மாம்பழ ரகங்களுக்கு பிரபலமான நகரங்கள்
இது மாம்பழ சீசன். நாட்டின் பல பகுதிகளில் மாம்பழ விளைச்சல் அமோகமாக இருக்கிறது. விதவிதமான மாம்பழங்கள் சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளன. இந்தியாவில் சிறந்த மாம்பழ ரகங்கள் விளையும் நகரங்கள் குறித்து பார்ப்போம்.
மலிஹாபாத்
நாட்டின் வடக்குப் பகுதியில் வசிக்கும் மக்களால் அதிகம் விரும்பப்படும் தாசெஹ்ரி மாம்பழங்களின் விளைச்சலுக்கு பெயர் பெற்ற நகரம் மலிஹாபாத். உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள இந்த நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தாசெஹ்ரி மாம்பழங்கள் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இனிப்பு சுவை, அடர்த்தியான சதை மற்றும் நறுமணம் இதன் மதிப்பை உயர்த்துகிறது.
வாரணாசி
உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசி மாம்பழங்களுக்கும் புகழ் பெற்றது. மாம்பழ பிரியர்களின் விருப்பமான இடமாகவும் விளங்குகிறது. இது லாங்க்ரா மாம்பழங்களுக்கு பெயர் பெற்றது. இந்த பழம் ருசியானது. சுவையில் இனிமையானது.
ரத்னகிரி
பழங்களின் ராஜா என்றால் அது அல்போன்சா தான். ஹாபஸ் என்றும் அல்போன்சா வகை மாம்பழங்களை அழைக்கிறார்கள். மகாராஷ்டிராவில் உள்ள ரத்னகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த மாம்பழங்களின் விளைச்சல் அமோகமாக நடக்கிறது.
அல்போன்சா மாம்பழங்களையே பிரத்யேகமாக விளைவிப்பதால் இந்தியாவை கடந்து உலக அளவில் ரத்னகிரிக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.
மால்டா
மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் மால்டா. இது மால்டா ரக மாம்பழ விளைச்சலுக்கு பெயர் பெற்றது. இந்த மாம்பழம் பஸ்லி என்றும் அழைக்கப்படுகிறது. ஜூன் முதல் ஆகஸ்டு வரை இந்த மாம்பழங்களை ருசிக்கலாம். இந்த மாம்பழங்கள் அளவில் பெரியது. ஒவ்வொன்றும் 700 முதல் 1,500 கிராம் வரை எடை கொண்டிருக்கும்.
பெங்களூரு
இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் கர்நாடகாவின் பெங்களூரு நகரத்தை சூழ்ந்துள்ள பகுதிகளில் தோதாபுரி அல்லது பெங்களூரா என்று அழைக்கப்படும் மாம்பழங்கள் விளைகின்றன.
இவற்றின் இனிப்பும், சுவையும் தனித்துவமானது. விரும்பி ருசிப்பதற்கு ஏற்ற சதைப்பற்று கொண்டது. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த வகை மாம்பழங்கள் விரும்பி உண்ணப்படுகின்றன.
முர்ஷிதாபாத்
மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத் நகரம், வட இந்தியா முழுவதும் அதிகம் விரும்பப்படும் ஹிம்சாகர் மற்றும் கிஷன் போக் மாம்பழங்களின் விளைச்சலுக்கு பிரபலமானது. இந்த மாம்பழங்கள் வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பங்கனப்பள்ளி
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பங்கனப் பள்ளி நகரம் மாம்பழத்தின் அடையாளத்தை கொண்டது. அதன் பெயரிலேயே அழைக்கப்படும் பங்கனப்பள்ளி மாம்பழம் பிரபலமானது.
மற்ற மாம்பழங்களை விட நார்ச்சத்து அதிகம் இல்லாதது. தித்திப்பான சுவை கொண்டது. தென்னிந்தியா முழுவதும் விரும்பி ருசிக்கப்படும் மாம்பழங்களில் இதுவும் ஒன்று.
ஹர்டோய்
சவுசா மாம்பழங்கள் உத்தரப்பிரதேசத்திலுள்ள ஹர்டோய் நகரிலும், அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் பரவலாக வளர்க்கப்படுகின்றன. இந்த மாம்பழங்கள் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் கிடைக்கும்.
லக்னோ
உத்தரபிரதேசத்திலுள்ள மற்றொரு நகரமான லக்னோவும் தாசெஹ்ரி மாம்பழங்களுக்கு பிரபலமானது. அதனை மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து ஆகஸ்டு மாதத்தின் இறுதி வரை ருசிக்கலாம். இந்த மாம்பழங்களை மற்ற மாம்பழங்களில் இருந்து எளிதாக அடையாளம் காணலாம்.
ஜுனாகத்
குஜராத்தில் உள்ள ஜூனாகத் நகரம் கேசர் மாம்பழங்களுக்கு பிரபலமானது. மாம்பழங்களின் ராணி என்றும் கேசர் மாம்பழங்கள் அழைக்கப்படுகின்றன. குங்குமப்பூ நிற தோற்றம் கொண்ட இந்த மாம்பழங்களின் சுவை அபாரமாக இருக்கும்.