அரிய வகை தாமரை மலர் தோட்டம்


அரிய வகை தாமரை மலர் தோட்டம்
x

எங்களிடம் ‘சஹஸ்ரதள பத்மம்’ எனப்படும் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை செடி இருக்கிறது. இது மிகவும் அரிதான ரகம் என்கிறார் கேரளாவை சேர்ந்த பிரதீபா.

மலர்களை விரும்பாத பெண்கள் இல்லை. தங்கள் வீட்டில் விரும்பிய மலர் செடிகளை வளர்ப்பதற்கு ஆசைப்படுவார்கள். கேரளாவை சேர்ந்த பிரதீபா தாமரை மலர்கள் மீது தீராத காதல் கொண்டிருக்கிறார். அதன் தாக்கமாக அவரது வீட்டு தோட்டத்தை சுமார் 100 வகை தாமரை செடிகள் அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் வித்தியாசமான தாமரை மலர்களை மலர செய்து அந்த பகுதியை சேர்ந்தவர்களை ஆச்சரியப்படுத்துகின்றன.

அங்குள்ள மாவேலிக்கரை அடுத்த தாழக்கரை பகுதியில் பிரதீபா வசிக்கிறார். இவரது கணவர் பினோய் ராஜ். துபாயில் ஐ.டி. நிபுணராக வேலை பார்த்தவர். 4 ஆண்டுகளுக்கு முன்பு நாடு திரும்பி இருக்கிறார். பிரதீபா நர்சிங் படித்தவர். சிறு வயது முதலே மலர் தோட்டங்கள் மீது பிரதீபாவுக்கு ஈர்ப்பு இருந்திருக்கிறது. கணவர் விவசாய பின்னணியை கொண்டவர் என்பதால் அவரது துணையுடன் வீட்டு மொட்டை மாடியையே மலர் தோட்டமாக மாற்றிவிட்டார்.

``நான் பள்ளிப்பருவத்தில் என் வீட்டில் பூச்செடிகளை நடுவதற்கும், அதனை பராமரிப்பதற்கும் நேரத்தை செலவிட்டேன். நர்சிங் படிப்பதற்கு வெளியூரில் தங்க வேண்டி இருந்தது. ஆனால் என் மனம் வீட்டையும், செடிகளையுமே பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தது. திருமணத்திற்கு பிறகு வீட்டில் சிறிய அளவில் செடி வளர்த்து கொண்டிருந்தேன். கணவர் நாடு திரும்பியதும் செடி வளர்ப்பையே வருமானமாக மாற்றுவதற்கு முடிவு செய்தோம். அது மலர் தோட்டமாக உருமாற வைத்துவிட்டது. ஆரம்பத்தில் பத்து மணி பூ எனப்படும் டேபிள் ரோஸ் செடியைத்தான் வளர்த்தோம். அதை விட தாமரை மலர்களை பலரும் நாடியதால் தாமரை செடி வளர்க்க தொடங்கினோம். தாமரை செடிகளை மகரந்த சேர்க்கைக்கு உட்படுத்தி அதிக வகைகளை உருவாக்குகிறோம். இப்போது எங்கள் மொட்டை மாடியில் 100-க்கும் மேற்பட்ட தாமரைகள் பூத்துக் குலுங்குகின்றன. அவை வித்தியாசமான மலர்களாக இருப்பதால் ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள்.

எங்களிடம் 'சஹஸ்ரதள பத்மம்' எனப்படும் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை செடி இருக்கிறது. இது மிகவும் அரிதான ரகம். தொட்டியுடன் தாமரை செடியை ரூ.750 முதல் ரூ.3,500 வரை விற்கிறோம். தாமரை சாகுபடி மூலம் மாதம் 30 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுகிறோம்'' என்கிறார்.

பிரதீபா-பினோய் ராஜ் தம்பதியர் 60 வகையான அல்லி மலர் செடிகளையும் வளர்க்கிறார்கள். மேலும் பல்வேறு வகையான மலர் செடிகளையும் சாகுபடி செய்கிறார்கள். ஓணம் சீசனில், சுமார் 50 கிலோ சாமந்தியை விற்பனை செய்துள்ளனர். காய்கறிகளையும் பயிரிடுகிறார்கள். வேளாண் துறையிடம் இருந்து சிறந்த விவசாயிகள் என்ற பட்டத்தையும் பெற்றிருக்கிறார்கள்.


Next Story