புற்றுநோய்க்கு முடிவுரை எழுதும் கோவை பேராசிரியர்கள்


புற்றுநோய்க்கு முடிவுரை எழுதும் கோவை பேராசிரியர்கள்
x
தினத்தந்தி 13 Aug 2023 6:38 AM IST (Updated: 13 Aug 2023 6:57 AM IST)
t-max-icont-min-icon

'பொல்லாத நோய் புற்றுநோய்....' என்கிற புலம்பலில் தான் இன்னமும் பூமி சுழல்கிறது. இதனை முற்றிலும் வெல்வதற்கான மருந்து இன்னமும் இல்லை என்கிற நிலை தான் நீடிக்கிறது.

தற்போதைய நவீன சிகிச்சை முறைகள் ஆறுதல் அளித்தாலும், அதன் ஆபத்தை அடியோடு வேரறுக்க முடியாமல் ஆராய்ச்சிகளும் தொடர்கிறது. இதனால் உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

இந்தியாவில் ஆண்டு தோறும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புற்றுநோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த உயிர்க் கொல்லி நோய்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலியாகிறார்கள். இந்த புற்றுநோய்க்கு முடிவுரை எழுதும் முயற்சியில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியியல் துறை உதவி பேராசிரியை சாரதா தேவி மற்றும் தாவரவியல் துறை உதவி பேராசிரியர் குரு சரவணன் ஆகியோர் ஈடுபட்டு உள்ளனர்.

தமிழகத்தின் மாநில மலரான செங்காந்தள் செடியின் கிழங்கு சாற்றில் இருந்து வெள்ளி நானோ துகள்களை வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர். இந்த செடியின் கிழங்கில் உள்ள ஆல்கிலைடு என்கிற வேதிப்பொருளுக்கு புற்றுநோய் பாதித்த செல்களை பெருக விடாமல் தடுக்கும் சக்தி இருக்கிறது என்கிறார், குரு சரவணன். ''இதன் காரணமாகத்தான் செங்காந்தள் செடியின் கிழங்கு புற்றுநோய் மருந்து குறித்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோய் தவிர காயத்தை குணப்படுத்துதல் உட்பட பல்வேறு மருந்துகளுக்கும் இந்த ஆல்கிலைடு வேதிப்பொருள் தேவைப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இந்த செங்காந்தள் செடி பயிரிடப்பட்டு அதன் கிழங்கு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது'' என்கிறார்.

இந்த வகையில், செங்காந்தள் செடியின் கிழங்கு சாற்றில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த வெள்ளி நானோ துகள்களை புற்றுநோய் பாதித்த செல்கள் எளிதில் உட்கிரகிக்கப்படுகிறது. இதன் மூலம் புற்றுநோய் பாதித்த செல்களை ரத்த வெள்ளை அணுக்கள் எளிதில் கண்டறிந்து அழிக்கின்றன. இதற்கு மத்திய அரசின் காப்புரிமையும் சமீபத்தில் வழங்கப்பட்டது. காப்புரிமை பெற்ற வெற்றிக்களிப்புடன் வெள்ளி நானோ துகள்கள் குறித்த ஆராய்ச்சியை தீவிரப்படுத்தி இருக்கும் பேராசிரியை சாரதா தேவியுடன் சிறு நேர்காணல்...

* குடும்பம் மற்றும் பணி குறித்து?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செஞ்சி எனது பூர்வீகம். தந்தை ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. கணவர் ராஜசேகரன் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். திருமணம் முடிந்ததும் கோவையில் உள்ள கல்லூரியில் எம்.பில் மற்றும் பி.எச்டி. படித்து முடித்தேன். 2013-ம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவுரையாளராக பணியில் சேர்ந்தேன். பின்னர் 2016-ம் ஆண்டு முதல் அங்கு உதவி பேராசிரியையாக பணிபுரிகிறேன்.

* புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியில் ஆர்வம் ஏற்பட்டது ஏன்?

உலகம் முழுவதும் புற்றுநோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. எனது அத்தை லட்சுமி கர்ப்பப்பை வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார். எனவே இந்த புற்றுநோய்க்கு முடிவு கட்டும் வகையில் இதுகுறித்த ஆராய்ச்சியில் இறங்கினேன். எனது ஆராய்ச்சி படிப்பு (பி.எச்டி.) கூட புற்றுநோய் குறித்துதான்.

* செங்காந்தள் மலரை தேர்வு செய்தது ஏன்?

தமிழக மாநில மலரான செங்காந்தள் மலரின் கிழங்கு பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்ப பெற்றது. அதே நேரத்தில் விஷத்தன்மையும் கொண்டது.

மருத்துவ பயன்பாட்டிற்காக செங்காந்தள் செடியின் கிழங்குகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விஷம் என்பது உயிரை கொல்லும். ஆனால் அதே நேரத்தில் சித்தர்களின் மூலிகை மருத்துவத்தில் நவபாஷனம் நமக்கு மருந்தாக பயன்படுகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு செங்காந்தள் செடி கிழங்கில் இருந்து மருந்து தயாரிக்க ஆராய்ச்சி செய்கிறோம்.

மேலும் புற்றுநோயை குணப்படுத்த ஆயுர்வேத சிகிச்சையில் செங்காந்தள் கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த கிழங்கில் இருந்து எடுக்கப்படும் மருந்து புற்றுநோய் பாதித்த செல்களை மட்டுமின்றி, நல்ல செல்களையும் அழிக்கிறது. இதனை மாற்றி புற்றுநோய் பாதித்த செல்களை மட்டும் அழிக்கும் வகையில் எங்களது கண்டுபிடிப்பு இருந்தது. அதுதான் வெள்ளி நானோ துகள்கள்.

* வெள்ளி நானோ துகள்கள் என்றால் என்ன?

நானோ என்றால் மிக, மிக நுண்ணிய அளவு ஆகும். அதாவது மில்லி மீட்டருக்கும் மிக, மிக குறைந்த அளவு கொண்டது. வெள்ளிக்கு கிருமியை அழிக்கும் சக்தி உண்டு. எனவே வெள்ளி மற்றும் செங்காந்தள் செடியின் கிழங்கில் உள்ள சாறு ஆகியவற்றை கொண்டு ரசாயன முறையில் நானோ துகள்களை உருவாக்கினோம். இது வெள்ளி நானோ துகள்கள் என்று அழைக்கப்படுகிறது.

வெள்ளி நானோ துகள்கள் ஆராய்ச்சியில் பலர் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் கண்டுபிடித்த வெள்ளி நானோ துகள்கள் சீரற்றவை. மேலும் நிலைத்தன்மை அற்றவை. ஆனால் நாங்கள் கண்டுபிடித்த வெள்ளி நானோ துகள்கள் அனைத்தும் ஒரே அளவாக சீரான முறையில் இருக்கும். மேலும் நிலைத்தன்மை கொண்டது. அதாவது இந்த மருந்தை உருவாக்கி 5 நாட்களில் செலுத்தும்போது எவ்வளவு வீரியத்துடன் இருக்குமோ, அதே போன்று 50 நாட்கள் கழித்து செலுத்தினாலும் அதே வீரியத்துடன் செயல்படும். இதனை அறிவியல் பூர்வமாக நிரூபித்ததால் எங்களுக்கு காப்புரிமை கிடைத்தது.

* இந்த துகள்கள் எவ்வாறு புற்றுநோய் செல்களை அழிக்கிறது?

செங்காந்தள் கிழங்கில் இருந்து எடுக்கப்படும் மருந்து புற்றுநோய் பாதித்த செல்களை மட்டுமின்றி நல்ல நிலையில் உள்ள செல்களையும் அழிக்கிறது. ஆனால் நாங்கள் கண்டுபிடித்த வெள்ளி நானோ துகள்களை புற்றுநோய் பாதித்த செல்கள் மட்டும் எளிதாக உட்கிரகிக்கின்றன. இதனால் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், புற்றுநோய் பாதித்த செல்களை அடையாளம் கண்டு அதை மட்டும் அழிக்கிறது. நல்ல செல்களை அழிப்பது இல்லை.

* இந்த வெள்ளி நானோ துகள் ஆராய்ச்சி எந்த நிலையில் உள்ளது?

கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளி நானோ துகள் குறித்த ஆராய்ச்சியை தொடங்கினோம். ஏற்கனவே இதில் பி.எச்டி. பட்டம் பெற்றதால் ஆராய்ச்சிக்கு அது பயனுள்ளதாக இருந்தது. 2018-ம் ஆண்டு ஆராய்ச்சியை நிறைவு செய்த போதிலும், அதற்கான ஆவணங்களை தயார் செய்து மத்திய காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்தது கடந்த 2020-ம் ஆண்டுதான். இதற்கு கடந்த மாதம் 31-ந் தேதி மத்திய அரசு காப்புரிமை அளித்தது.

புற்றுநோயை குணப்படுத்த உதவும் இந்த வெள்ளி நானோ துகள் ஆராய்ச்சி தொடக்க நிலையில் உள்ளது. இதன் முதற்கட்டத்தை தற்போது நிறைவு செய்து உள்ளோம். புற்றுநோய் பாதித்த எலிக்கு வழங்கியதில் அது குணமாகி உள்ளது. ஆனால் இதனை உடனடியாக மனிதர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாது. 2-வது கட்ட ஆராய்ச் சிக்கு தமிழக அரசு ரூ.40 லட்சம் நிதி வழங்கி உள்ளது. இந்த நிதியில் இருந்து நாங்கள் ஆராய்ச்சியை தொடர்கிறோம். இன்னும் பல கட்ட ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும்.

வெள்ளி நானோ துகள்கள் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்துமா?

இந்த வெள்ளி நானோ துகள் புற்றுநோய் அழிப்பில் முதல் படியில் உள்ளது. தற்போது புற்றுநோய் பாதித்த செல்களை மட்டும் அழிக்கும் வகையில் உள்ளது. எங்களின் 2-ம் கட்ட ஆராய்ச்சியில் புற்றுநோய்க்கு காரணமான மரபணுவை (ஜீன்) கண்டறிந்து அதனை அழிக்குமா என்று ஆய்வு செய்து வருகிறோம். இது 'டார்கெட் டிரக்' என்று அழைக்கப்படும். இவ்வாறு புற்றுநோய்க்கு காரணமான மரபணுவை அழிக்கும் சக்தி இந்த மருந்திற்கு இருந்தால் முற்றிலும் புற்றுநோயை குணப்படுத்த முடியும். இதற்கு நீண்ட கால நடைமுறைகள் தேவைப்படும்.

புற்றுநோயை குணப்படுத்தும் மற்ற மருந்திற்கும், வெள்ளி நானோ துகளுக்கும் என்ன வித்தியாசம்?

தற்போது புற்றுநோயாளிகளுக்கு ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வலி அதிகம் இருக்கும். மேலும் அவர்களின் முடி கொட்டுவதுடன், வாந்தி, உடல் எடை குறைவு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படும். ஆனால் வெள்ளி நானோ துகள் மூலம் புற்றுநோய் குணப்படுத்தும் மருந்து நடைமுறைக்கு வந்தால் இதுபோன்ற எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. மேலும் இந்த மருந்தை எடுக்கும் நோயாளிகளுக்கு வலி, உடல் உபாதை உள்ளிட்ட எவ்வித பாதிப்பும் வராது.

வெள்ளி நானோ துகள் விலை எவ்வாறு இருக்கும்?

தற்போது புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் விலை அதிகமாக உள்ளது. ஆனால் இந்த வெள்ளி நானோ துகள் மருந்தின் விலை மிக குறைவாக இருக்கும். ஏனென்றால் வெள்ளி மற்றும் செங்காந்தள் செடி கிழங்கு மிக குறைந்த விலையில் கிடைக்கும்.

* மனிதர்களின் பயன்பாட்டிற்கு எப்போது வரும்?

இந்த வெள்ளி நானோ துகள் மனிதர்களின் பயன்பாட்டிற்கு வர பல ஆண்டுகள் பிடிக்கலாம். புற்றுநோய் பாதித்த நபர்களிடம் இருந்து திசு மாதிரியை டாக்டர்கள் உதவியுடன் பெறுவோம். அந்த திசுக்களை கொண்டு நாங்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவோம். அந்த புற்றுநோய் பாதித்த திசுக்களுக்கு நாங்கள் கண்டுபிடித்த வெள்ளி நானோ துகள்களை செலுத்தி எத்தகைய மாற்றம் நிகழ்கிறது என்பதை பதிவு செய்வோம். மேலும் இந்த வெள்ளி நானோ துகள்களை அனைத்து வயதினருக்கும் செலுத்தலாமா, ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுமா? என பல்வேறு ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியது உள்ளது. இவை அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் மீண்டும் மத்திய அரசின் காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பிப்போம். அதனை அவர்கள் ஆய்வு செய்வார்கள்.

அதன்பின்னர் டாக்டர்கள் மூலம் புற்றுநோய் பாதித்த மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படும். இதன் முடிவில் தான் மனிதர்களின் பயன்பாட்டிற்கு இந்த மருந்தை கொண்டு வர முடியும். இதற்கு நீண்ட கால ஆராய்ச்சி தேவைப்படும்.

* உங்களின் லட்சியம் என்ன?

சிறந்த புற்றுநோய் சிகிச்சை விஞ்ஞானியாக உருவாக வேண்டும் என்பதே எனது லட்சியம். மேலும் உயிர்கொல்லியாக விளங்கும் புற்றுநோய்க்கு தீர்வு காண வேண்டும்.


Next Story