எவரெஸ்ட் சிகரம் ஏறிய தாய் - மகள்


எவரெஸ்ட் சிகரம் ஏறிய தாய் - மகள்
x

எவரெஸ்ட் சிகரத்தின் அடிப்படை முகாம் வரை ஏறி சாதனை படைத்த இளம் இந்திய சிறுமி என்ற பெருமையை பெற்றுள்ளார், அரிஷ்கா லத்தா. 6 வயதாகும் இவர் மகாராஷ்டிரா மாநிலம் புனே அடுத்துள்ள கோத்ருட் பகுதியைச் சேர்ந்தவர். தனது தாயார் டிம்பிள் லத்தா துணையுடன் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

இருவரும் 15 நாட்களில் 17,500 அடி உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தின் அடிப்படை முகாம் பகுதிக்கு சென்றடைந்திருக்கின்றனர். சுமார் 130 கி.மீ. தூரம் பயணித்து இலக்கை எட்டிப்பிடித்திருக்கிறார்கள். செல்லும் வழியில் பல்வேறு இடர்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவிய சூழலிலும் குளிரை பொருட்படுத்தாமல் பயணித்திருக்கிறார்கள்.

மைனஸ் 17 டிகிரி வெப்பநிலையையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். சிறுமி அரிஷ்கா கடும் குளிரை தாங்கிக்கொள்வதற்கு ஏதுவாக 7-8 அடுக்கு கொண்ட ஆடைகளை அணிந்திருக்கிறார். ''அங்கு குளிர் அதிகமாக இருந்தது. ஆனாலும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு ஆர்வமாக இருந்தேன். செல்லும் வழியில் யாக், மூலே போன்ற விலங்குகளை பார்த்தோம். எங்கள் பயணம் இனிமையாக அமைந்தது. மகிழ்ச்சியை உணர்ந்தேன்'' என்கிறார்.

சிறுமி அரிஷ்காவுக்கு அவரது தாயார் டிம்பிள் பக்கபலமாக இருந்து வழிகாட்டி உள்ளார். ''என் மகள் சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் காண்பிக்க தொடங்கிவிட்டாள். சைக்கிள் ஓட்டுதல், மலையேற்ற பயணங்கள் மேற்கொள்ளுதல், ஓடுதல் போன்ற பயிற்சிகளில் ஆர்வமாக ஈடுபடுவாள். அவளை எவரெஸ்ட் சிகரத்தின் அடிப்படை முகாமுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தது எதிர்பாராதது.

என் மகள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பாள். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் புனேவை சுற்றியுள்ள கோட்டைகளுக்கு செல்வோம். அங்கு கோட்டையின் உச்சி பகுதிகளுக்கு ஏறி செல்வதே சிறந்த பயிற்சியாக அமைந்தது. அதனால் தைரியமாக எவரெஸ்ட் சிரகம் ஏறுவதற்கு முடிவு செய்தோம்'' என்கிறார், டிம்பிள் லத்தா.

தனது மகளுக்கு தொழில் ரீதியாக பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் டிம்பிள் தெரிவித்துள்ளார். ``அவள் இன்னும் நன்றாக பயிற்சி பெற்றதும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி பகுதிக்கு செல்ல திட்டமிடுவோம். மகளுடன் சேர்ந்து நானும் தயாராகிவிடுவேன்'' என்றும் சொல்கிறார்.

அரிஷ்காவின் தந்தை கவுஸ்துப் லத்தாவும் மகளுக்கு ஊக்கம் கொடுத்து வருகிறார். ''என் மகள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவளுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு. ஆரம்பத்தில் சவாலாக இருந்ததால் நாங்கள் கவலைப்பட்டோம்.ஆனால் அவளும், அவளது தாயும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதில் உறுதியாக இருந்தனர்'' என்கிறார்.


Next Story