உலக தொழிலாளர் தினம்


உலக தொழிலாளர் தினம்
x

தொழிலாளர் வர்க்கத்தின் சாதனைகளைக் கொண்டாடுவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நாள் ‘சர்வதேச தொழிலாளர் தினம்’ அனுசரிக்கப்படுகிறது.

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை பற்றி விழிப்புடன் இருக்கவும், சுரண்டலில் இருந்து தங்களை பாதுகாக்கவும் இந்த தினம் அவர்களை ஊக்குவிக் கிறது. இந்த நாள் தொழிலாளர் வர்க்கத்தின் கடின உழைப்பு மற்றும் சாதனைகளை, அவர்களின் வரலாற்றுப் போராட்டங்களையும் போற்றுகிறது.

அமெரிக்காவில் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் வேலை செய்யும்படி, தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். முதலாளிகளின் இந்த சுரண்டலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு நாளில் எட்டு மணிநேரம் மட்டுமே வேலை என்ற கோரிக்கை எழுந்தது. சிகாகோவில் 1886-ம் ஆண்டு ஹேமார்க்கேட் என்ற இடத்தில் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு, இந்த கோரிக்கையை வலியுறுத்தி அமெரிக்காவில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்தது. இந்த போராட்டத்தில் 3.5 லட்சம் பேர் பங்கேற்றனர். முறையான ஊதியம் மற்றும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர். இந்த போராட்டத்தில் பலர் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.

பின்னர் சிகாகோவில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் எட்டு மணி நேர வேலை என்பது, அதிகாரப்பூர்வ வேலை நேரமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் முதன் முதலில், சிங்காரவேலர் என்பவரால் 1923-ம் ஆண்டு முதல் தொழிலாளர் தினம் சென்னையில் கொண்டாடப்பட்டது.தொழிலாளர் தினத்தை குறிக்கும் செங்கொடி பயன்படுத்தப்பட்டதும் இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்கா மற்றும் கனடாவில் தொழிலாளர் தினம் செப்டம்பர் மாதம் முதல் திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை அடைவதில் தொழிலாளர்களின் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் சர்வதேச தொழிலாளர் தினத்தை அங்கீகரித்திருந்தாலும், சுமார் 60 நாடுகள் மட்டுமே தொழிலாளர்களின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த நாளை கொண்டாடுகின்றன. 1917 ரஷியப் புரட்சிக்குப் பின்னர் கிழக்குப் பகுதி நாடுகளும், சோவியத் யூனியனும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கின. இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சி காலத்தில், மே தினம் இந்தியாவில் அதிகாரப்பூர்வ தேசிய விடுமுறையாக கொண்டு வரப்பட்டது. தொழிலாளர்களின் உரிமைகளுக்காக வாதிடவும், மற்ற தொழிலாளர்களுடன் ஒற்றுமையாக நிற்கவும், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் சாதனைகளைக் கொண்டாடவும் இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


Next Story