படிக்கட்டுகளில் ஏறுவதால் பலம் பெறும் இதயம்


படிக்கட்டுகளில் ஏறுவதால் பலம் பெறும் இதயம்
x

அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் என உயரமான கட்டுமானங்களை கொண்ட இடங்களுக்கு செல்லும்போது பலரும் லிப்ட், எஸ்கலேட்டர் பயன்படுத்துகிறார்கள். முதல் தளத்திற்கு செல்வதற்கு கூட லிப்ட் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். நவீன சாதனங்களால் உடல் உழைப்பு குறைந்து கொண்டிருக்கும் நிலையில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தொழில்நுட்ப சாதனங்களை சார்ந்திருப்பது உடல் நலனை பலவீனப்படுத்திவிடும்.

சமீப காலமாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்கள் சார்ந்த பிரச்சினைகள் விஸ்வரூபமெடுத்துக்கொண்டிருக்கின்றன. வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது வேகமான நடைப்பயிற்சி மற்றும் ஜாகிங் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வது இதயத்தின் ஆயுளை அதிகரித்து உடலை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

தினமும் நடைப்பயிற்சிக்குச் செல்ல போதிய நேரம் இல்லாவிட்டாலும், ஏதாவதொரு வகையில் உடல் இயக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பது கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்த அபாயத்தை குறைக்கும். அதற்கான வழிகளில் ஒன்றாக, படிக்கட்டுகளை தேர்ந்தெடுக்கலாம். லிப்ட், எஸ்கலேட்டர் போன்றவற்றை தவிர்த்து படிக்கட்டுகளை பயன்படுத்துவது பல்வேறு வகைகளில் இதயத்திற்கு பலன் அளிக்கும். அது குறித்து பார்ப்போம்.

இதயத் துடிப்பு

நீங்கள் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கும்போது, தசைகள் வேலை செய்ய அதிக ஆக்சிஜன் தேவைப்படும். அதன் தேவையை பூர்த்தி செய்ய இதய துடிப்பு அதிகரிக்க தொடங்கும். அதனால் இதயம் ரத்தத்தை வேகமாக பம்ப் செய்யும். அப்போது தசைகளுக்கு ஆக்சிஜன் மட்டுமின்றி ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

ஆற்றல்

படிக்கட்டுகளில் நடக்க தொடங்கியதும் இதய துடிப்பு ஒவ்வொரு முறை அதிகரிக்கும்போதும் இதயத்தின் தசை சுவர்கள் அதிக அளவு ரத்தத்தை அழுத்துவதற்கு அதிக ஆற்றலுடன் சுருங்குகின்றன. இப்படி அதிக ஆற்றல் வெளிப்படுவது கால் தசைகள் உள்பட உடலின் திசுக்களுக்கு போதுமான ரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவும்.

ரத்த நாளங்கள்

படிக்கட்டு ஏறும்போது ரத்த ஓட்டத்திறன் அதிகரிக்கும். அது ரத்த நாளங்கள் விரிவடைவதற்கு வித்திடும். உடல் முழுவதும் ரத்த ஓட்டத்திற்கான தேவை பூர்த்தி செய்யப்படும். இதனால் மற்ற சமயங்களில் ரத்த ஓட்டம் எளிதாக நடப்பதற்கு வழி செய்கிறது. தசைகளுக்கு போதுமான ரத்தம் கிடைப்பதையும் உறுதி செய்கிறது.

ரத்த ஓட்டம்

ஒரு நிமிடத்திற்கு இதயம் பம்ப் செய்யும் ரத்தத்தின் அளவு 'கார்டியாக் அவுட்புட்' என குறிப்பிடப்படுகிறது. படிக்கட்டு ஏறும்போது இதயம் பம்ப் செய்யும் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். உடலின் ஆக்சிஜன் தேவையையும் பூர்த்தி செய்துவிடும். உடல் உறுப்புகள் அனைத்திற்கும் ரத்தம் சென்றடைவதை உறுதி செய்வதாகவும் அமைந்துவிடும்.

காற்றில் இருந்து ஆக்ஸிஜனைப் பிரித்தெடுத்து ரத்த ஓட்டத்தில் கலக்க செய்வதற்கு நுரையீரல் கடினமாக உழைக்கிறது. இந்த ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் பின்னர் இதயத்தால் பம்ப் செய்யப்பட்டு தசைகளுக்கு செலுத்தப்படுகிறது. இது உடல் செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றலை உருவாக்க பயன்படுகிறது.

ரத்த உறைவு

படிக்கட்டு ஏறுவதும் கார்டியாக் உடற்பயிற்சிகளின் ஒரு அங்கம்தான். தசை வலிமையை அதிகரிக்க செய்யும். எலும்புகளை வலுப்படுத்தும். மேலும் படிக்கட்டுகளில் ஏறும்போது உடலில் கலோரிகள் எரிக்கப்படும்.

படிக்கட்டு போன்ற பயிற்சியின் காரணமாக இதயத் துடிப்பு அதிகரிக்கும். அப்போது தமனிகளின் சுவர்களை தளர் வடைய செய்யும். வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளை ரத்தக்குழாயில் அடைப்பதை தடுக்கும். அதனால் ரத்த உறைவு பிரச்சினை தவிர்க்கப்படும்.


Next Story