சோப்பில் அலங்கார பொருட்கள் வடிக்கும் கல்லூரி மாணவி
கழிவு பொருட்களை தூக்கி வீசாமல் உபயோகப்பொருளாக மாற்றும் புதுமையான முயற்சியில் இளையதலைமுறையினர் சிலர் அசத்துகிறார்கள்.
வீட்டை அழகுபடுத்தும் அலங்கார பொருட்களாகவும், மனதுக்கு இதமாகவும், மகிழ்ச்சியாகவும் இந்த புதுமையான முயற்சி இருப்பதாக பெருமையோடு கூறுவதை கேள்விப்பட்டிருப்போம்.
அதிலும் வித்தியாசமாக கழிவு பொருட்களோடு வீட்டில் குளிக்க பயன்படுத்தும் நறுமண சோப்பில் விதவிதமான அலங்கார பொருட்களை தன்னுடைய கைவண்ணத்தில் உருவாக்கி பிரமிக்க வைக்கிறார், ஒரு கல்லூரி மாணவி. ஆம்! அந்த கலைநயத்தை பற்றி அறிந்து கொள்ள மாணவி பவித்ராவை சந்தித்து பேசினோம்.
தன்னுடைய புதிய முயற்சியை வெளி உலகுக்கு தெரியப்படுத்துவதில் அவருக்கு இருந்த அக்கறை அதிலே தென்பட்டது. இந்த கலை ஏதோ ஒரு வகையில் மனதுக்கு இதமாகவும், பூரிப்பாகவும் இருப்பதாக கூறி முதலில் பேச்சை தொடங்கினார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வரும் அவருக்கு வயது 20. அவருடைய தந்தை சிவசுப்பிரமணியன் (50), தாய் ஜெயலட்சுமி (42). நாகர்கோவில் கிறிஸ்தவக் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வரும் அவர், நம்முடைய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
* கழிவை உபயோக பொருளாக மாற்றுவார்கள். அதென்ன நறுமண சோப்பில் புதிய முயற்சி?
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள ஜோசப் கான்வென்ட் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தேன். 6-ம் வகுப்பு படிக்கும் போதே ஓவியங்கள் வரைவதும், சின்ன வண்ண பேப்பரில் மலர்கள் செய்து ரசிப்பதும் எனக்கு பொழுது போக்காக இருந்தது. குறிப்பாக அதிக அளவில் சாமி படங்களை ஓவியங்களாக வரைந்து உள்ளேன். அதில் லட்சுமி, கிருஷ்ணர், முருகர் மற்றும் யானை படங்கள் அடங்கும். இது மனதுக்கு ஏதோ ஒரு சந்தோஷத்தை தந்தது.
படங்களை தோழிகளிடம் காட்டி 'எப்படி இருக்கிறது' என கேட்பேன். அவர்கள் ஆசிரியர்களிடம் காட்டுவார்கள். அந்த நேரத்தில் என்னை பாராட்டும்போது ஏதோ சாதித்த உணர்வு ஏற்பட்டது. இதுபோக பள்ளியில் தோழிகளின் பிறந்த நாள் வந்தால் அவர்களின் உருவப்படங்களை வரைந்து பரிசாக கொடுத்து அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவேன். இவ்வாறு தான் படிப்புக்கு இடையே எனது புதுமையான பயணம் தொடங்கியது. அதுவே நாளடைவில் வீட்டில் தென்படும் பொருட்களை பயனுள்ளதாக மாற்றும் வித்தையை கற்று கொடுத்தது.
* சோப்பில் கலைபொருட்கள் உருவானது எப்போது?
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென ஒருநாள் நறுமண சோப்பில் ஏதாவது செய்யலாம் என மனதில் தோன்றியது. உடனே நறுமண சோப்பில் புத்தர் சிலையை செய்ய தொடங்கினேன். எனக்கு புத்தரை ரொம்ப பிடிக்கும். எனவே முதலில் அவரது சிலையை உருவாக்கலாம் என முடிவெடுத்து வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக செய்ய தொடங்கினேன். இறுதியில் 3 வாரங்கள் கடந்து நான் நினைத்தப்படியே அழகான புத்தர் சிலையை வடிவமைத்தேன். இது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஏதோ பெரிய சாதனை புரிந்தது போல் எனது மனதுக்கு தோன்றியது. அதே சமயத்தில் இதற்கென்று எதுவும் தனியாக பயிற்சி எதுவும் எடுக்கவில்லை.* சோப்பில் கலை வடிவம் படைக்கும் திறமை எங்கிருந்து வந்தது?
தாய், தந்தையிடம் இருந்து இந்த கலை திறமை வந்திருக்கலாம் என நினைக்கிறேன். தந்தை சிவசுப்பிரமணியன், நகை தொழிலாளி. ஆபரண நகைகளை மிக நேர்த்தியாக செய்வார். தாய் ஜெயலட்சுமி வீட்டில் துணிகள் தைத்து கொடுப்பார். நகை, துணிகளை வடிவமைப்பதில் சிறந்தவர்களான அவர்களுக்கு மகளாக பிறந்ததால் அதே திறமை எனக்குள் புகுந்திருக்கலாம்.
* வேறு என்ன செய்திருக்கிறீர்கள்?
சோப்பில் புத்தர் சிலை செய்த பிறகு வெள்ளை நிற சோப்பில் விநாயகர் சிலை, ஆமை, மீன், பூ உருவாக்கினேன். இந்த வடிவத்தை உருவாக்க கத்தியை உளியாக பயன்படுத்தினேன். இது தான் எனது கலைக்கு பிரதான ஆயுதம். சோப்பின் வாசனையும் நறுமணமாக இருக்கும். இதுவும் எனக்கு ஒவ்வொரு பொருளாக உருவாக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனை வீட்டில் அலங்கார பொருட்களாக வைத்துள்ளேன். இதனால் வீட்டுக்குள் எப்போதும் நறுமணம் வீசியபடி இருக்கும். இதுபோல் பிற பொருட்களிலும் திறமையை வெளிப்படுத்த தொடங்கினேன்.
* பிரியாணி அரிசியில் ஓவியம் தீட்டுவது பற்றி?
கோவில் திருவிழா மற்றும் கடற்கரைக்கு நண்பர்களுடன் செல்லும்போது அரிசி, சாக்பீஸில் பெயர்கள் எழுதுவதை பார்த்து சாக்பீஸில் ஏதாவது செய்யலாம் என தோன்றியது. இதையடுத்து ஒரு பாக்ஸ் சாக்பீஸ் வாங்கினேன். அதில் பெயர்கள் எழுத ஆரம்பித்தேன். ஆனால் ஆரம்பத்தில் அவை உடைந்து நொறுங்கியது. இவ்வாறு ஒரு பாக்ஸ் சாக்பீஸ் முழுவதும் சிதைந்து போனது. ஆனால் முயற்சியை கைவிடாமல் கொஞ்சம் நேரம் ஒதுக்கி மீண்டும் முயற்சி செய்தேன். இறுதியில் சாக்பீஸில் பெயர் எழுதும் பழக்கம் வந்தது. இதுபோல் பொன்னி அரிசி, பிரியாணி அரிசி போன்றவற்றில் பெயர்கள் எழுதுவது, ஓவியம் வரைவது போன்ற செயல்களில் ஈடுபட்டேன். பிரியாணி அரிசி நீளமாக இருப்பதால் பெயர், ஓவியம் வரைவது சுலபமாக இருந்தது.
* கழிவை உபயோகப்பொருளாக மாற்றியது எப்படி?
உணவு பொருளில் விலை உயர்ந்தவையான பிஸ்தாவை எல்லோரும் சாப்பிட்டு விட்டு அதன் தோடை தூக்கி எறிந்துவிடுவோம். தோடு திடமாக இருக்கும். நான் அதை வைத்து என்ன செய்யலாம் என யோசித்த போது நெயில்பாலீஸ் வைத்து வண்ணம் தீட்டலாம் என தோன்றியது.
அதன்படி வண்ணம் தீட்டியபோது நன்றாக இருந்தது. குறிப்பாக மலர்கள், எலி, படகு, மீன்கள், வண்டுகள், பறவைகள், சிங்கம் போன்ற ஓவியங்கள் வரைந்தேன்.
ஒவ்வொரு பொருட்கள் செய்யும்போதும் அது முழுமை அடைந்ததும் பெரிய சிகரத்தை தொட்டு ஏதோ சாதனை புரிந்தது போல் தோன்றும். மேலும் வண்ண உல்லன் துணியில் பவுச், வாசல் அலங்கார தோரண மலர்கள், தேங்காய் சிரட்டையில் சின்ன பழக்கூடை போன்றவை செய்துள்ளேன்.
இதுதவிர வெள்ளை பேப்பரில் காகித பொம்மைகள் செய்ய தோன்றியது. குங்குமச் சிமிழ், மினியன், கிட்டி, பாண்டா கரடி, காகித பெண் பொம்மை, மினியன் பொம்மைகளை உருவாக்கினேன். அதில் மினியன் பொம்மையை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் முதலில் சிறிது சிறிதாக பேப்பரை வெட்டி பசை தடவி சுற்றி, சுற்றி ஒட்டி பொம்மை செய்தேன். பசை காயும் வரை கையில் வைத்திருப்பேன். இது ரொம்ப கஷ்டமாக இருக்கும். இவ்வாறாக என்னுடைய புதுப்புது முயற்சியால் உருவான பொக்கிஷம் வீட்டை அலங்கரிப்பதோடு, ஏதோ சாதித்த திருப்தியை தருகிறது. மனதுக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.