முகம் கழுவும் போது தவிர்க்க வேண்டியவை


முகம் கழுவும் போது தவிர்க்க வேண்டியவை
x

குளிர்காலத்தில் சரும வறட்சி பிரச்சினை எட்டிப்பார்க்கும். கோடை காலத்தில் வியர்வை வடிந்து சருமத்திற்கு சிரமத்தை கொடுக்கும். அதனால் பலரும் அடிக்கடி முகம் கழுவும் வழக்கத்தை பின்பற்றுவார்கள்.

சிலர் முகத்தை கழுவும் விஷயத்தில் அலட்சியமாக இருப்பார்கள். கோடை காலத்தில் முகம் கழுவும்போது ஒரு சில தவறுகளை செய்யாமல் இருப்பது சருமத்திற்கு நலம் சேர்க்கும்.

சுத்தம் செய்யாமல் இருப்பது

கோடையில் வியர்வை அதிகம் வெளிப்படும் என்பதால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு, மூன்று முறையாவது முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு முகத்தை சுத்தம் செய்யவில்லை என்றால், எண்ணெய் தன்மை சருமத்தில் தேங்கி முகப்பருவுக்கு வழிவகுக்கும்.

கிரீம், எண்ணெய் பயன்படுத்துதல்

சருமத்திற்கு ஏற்ற தைலம், கீரீம்கள், ஆயில்கள் பயன்படுத்துவது சருமத்தை மென்மையாக வைத்திருக்கும். இந்த சரும பொருட்கள் மென்மையாகவும் மிருதுவாகவும் உணர வைத்தாலும் சருமத்தின் ஈரப்பதத்தில் மாறுதலை ஏற்படுத்தும். அடிக்கடி உபயோகிக்கும்போது சரும ஒவ்வாமை பிரச்சினைக்கு வழிவகுக்கலாம். கோடை காலத்தில் சரும பராமரிப்புக்கு இயற்கை தயாரிப்புகளை பயன்படுத்துவது நல்லது.

சூடான நீரை பயன்படுத்துதல்

முகத்தை கழுவுவதற்கு சிலர் சூடான நீரை பயன்படுத்துவார்கள். வெயிலின் உக்கிரத்தால் குழாயில் இருந்து வெளிப்படும் சூடான நீரை அப்படியே முகத்தில் பயன்படுத்துவது நல்லதல்ல. சூடான நீர் சரும துளைகளை திறக்க உதவும். குளிர்ந்த நீர் சருமத்தை மூடுவதற்கு உதவும். இந்த வெயில் காலத்தில் சூடான நீர் சருமத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். முகத்தை கழுவுவதற்கு வெதுவெதுப்பான நீர் தான் சிறந்த தேர்வாக அமையும்.

இறந்த செல்களை நீக்குதல்

சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கும் செயல்முறை எக்ஸ்போலியேட் எனப்படும். இருப்பினும் அடிக்கடி எக்ஸ்போலியேட் செய்வது சருமத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கும். சரும வறட்சி, சிராய்ப்புகள் மற்றும் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். எக்ஸ்போலியேட்டர் கிரீம்களை அடிக்கடி சருமத்தில் தேய்க்கும்போது அதில் உள்ள ரசாயன பொருட்கள் சருமத்திற்கு தீங்கு விளைக்கலாம். மருத்துவரின் வழிகாட்டுதல்படி மாதம் ஒருமுறை உபயோகிப்பது நல்லது.

அடிக்கடி கழுவுதல்

கோடையில் ஏற்படும் வியர்வை மற்றும் அதனுடன் கலந்த ஈரப்பதம் காரணமாக சருமத்தில் பிசுபிசுப்புதன்மை ஏற்படும். மந்தமான உணர்வையும் உண்டாக்கலாம். சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பதற்காக நிறையபேர் அடிக்கடி முகம் கழுவும் வழக்கத்தை பின்பற்றுவார்கள். அப்படி கழுவுவது சருமத்தை உலர வைத்துவிடும். மேலும் சருமம் எண்ணெய்யை அதிகமாக உற்பத்தி செய்யும். இதனால் சருமம் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும்.


Next Story