35 லட்சம் மாணவர்கள் உயர்கல்வியை தொடராத அவலம்


35 லட்சம் மாணவர்கள் உயர்கல்வியை தொடராத அவலம்
x

35 லட்சம் மாணவர்களில் பெரும்பான்மையினர் உயர்கல்வி செல்லவில்லை எண்ற அதிர்ச்சி தகவலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் பலர் உயர் கல்வி பயிலாத நிலை ஆண்டுதோறும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 2021-2022-ம் கல்வி ஆண்டில் 10 வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் 35 லட்சம் மாணவர்கள் 11-ம் வகுப்புக்கு செல்லவில்லை எண்ற அதிர்ச்சி தகவலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் 27 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வில் தோல்வி அடைந்திருப்பதாகவும், 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 35 லட்சம் மாணவர்களில் பெரும்பான்மையினர் உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான், கர்நாடகா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம், ஹரியானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 11 மாநிலங்களை சேர்ந்தவர்கள். இவர்களில் 85 சதவீதம் பேர் கல்வியை தொடராத நிலை இருக்கிறது. அதாவது இந்த 11 மாநிலங்களில் மட்டுமே 30 லட்சம் பேர் 11-ம் வகுப்புக்கு செல்லவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதிலும் 50 சதவீதம் பேர் சி.பி.எஸ்.சி. மற்றும் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்காளம் ஆகிய கல்வி வாரியங்களில் படித்தவர்கள். மீதமுள்ள மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள 55 கல்வி வாரியங்களில் பயின்றவர்கள். அதேவேளையில் பள்ளி உயர் கல்வி தேர்வுகளில் கேரளாவில் 99.85 சதவீதம் வரை தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இந்தியாவில் மூன்று மத்திய கல்வி வாரியங்கள் உள்ளன. அவை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி), இந்தியப் பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ) மற்றும் தேசிய திறந்தவெளிப் பள்ளிக்கல்வி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்). இவை தவிர, பல்வேறு மாநிலங்கள் தனித்தனியே கல்வி வாரியங்களைக் கொண்டுள்ளன.

அவற்றின் அடிப்படையில் நாடு முழுவதும் சுமார் 60 பள்ளி கல்வி வாரியங்கள் உள்ளன. மாநில கல்வி வாரியங்களில் படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் தேர்வில் தோல்வி அடைவதற்கு ஆசிரியர்-மாணவர் விகிதம் சீரான நிலையில் இல்லை என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது. மத்திய கல்வி வாரியங்களில் மாணவர்களின் தோல்வி விகிதம் 5 சதவீதமாக உள்ளது.

தாய்மொழி வழி கல்வியை அடிப்படையாக கொண்ட மாநில கல்வி வாரியங்களில் தோல்வி விகிதம் 16 சதவீதமாக இருக்கிறது. 10-ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே தேசிய திறந்தநிலைப் பள்ளிக்கல்வி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்) மூலம் தேர்வு எழுதுகின்றனர்.

இந்த தேர்விலும் 47 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை தேர்ச்சி பெறாத நிலையே நீடிக்கிறது. மாநில கல்வி வாரியங்களில் பாடத்திட்டம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதையும் மத்திய கல்வி அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்திட்டங்கள் வெவ்வேறாக இருப்பதால் கியூட், ஜே.இ.இ, நீட் போன்ற நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்கள் தயங்குகிறார்கள் என்பது கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமாரின் கருத்தாக இருக்கிறது.

அதனால் ஜே.இ.இ, நீட் போன்ற பொதுத் தேர்வுகளுக்கு அனைத்து மாநில மாணவர்களும் தயாராகும் வகையில், மாநில கல்வி வாரியங்களின் அறிவியல் பாடத்திட்டத்தை மத்திய வாரியங்களுடன் இணைக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


Next Story