குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டுபவர்!


குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டுபவர்!
x
தினத்தந்தி 28 May 2023 8:00 PM IST (Updated: 28 May 2023 8:00 PM IST)
t-max-icont-min-icon

பெரியவர்கள் மட்டுமின்றி, சிறு குழந்தைகள் கூட, ‘ஜங்க் புட்’ கலாசாரத்தில் சிக்கி தவிக்கிறார்கள். இது, எதிர்கால சந்ததியினரின் உடல் ஆரோக்கியத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்’’ என்று ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைக்கிறார், சென்னையைச் சேர்ந்த ஜனனி சுப்புராஜ்.

''ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, முறையான உணவு பழக்க வழக்கங்கள் அவசியம். ஆனால் அதை பின்பற்ற முடியாமல் பரபரப்பான வாழ்க்கைக்கு ஏற்ப, ஆரோக்கியம் இல்லாத வெற்றுணவுகளை (ஜங்க் புட்) அதிகம் உட்கொள்கிறோம். பெரியவர்கள் மட்டுமின்றி, சிறு குழந்தைகள் கூட, 'ஜங்க் புட்' கலாசாரத்தில் சிக்கி தவிக்கிறார்கள். இது, எதிர்கால சந்ததியினரின் உடல் ஆரோக்கியத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்'' என்று ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைக்கிறார், சென்னையைச் சேர்ந்த ஜனனி சுப்புராஜ்.

இளம் இயற்கை மருத்துவர், யோகா பயிற்றுனர், கர்ப்ப கால வழிநடத்துனர்... இப்படி பல்வேறு அடையாளங்களை கொண்டிருக்கும் ஜனனி, ஊட்டச்சத்து துறையிலும் நிபுணத்துவம் பெற்றவர். பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை மீட்டெடுத்தல், சமச்சீர் உணவு குறித்த விழிப்புணர்வுகளை வழங்குதல், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவு ஆலோசனை வழங்குதல்... என இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக, 'ஜங்க் புட்' உணவுகளுக்கு எதிரான இவரது விழிப்புணர்வு வீடியோக்கள், சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி இருக்கின்றன.

அவரிடம், ஊட்டச்சத்து உணவுகள் பற்றியும், குழந்தைகளிடம் நிலவும் ஜங்க் புட் கலாசாரத்தை மாற்றுவது குறித்தும் சில கேள்விகளை முன்வைக்க, சூடாகவும், சுவையாகவும் பதிலளித்தார். அவை இதோ....

* நாம் உண்ணும் உணவும், நடைமுறையில் இருக்கும் உணவு பழக்க வழக்கமும் சரியானதா?

நம்முடைய முன்னோர்கள் பின்பற்றிய உணவு பழக்க வழக்கங்கள் சரியானதாகவும், ஆரோக்கிய வாழ்க்கைக்கு சிறப்பானதாகவும் இருந்தது. ஆனால், இப்போது உணவு குறித்த விழிப்புணர்வுகள் அதிகமாக இருந்தாலும், அவை அனைத்தும் குழப்பம் நிறைந்தவையாகவும், தவறான உணவு பழக்கவழக்கத்திற்கு பாதை அமைத்து கொடுப்பதாகவும் அமைந்திருக்கின்றன. சமூக வலைத்தளங்களில், உலா வரும் தகவல்களை காரணம்காட்டி, குறிப்பிட்ட சத்து அடங்கிய உணவுகளை ஒட்டுமொத்தமாக ஒதுக்குவதும், 'டயட்' என்ற பெயரில், ஒருசில உணவுகளை மட்டுமே உட்கொள்வதும் என தவறான உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கிறோம். சிலருக்கு, சாப்பிடுவதுகூட மன அழுத்தமான விஷயமாக மாறியிருக்கிறது. உடல் எடை அதிகரித்துவிடக்கூடாது என்ற கவலையிலேயே பலரும் உணவு உட்கொள்கிறார்கள். இது மன அமைதியை சீர்குலைத்து, ஹார்மோன் சமநிலையையும் பாதிக்கிறது.

* உணவு பழக்க வழக்கங்களில் என்னென்ன தவறுகள் செய்கிறோம்?

மேற்கத்திய உணவு கலாசாரத்தினால் நம் மண்ணுக்கும், மரபுக்கும் தொடர்பில்லாத உணவு வகைகளையும், பழம் மற்றும் காய்கறி வகைகளையும் உட்கொள்வது, மிகப்பெரிய தவறு. மேலும் நம் முன்னோர்களின் உணவு பழக்கத்தில் இருந்து மாறுபட்டு, விருப்பத்திற்கு ஏற்ப உணவு சமைத்து உண்பதும், தவறான செயல்பாடுகள். உதாரணத்திற்கு, தயிரில் ஊறவைத்த பழைய சோறும், ஆவியில் அவித்து எடுத்த இட்லியும், கூழ் வகைகளும்தான் தமிழ்நாட்டின் பாரம்பரிய 'பிரேக் பாஸ்ட்'. ஆனால் இன்று எண்ணெய்யில் சுட்டு எடுத்த தோசை, பூரி, நூடுல்ஸ் ஏன்...? புரோட்டா, பிரியாணி கூட நவீன கால 'பிரேக் பாஸ்ட்' வகைகளில் இணைந்திருக்கின்றன.

அதேபோல, நம் முன்னோர்கள் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாகவே இரவு உணவை உண்டு முடித்துவிடுவார்கள். ஆனால் இன்று, நள்ளிரவு 2 மணிக்கு கூட பிரியாணி உண்ணும் பழக்கம் டீன்-ஏஜ் வயதினருக்கு உண்டு.

* 'ஜங்க் புட்' உணவு பழக்கம், சிறு குழந்தைகள் வரை வேரூன்றி இருக்கிறதே. அவை எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும்?

வீட்டில் சமைக்கப்படாமல் கடைகளில் வாங்கி சுவைக்கப்படும் பாக்கெட் மற்றும் பாட்டில் உணவு பொருட்களைதான் ஜங்க் புட் என்கிறோம். ஒருசில துரித உணவுகளும், ஜங்க் புட் பட்டியலில் வரும். பெரும்பாலான பாக்கெட் உணவுகளில், கார்போஹைட்ரேட் மற்றும் அளவிற்கு அதிகமான சர்க்கரை நிறைந்திருக்கிறது. இவை இரண்டுமே, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்றன. கண்ணை கவரும் வண்ணங்களில், குழந்தைகளின் ஆசையை தூண்டும்படியாகவே ஜங்க் புட் உணவுகளும் விளம்பரம் செய்யப்படுகின்றன. குழந்தைகளே விரும்பி கேட்டாலும், அதை மெல்ல மெல்ல குறைத்துவிடுங்கள். இல்லையேல், வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிக் சிண்ட்ரம்), அதிக உடல் பருமன் (ஒபிசிட்டி) மற்றும் சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

* குழந்தைகளுக்கு, ஆரோக்கியமான உணவு வழங்குவது எப்படி?

குழந்தைகளுக்காக இந்த வாரம் என்ன சமைக்க இருக்கிறோம், என்னென்ன காய்கறிகளை பயன்படுத்த இருக்கிறோம்... என்ற திட்டமிடல் இருந்தாலே போதும், ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கிய உணவுகளை சமைக்க ஆரம்பித்துவிடுவீர்கள். மேலும் குழந்தைகள், ஒருகுறிப்பிட்ட பழம், காய்கறிகளை உண்ண மறுத்தால், அதை வேறுவிதமாக சமைத்து கொடுங்கள். பழமாக சாப்பிடாத குழந்தைகளுக்கு புரூட் சாலட்டாக்கி கொடுங்கள். காய்கறிகளை கூட்டு, பொரியல் ஆக சமைத்து கொடுக்கலாம். இல்லையேல், ஜூஸ் ஆக மாற்றி பருக கொடுக்கலாம். குழந்தைகளுக்கு வண்ணமயமான உணவு பிடிக்கும் என்பதால், பலதரப்பட்ட வண்ணங்களில் உணவு படைக்கலாம்.

* குழந்தைகளிடம் இருக்கும் ஜங்க் புட் உணவு பழக்கத்தை எப்படி மாற்றுவது?

தடாலடியாக மாற்றிவிட முடியாது என்றாலும், நல்ல பழக்கத்தை கற்றுக்கொடுத்து, ஜங்க் உணவு பழக்கத்தை குறைக்கலாம். குழந்தைகள் விரும்பும் ஜங்க் உணவுகளுக்கு மாற்றான ஆரோக்கிய உணவு எது என்பதையும், அவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு எது என்பதையும் கண்டறிந்து... ஜங்க் உணவுகளுக்கு மாற்றாக, அதை உண்ண கொடுங்கள். முக்கியமாக, காய்கறி, பழம், பயிறு வகைகளை சாப்பிட பழக்கினாலே, ஜங்க் உணவு பழக்கம் குறைந்துவிடும்.

* ஆரோக்கியமாக வாழ என்னென்ன செய்ய வேண்டும்?

நேரத்திற்கு உணவு உண்ணுங்கள். மண்ணுக்கும், மரபுக்கும் தொடர்புடைய உணவுகளை அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள். அந்தந்த பருவ காலத்தில் விளையும் காய்கறிகளையும், பழங்களையும் கட்டாயம் உட்கொள்ளுங்கள். முடிந்தவரை, எல்லாவற்றையும் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இது பிடிக்காது, அது பிடிக்காது என உணவுகளை ஒட்டுமொத்தமாக ஒதுக்காதீர்கள். பிடிக்காத உணவுகளையும் அளவாக சேர்த்து கொள்ளுங்கள். நிதானமாக உணவு உட்கொள்ளுங்கள்.

* பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, எப்படி சத்தான உணவு கொடுப்பது?

வீட்டில் இருக்கும் வரை குழந்தைகளுக்கு, தேவையானவற்றை நம்மால் சமைத்து கொடுக்க முடியும். ஆனால் பள்ளி செல்ல தொடங்கிவிட்டால், பிடித்ததை கேட்டு வாங்கி சாப்பிடும் வாய்ப்பு குறைந்துவிடும். இருப்பினும், அவர்களுக்கு விதவிதமான உணவுகளை கொடுத்துவிடுவதன் மூலம், அவர்களது தேவையை பூர்த்தி செய்ய முடியும். அதாவது, தயிர் சாதம் மட்டும் மதிய உணவாக கொடுத்துவிடுவதற்கு பதிலாக, கொஞ்சம் தயிர்சாதம், 2 ராகி பிஸ்கட், ஒரு ஆப்பிள் (அவர்கள் விரும்பும் பழம்), சுண்டல் அல்லது பயறு... இப்படி பலவகையான உணவு கொடுக்கும்போது, அவர்களது வயிறும் நிரம்பிவிடும், சத்தும் கிடைத்துவிடும்.

* குழந்தைகளுக்கு, இந்த கோடை காலத்தில் என்னென்ன உணவுகளை தவிர்க்கலாம்? எதை கொடுக்கலாம்?

இன்ஸ்டென்ட் மிக்ஸ் என்ற பெயரில் வரும் குளிர்பான பொடி, குளுக்கோஸ் என்ற மாயத்தோற்றத்தில் இருக்கும் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு வீட்டிலேயே குளிர்பானங்களை தயாரியுங்கள். லெமன் ஜூஸ்ஸில் தொடங்கி, உயர் ரக பழங்கள் வரை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஜூஸ் தயாரிக்கலாம். வீட்டில் தயிர் தயாரித்து அதில் சர்க்கரை கலந்து லஸ்ஸியாக பருக கொடுக்கலாம். இல்லையேல், தயிருடன் உலர் திராட்சை கலந்து கொடுக்கலாம். இஞ்சி, சீரகம், கொத்தமல்லி சேர்த்து மோர் தயாரித்து கொடுக்கலாம். சர்பத், கோல்ட் காபி... என வீட்டிலேயே கோடை உணவுகளை செய்து அசத்தலாம்.


Next Story