24 மணி நேரத்தில் 26 சான்றிதழ்கள்
ஆன்லைனில் அதிக எண்ணிக்கையில் மேலாண்மை சான்றிதழ் பெற்றவர் என்ற அங்கீகாரம் சஞ்சய் தாஸுக்கு கிடைத்துள்ளது.
கொரோனா காலகட்டம் ஆன்லைன் வழியாக கல்வி பயிலும் வழிமுறைக்கு அடித்தளமிட்டது. பள்ளி, கல்லூரி படிப்பு மட்டுமின்றி தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும் குறுகிய கால படிப்புகளையும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் படிக்கும் வாய்ப்பும் விசாலமானது. முழுநேரமாக, பகுதி நேரமாக தொழில் செய்பவர்கள் தங்கள் திறமையை மெருகேற்றுவதற்கு வித்திடும் சான்றிதழ் படிப்புகளை படிப்பதற்கு ஆர்வம் காட்டினார்கள்.
கொரோனா அச்சத்தால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த சமயங்களில் கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு கிடைத்த வாய்ப்பாக அதனை பயன்படுத்திக்கொண்டார்கள். இப்போதும் பலர் ஆன்லைன் வழியே படிக்கும் யுக்தியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் ஒரே சமயத்தில் வெவ்வேறு படிப்புகளை படித்து முடித்து சான்றிதழ் பெறுபவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் சஞ்சய் தாஸ் தனித்துவமானவர். 24 மணி நேரத்தில் 26 படிப்புகளில் சான்றிதழ்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
33 வயதாகும் சஞ்சய் தாஸ் அசாம் மாநிலத்திலுள்ள திப்ரூகர் பகுதியை சேர்ந்தவர். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். தற்போது பெங்களூருவில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறார். ஒரே நாளில் 26 மேலாண்மை சான்றிதழ் படிப்புகளை படித்து முடித்து அசத்தியுள்ளார். இவர் 24 மணி நேரத்தில் 26 சான்றிதழ்கள் பெற்றிருப்பது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், அசாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் போன்றவற்றில் சாதனைகளாக பதிவாகி இருக்கிறது. ஆன்லைனில் அதிக எண்ணிக்கையில் மேலாண்மை சான்றிதழ் பெற்றவர் என்ற அங்கீகாரம் சஞ்சய் தாஸுக்கு கிடைத்துள்ளது.
''ஆன்லைன் படிப்பு சான்றிதழ் பற்றி நீண்ட நாட்களாக ஆய்வு செய்து வருகிறேன். மாநில அளவில் ஒருவர் 10 நாட்களில் 33 சான்றிதழ்கள் பெற்றதே சாதனையாக இருப்பதை தெரிந்து கொண்டேன். மாநில அளவில் மட்டுமின்றி தேசிய, சர்வதேச அளவில் சாதனை படைப்பதற்கு திட்டமிட்டேன். ஒரே நாளில் அதிக சான்றிதழ்களை பெறும் நோக்கத்தில் அதிகாலை 3.30 மணிக்கு எனது பணியை தொடங்கினேன்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் 80 மதிப்பெண்கள் பெறுவதுதான். அப்படி பெற்றால் உடனடி சான்றிதழ் கிடைத்துவிடும். அத்தகைய படிப்புகளை தேர்ந்தெடுத்து சான்றிதழ் பெற்றேன். இரவு 11 மணிக்குள் எனக்கு 26 சான்றிதழ்கள் கிடைத்தன. அடுத்த நாள் இதை சாதனையாக புதிவு செய்ய விண்ணப்பித்தேன்'' என்கிறார், சஞ்சய் தாஸ்.