உடைகளில் புதுமைகளை புகுத்தும் 'காஸ்டியூம் டிசைனர்'..!
சென்னையை சேர்ந்த உஷா திவா, பிரபலமான காஸ்டியூம் டிசைனர். பிக்பாஸ் பிரபலங்கள், சின்னத்திரை-வெள்ளித்திரை நட்சத்திரங்களை தன்னுடைய தனித்துவமான உடைகளால் மெருகேற்றியவர்.
தனக்கான ஆடைகளை சுயமாக வடிவமைக்க தொடங்கி, அதன் மூலம் காஸ்டியூம் டிசைனிங் மற்றும் பேஷன் துறைக்குள் கால்பதித்தவர்.
இவர், நவீன காலத்து உடை நாகரிகம் பற்றியும், 'பொட்டிக்' எனப்படும் பிரத்யேக ஆடை வடிவமைப்பு தொழில் கலாசாரம் பற்றியும், அதன் மூலம் பெண்களுக்கு உருவாகி இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றியும் பேசுகிறார்.
* உங்களுக்கு எப்படி காஸ்டியூம் டிசைனிங் பழக்கமானது?
நான் எம்.பி.ஏ. பைனான்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் முடித்திருக்கிறேன். இருப்பினும் 'காஸ்டியூம் டிசைனிங்' சம்பந்தமான 'பேஷன்' எனக்குள் இருந்தது. ஏனெனில், துணிக் கடைகளில் வாங்கும் உடையின் பிட்டிங் அளவு, பெரும்பாலும் எனக்கு பொருந்தாது. அதனால் அந்த உடைகளை `ஆல்டர்' செய்வதில் தொடங்கி, பிறகு எனக்கான உடைகளை, அப்போதைய டிரெண்டில் தைக்கத் தொடங்கினேன். அப்படித்தான், காஸ்டியூம் டிசைனிங் எனக்கு பழக்கமானது.
* எப்போது உங்களை நீங்கள், முழுநேர காஸ்டியூம் டிசைனராக மேம்படுத்திக்கொண்டீர்கள்?
குடும்ப வாழ்க்கை, குழந்தைகள்... என குடும்பத்தின் பிசியான ஷெட்யூலில் சிக்கி யிருந்த எனக்கு, கொரோனா ஊரடங்கில் என்னைப் பற்றி யோசிக்கவும், என்னுடைய கனவான 'காஸ்டியூம் டிசைனிங்' பணிக்கு உயிர் கொடுக்கவும் நேரம் கிடைத்தது. அதனால், சொந்தமாக `பொட்டிக்' தொடங்கி, அதன்மூலம் நிறைய நவநாகரிக உடைகளை வடிவமைத்தேன். அதுவே, இன்று என்னுடைய அடையாளமாக மாறிவிட்டது.
* காஸ்டியூம் டிசைனராக, உங்களுடைய தனித்துவம் என்ன?
'பிட்டிங்' எனப்படும், உடலோடு உடை பொருந்தக்கூடிய விஷயத்தில் என்னுடைய கணிப்பு என்றுமே தவறியதில்லை. மேலும் ஆடை வடிவமைப்பில், படைப்பாற்றல் மிகவும் அவசியம். அதுவும் டிரெண்டிங்கிற்கு ஏற்ப நமது படைப்பாற்றல் மற்றும் சிந்தனைகளை வளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அந்தவகையில், என்னுடைய கிரியேட்டிவிட்டியை, மேம்படுத்திக்கொண்டே இருப்பது என்னுடைய ஸ்பெஷல் என நினைக்கிறேன்.
* 'பொட்டிக்' எனப்படும் பிரத்யேக துணிக் கடைகளின் அடிப்படை என்ன?
இது காஸ்டியூம் டிசைனர்கள் எனப்படும் உடை வடிவமைப்பாளர்களால் நிர்வகிக்கப்படும் பிரத்யேக உடை கடை. இங்கு, பேஷன் டிரெண்டிங்கான உடைகளை வடிவமைப்போம். அதேபோல எங்களை அணுகும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற, பிரத்யேக உடைகளையும் வடிவமைத்து கொடுப்போம். இதில், எல்லா கலாசார உடைகளும் அடங்கும். அது சுடிதாராக இருக்கலாம். டிசைனிங் வேலைபாடுகள் நிறைந்த சேலை பிளவுஸ்களாக இருக்கலாம். பிரைடல் பிராக், லெஹெங்கா, ஸ்கர்ட், பட்டுப்புடவைகளில் இருந்து தைக்கப்படும் நவ-நாகரிக உடைகள், குறிப்பிட்ட விழாக்களை அழகாக்கும் தீம் மற்றும் கஸ்டமைஸ்ட் உடைகள், பிறந்த குழந்தைகளுக்கான விஷேச உடைகள்... இப்படி உடை கலாசாரத்தில் வரும் எல்லா வகைகளையும், தைத்துக் கொடுக்கலாம். ரெடிமேட் துணி களுக்கு மாற்றாக, நமக்கு வேண்டியதை, சிறப்பான வேலைப்பாடுகளுடன் தைத்துக் கொடுப்பதுதான், பொட்டிக் கடைகளின் அடிப்படை.
* தனி ஒருவராக பொட்டிக் நடத்துவது சிரமமாக இல்லையா?
இல்லை. என்னுடன் நிறைய பெண்கள் கை கோர்த்து பணியாற்றுகிறார்கள். குறிப்பாக, வறுமையில் வாடும் பெண்களுக்கு ஆடை வடிவமைப்பு சம்பந்தமான பயிற்சிகளை இலவசமாகவே வழங்கி, அவர்கள் மூலமாக உடைகளை தயாரிக்கிறேன். இது அவர்களுக்கு சிறு வருமானத்தையும், கைத்தொழில் பயிற்சியையும் வழங்கும். டிசைனிங், கட்டிங், ஸ்டிச்சிங், பிட்டிங் இதுபோன்று நீளும் காஸ்டியூம் டிசைனிங் பணிகளில், என்னுடையது டிசைனிங். மற்றபடி, என்னுடன் கை கோர்த்திருக்கும் மற்ற பெண்கள், அவரவருக்கான பணிகளை கச்சிதமாக முடித்துக்கொடுப்பார்கள். மேலும் சுயமாக 'பொட்டிக்' தொழில் தொடங்க ஆசைப்படும் பெண்களுக்கு வழிகாட்டி, அவர்களை தொழில்முனைவோராகவும் மாற்றுகிறேன்.
* 'பொட்டிக்' துறையில், சிறப்பான எதிர்காலம் இருக்கிறதா?
ஆம்..! முன்பை விட, இப்போது நிறைய மக்கள் கஸ்டமைஸ்ட் ஆடைகளை அணிய ஆசைப்படுகிறார்கள். ஒருகாலத்தில் திருமண வரவேற்புக்கு மட்டுமே 'கஸ்டமைஸ்ட்' ஆடைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. நிச்சயதார்த்தத்தில் தொடங்கி, திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய போட்டோஷூட்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள், ஹனிமூன் பயணங்கள், கர்ப்ப கால போட்டோ ஷூட், குழந்தை பிறப்பு, குழந்தையின் முதல் வருட பிறந்த நாள் கொண்டாட்டம்... இப்படி எல்லா விஷேசங்களுக்கும், அவர்களுக்கு பிடித்த மாதிரியில், பிடித்த நிறங்களில், பிடித்த தீம் (கருப்பொருளில்) ஆடைகளை வடிவமைத்து அணிகிறார்கள். இது, இன்றைய டீன்-ஏஜ் வயதினரின் தவிர்க்கமுடியாத பழக்கமாகிவிட்டது. அதனால் 'காஸ்டியூம் டிசைனிங்' துறையிலும், பொட்டிக்கடை களிலும் சிறப்பான எதிர்காலம் இருக்கும்.
* நிறைய பெண்கள் தங்களுக்கு தெரிந்த தையல் கலை மற்றும் டிசைனிங் வேலைப்பாடுகளை மையபடுத்தி 'பொட்டிக்' தொழில் தொடங்குகிறார்கள். அதில் நஷ்டமின்றி வெற்றி பெறுவது எப்படி?
கிரியேட்டிவிட்டி, குவாலிட்டி, டெலிவரி மற்றும் பிட்டிங்... இவை நான்கையும், சிறப்பாக பின்பற்றினால், பொட்டிக் தொழிலில் வெற்றி பெறலாம். கிரியேட்டிவிட்டி எனப்படும் படைப்பாற்றல் வெளிப்படும் வகையிலான உடைகளை உருவாக்குவது அவசியம். அதேசமயம், லாப நோக்கத்திற்காக துணிகளின் தரத்தில் (குவாலிட்டி) எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது. அதேபோல, 2 நாட்களில் தைத்து கொடுப்பதாக (டெலிவரி) கூறி, அதை 4 நாட்களாக தாமதப்படுத்தி கொடுக்கக்கூடாது. இறுதியாக, நாம் தைத்து கொடுப்பது அவர்களின் உடலோடு சரியாக பொருந்தக்கூடிய அளவில் பிட்டிங் துல்லியமாக இருக்க வேண்டும். இவை நான்கையும் சரியாக கடைப்பிடித்தால், வெற்றி பெறலாம்.
* பொட்டிக் நடத்தும் பெண்கள், ஆன்லைன் புரோமோஷன்களில் கவனம் செலுத்த வேண்டுமா..?
தையல் கலையை பொறுத்தவரை, வாய்வழி செய்திகளாகவே பெரும் விளம்பரம் நடக்கும். நீங்கள், உங்களுக்கு தெரிந்த தோழிகளிடம் பரிந்துரைப்பீர்கள். அவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் பரிந்துரைப்பார்கள். இதோடு கொஞ்சம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தள புரோமோஷன் இருந்தால் போதும், சிறப்பாக முன்னேறலாம்.
* சமீபகாலமாக பழைய புடவைகளும் புது வடிவம் பெறுகின்றன. அது எப்படி?
புதுமைகள்தான், பேஷன் துறையின் அடிநாதம். அதில் உருவானதுதான், இந்த டெக்னிக். எல்லோர் வீட்டிலும், அம்மா, பாட்டிகளின் நினைவுகளை தாங்கிய பழைய புடவைகள் இருக்கும். அதை இப்போது உடுத்து பவர்களும் உண்டு. பழைய டிசைன் என்ற தயக்கத்தினால், உடுத்த தயங்குபவர்களும் உண்டு. அப்படி தயங்குபவர்களுக்காகவே, இந்த முயற்சி. பழைய புடவையை புடவையாகத்தான் அணியவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்களுக்கு பிடித்த வகையில், சுடிதாராக அணியலாம். இல்லையென்றால் அனார்கலி, கவுன், லாங் பிராக், ஸ்கர்ட், அம்பர்லா கவுன், குர்த்தி... இதுபோன்ற பேஷன் வடிவங்களுக்கும் மாற்றிக்கொள்ளலாம்.
சில பெண்கள், அவர்களது அம்மா புடவையில் தங்களுக்கும், மகளுக்கும் ஒரே டிசைனில் உடை தைத்து அணிகிறார்கள். ஏதோ ஒரு வகையில், முன்னோர்களுக்கும், அவர்களுக்குமான பந்தத்தை உடை வடிவில் தொடர விரும்புகிறார்கள்.
* கிழிந்த புடவைகளையும், பேஷன் உடைகளாக மாற்றமுடியுமா?
நிச்சயமாக மாற்றலாம். புடவையின் கிழிந்த பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு, நல்ல நிலையில் இருக்கும் மற்ற புடவை துணிகளிலும், நவ-நாகரிக உடைகளை தைக்கலாம். அவரவர் பட்ஜெட்டிற்கு ஏற்ப, ஆரி வேலைப்பாடுகள் செய்து, புடவை களை அழகாக்கலாம். அதேபோல, கறை படிந்த பட்டுப்புடவைகளை கூட ஆடைகளாக மாற்றலாம்.
* உங்களுடைய ஆசை என்ன?
நிறைய பெண்களை தொழில்முனைவோராக மாற்றுவதுதான் என்னுடைய ஆசை. மேலும் காஸ்டியூம் டிசைனிங் துறையில், கால்பதிக்க ஆசைப் படும் பெண்களுக்கு ரோல் மாடலாக இருக்க ஆசைப்படுகிறேன்.
உடைகளில், சமீபத்திய டிரெண்ட் எது?
ஆடம்பரமாக காட்சியளிக்கும் உடைகளை 'லைட் வெயிட்' முறையில் லேசாக வடிவமைப்பதும், அணிவதும்தான் இப்போதைய டிரெண்ட். இதனுடன், அம்மா-மகள் உடைகள், தீம் முறையில் ஒட்டுமொத்த குடும்பத்திற்குமான உடைகள், விஷேசங்களுக்கு ஏற்ற கஸ்டமைஸ்ட் உடைகள், பட்டுப்புடவைகளில் உருவாகும் பல உடைகள்... என எந்த வரம்பிற்குள்ளும் சிக்காமல், ஆடைகளின் டிரெண்ட் வளர்ந்துகொண்டே இருக்கிறது.