அதிக நேரம் உட்கார்ந்திருக்கிறீர்களா?


அதிக நேரம் உட்கார்ந்திருக்கிறீர்களா?
x

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இதய ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும்,மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கச்செய்யும் என்பது குறித்து பார்க்கலாம்.

ஒரே இடத்தில் அமர்ந்த நிலையிலேயே நீண்ட நேரம் வேலை செய்வது, டி.வி. பார்ப்பது, செல்போன் பார்ப்பது, பயணத்தின்போது இருக்கையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது போன்ற செயல்பாடுகள் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்க செய்துவிடும் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு. தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வருவதற்கு ஏற்ப உடல் இயக்கம் சார்ந்த வேலைத்திறன்கள் குறைந்து கொண்டிருக்கிறது.

சுறுசுறுப்பின்றி ஒரே இடத்தில் அமர்ந்தபடியே எதையும் கையாளலாம் என்ற நிலையும் ஏற்பட்டிருக்கிறது. அப்படி அசைவின்றி ஒரே நிலையில் அமர்ந்திருப்பது புகைப்பிடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கு இணையானது. ரத்த ஓட்டம் பாதிப்புக்கு உள்ளாகலாம். ரத்த அழுத்தமும் ஏற்படலாம். அதனால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

தமனி வீக்கம் அடையும்

தமனியின் உட்புறச்சுவர்களில் கொழுப்பு படிந்து வீக்கம் அடையக்கூடும். தமனி பாதிப்புக்குள்ளாகி தோல் அழற்சி நோய்க்கு வித்திடும். தமனியில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டமும் குறைய தொடங்கும். நாளடைவில் ரத்தம் உறைவதற்கும் வழிவகுக்கும். அதிக நேரம் ஓரிடத்திலேயே அசைவின்றி உட்காருவது ரத்த ஓட்டம் குறைவதற்கும், கொழுப்பு படிவுகளை அகற்றும் செயல்பாட்டை குறைப்பதற்கும் வழிவகுக்கும். நாளடைவில் இதய நோய்கள் ஏற்படக்கூடும்.

ரத்த ஓட்டம் தடைபடும்

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது ரத்த ஓட்டத்தின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும். குறிப்பாக கால்களின் மூட்டுப்பகுதிகளில் ரத்த ஓட்டம் தடைபடக்கூடும். அதன் காரணமாக ரத்த உறைவு ஏற்படக்கூடும். இதே நிலை நீடித்தால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். ரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதற்கு உடல் இயக்கம் அவசியமானது. உடற்பயிற்சி செய்து வருவதும் நல்லது.

உயர் ரத்த அழுத்தம் உண்டாகும்

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதற்கும், உயர் ரத்த அழுத்தத்திற்கும் தொடர்பு இருக்கிறது. ஏனெனில் உடல் செயல்பாடு இல்லாததும், ரத்த ஓட்டம் குறைவதும் உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். நாளடைவில் இதயம் சார்ந்த நோய் பாதிப்புகளை உண்டாக்கும். உடற்பயிற்சிகளை செய்து வருவதும், உட்கார்ந்த நிலையிலும் கூட உடல் அசைவுகளை மேற்கொள்வதும் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

உடல் எடை அதிகரிக்கும்

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது உடல் பருமனுக்கும் வழிவகுக்கும். அப்படி உடல் எடை அதிகரிப்பது இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதயம், நுரையீரல் சார்ந்த நோய்கள் மற்றும் நீரிழிவு நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கச் செய்யும். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருவதை குறைப்பதும், உடல் எடையை கட்டுப்படுத்துவதும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

கெட்ட கொழுப்பு கூடும்

ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிப்பதற்கு வித்திடும். நல்ல கொழுப்பின் அளவிலும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். இத்தகைய ஏற்றத்தாழ்வு பெருந்தமனி தோல் அழற்சிக்கு வித்திடும்.


Next Story