ஆகியோரது திரைப்படங்களில், தென்னிந்திய நடிகர்களை நடிக்க வைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. சல்மான்கான் 'கிஸி கா பாய் கிஸி கி ஜான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தமிழ் மொழியில் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'வீரம்' படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படத்தில் 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் நாயகர்களில் ஒருவரான ராம்சரண் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான வெங்கடேஷ் ஆகியோர் ஒரு சில காட்சிகளில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சல்மான்கானுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் செய்கிறார்கள். அந்த நடனக் காட்சி சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே போல் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' என்ற படத்தை இயக்கி வருகிறார், அட்லி. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க விஜய்யிடம் கேட்கப்பட்டிருந்தது. அவர் இல்லாத பட்சத்தில் தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரை நடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஹிருத்திக்ரோஷன் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம், 'வார்'. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இந்தப் படத்தில் வில்லனாக 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் மற்ெறாரு நாயகனான ஜூனியர் என்.டி.ஆரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
இதையெல்லாம் பார்க்கும்போது, கடந்த சில வருடங்களில் தென்னிந்திய சினிமாக்கள், பாலிவுட்டில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர முடிகிறது. இந்த தாக்கம் எவ்வளவு காலம் நீடித்திருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.